முகப்பு / மனம் மலரும் கதைகள் / தர்மத்தின் பாதை – 2

தர்மத்தின் பாதை – 2

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, ஆட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது.
பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாட்சாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”
.“இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள்.
செல்வந்தர் யோசிக்கிறார். ”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.
அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள். இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பணத்தைக் கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது..
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். *குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.* அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது. “ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்” என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.
அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300,400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம் எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?” என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும். எனவே, மெய்யன்பர்களே! இதைக் கதை என்று பார்க்காமல்,தர்மத்தின் பாதையை உணர வேண்டும்.

About admin

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 1

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன