முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம் – 22

ஆதிசேஷனின் அவதாரம் – 22

‘கோபுர உச்சிக்கு ஏன் செல்கிறார்?’

ஆனாலும் வாய் திறந்து கேட்காமல் மவுனமாய் பின்தொடர்ந்தனர்.

உச்சியை தொட்டிருந்த ராமானுஜர், கீழே தெரிந்த கூட்டத்தை சில நொடிகள் நோக்கிவிட்டு பேச ஆரம்பித்தார்.

“அன்புடைய மக்களே… நான் இப்பொழுது மகாமந்திரம் ஒன்றை உங்களுக்கு உபதேசிக்க போகிறேன். இதை நீங்கள் உச்சரிப்பதன் மூலம் சொர்க்கம் புகுவீர்கள்…”

மக்களின் முகத்தில் ஆனந்தம் தெரிந்தது. கூட்டத்தில் சலசலப்பு கூடியது.

“அய்யா… மகானே… சொல்லுங்கள்… சொல்லுங்கள்…”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ஓம் நமோ நாராயணா… இதை மூன்று முறை உச்சரியுங்கள். நீங்கள் அனைவரும் முக்தி அடைவது உறுதி…” உரக்கக் கூறினார் ராமானுஜர்.

கூட்டம், மீண்டும் மீண்டும் அந்த மகா மந்திரத்தை மகிழ்ச்சி கலந்த குரலில் உச்சரிக்க ஆரம்பித்தது.

அதற்குள் விஷயம், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் காதுகளை அடைந்திருந்தது.

இதுநாள் வரை ரகசியம் காக்கப்பட்ட மகா மந்திரத்தை, இப்படி பொது வெளியில் போட்டு உடைத்துவிட்டாரே…

“உடனே அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜரை…” கத்தினார்.

நம்பிகளின் முகத்தில் தெரிந்த கோபம், அவரது சீடர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. பின்னங்கால் பிடரியை தொட, ராமானுஜரை அழைத்து வர ஓடினார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் நம்பிகளை வணங்கி நின்றார் ராமானுஜர்.

திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவரை ஏறிட்டார். அவரது பார்வையில் நெருப்பு பறந்தது.

“உம்மிடம் நான் கூறியதை நீர் மறந்துவிட்டீரோ…”

“இல்லை சுவாமி… நன்றாகவே நினைவில் இருக்கிறது.”

“அப்படி இருந்தால்… எதற்காக அம்மந்திரத்தை அனைவருக்கும் பிரகடனப் படுத்தினீர். குருவின் வார்த்தையை மீறினால் நரகம் நிச்சயம் என்பதை மறந்திருக்க மாட்டீர் என நினைக்கிறேன்…”

“சுவாமி… நான் ஒருவன் நரகம் புகுந்தாலும். அம்மந்திரத்தை உச்சரிக்கும் அனைவருக்கும் சொர்க்கம் நிச்சயமல்லவா? உலக மக்கள் நலனுக்காக நான் நரகம் போனால்  என்ன தவறு?”

ராமானுஜரின் இந்த பதில் திருக்கோஷ்டியூர் நம்பிகளை சவுக்கால் அடித்தது போல் இருந்தது.

“ராமானுஜா…” ஓடிவந்து அணைத்துக்கொண்டார்.

“நான் சொன்னது தவறா சுவாமி?”

“தவறு என்னிடம்தான் உள்ளது. இந்த நல்ல மனது எனக்கு வராமல் போனதை எண்ணி நான் வெட்கம் கொள்கிறேன்.” வருத்தம் வார்த்தைகளில் வழிந்தது.

பின்னர் அவர் “எம்பெருமானாரே…” என புதிய பெயர் சூட்டி அழைத்து, “மற்றொரு சந்தர்ப்பத்தில் உமக்கு இன்னும் பல ரகஸ்யார்த்தங்கள் சொல்லித்தருகிறேன்” என்றார்.

ராமானுஜரும் அவரை பணிவுடன் வணங்கிவிட்டு தன் இருப்பிடம் திரும்பினார்.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்றுக்கொண்ட ரகசிய ஆழ்பொருள்களை. ஒருவருடம் கழித்து கூரத்தாழ்வாருக்கு உபதேசிப்பதாக கூறினார்.

அதற்கு அவரோ, “நான் இன்னும் ஒரு வருட காலம் உயிரோடு இருப்பேன் என்பது என்ன நிச்சயம்? அதனால் ஆச்சார்யன் மாளிகை முன்பு ஒரு மாத காலம் உபவாசம் இருக்கிறேன், இது ஒரு வருட கைங்கர்யத்துக்கு சமம்” என்றார்.

ராமானுஜர் ஒப்புக்கொள்ள, ஒரு மாத உபவாசம் முடித்தவுடன் உபதேசம் பெற்றுக்கொண்டார் கூரத்தாழ்வார்.

முதலியாண்டானுக்கு இதில்சற்றே மன வருத்தம் இருந்தது. ராமானுஜரிடம் நேரே கேட்டுவிட்டார்.

“சுவாமி… அடியேனுக்கு அந்த ப்ராப்தம் கிடையாதா?”

ராமானுஜர் புன்னகைத்தார்.

“நீ என் உறவினன். ஆகையால் உன்னிடம் இருக்கும் குறைகளும் குற்றங்களும் என் கண்களுக்கு புலப்படாது. ஆகையால் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று இவ்வுபதேசங்களை பெற்று வா…”

முதலியாண்டான், தனது ஆச்சார்யரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு திருக்கோஷ்டியூர் சென்றடைந்தார். அங்கே நம்பிகள், அவரை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ராமானுஜரை போலவே முதலியாண்டானும் பொறுமை காத்தார். அங்கேயே தங்கி ஆறு மாத காலம் நம்பிகளுக்கு பணிவிடை செய்துவந்தார்.

திடீரென ஒருநாள் முதலியாண்டானை ஏறிட்ட நம்பிகள், “நீ ராமானுஜரின் சீடன் தானே?” என்றார்.

“ஆம் சுவாமி. தங்களிடம் ரகஸ்யார்த்தங்களை அறிந்துகொள்ளவே ஆச்சார்யர் இங்கே அனுப்பி வைத்தார்” என்றார் பணிவுடன்.

“ராமானுஜரே உனக்கு உபதேசிப்பார். அவரிடமே அறிந்துகொள்” என முதலியாண்டானை திருப்பி அனுப்பினார்.

அதே நேரம் பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய்க்கு புகுந்த வீட்டின் மூலம் புதிய பிரச்சனை ஒன்று முளைத்திருந்தது. அவளுடைய மாமியார், பிறந்த வீட்டு ஏழ்மையை அவ்வப்பொழுது குத்திக்காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதைப்பற்றி கவலைப்படமாட்டாள் அத்துழாய்.

அன்றைக்கு, நீராட சென்றவள், தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள். ஆனால் அவரோ, “திருமணமாகி வரும்பொழுதே ஒரு சீதன வெள்ளாட்டியையும் (வேலைக்காரி) அழைத்து வந்திருக்க வேண்டியதுதானே.” என எகத்தாளமாக பேசினார்.

அத்துழாய்க்கு அழுகை பீறிட்டது. உடனே பிறந்த வீட்டுக்கு புறப்பட்டுவந்து, தன் தந்தை பெரிய நம்பிகளிடம் விஷயத்தை கூறினாள்.

அவரோ, “இது குறித்து உன் ஜீயர் அண்ணனிடம் கூறு” என்று ஒதுங்கிக் கொண்டார்.

நேரே ராமானுஜரிடம் வந்து அழுது புலம்பினாள். சீதன வெள்ளாட்டி வேண்டும் என்று கண்களை கசக்கினாள்.

அச்சமயத்தில் திருக்கோஷ்டியூர் சென்றுவிட்டு திரும்பிவந்த முதலியாண்டான், நம்பிகள் கூறியதை தெரிவித்தார். அமைதியாய் கேட்டுக்கொண்ட ராமானுஜர், அத்துழாயிடம் திரும்பி, “சீதன வெள்ளாட்டியை அனுப்பிவைக்கிறேன். கவலைப்படாமல் போய் வா…” என்றார்.

அத்துழாய் கண்களை துடைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டாள்.

முதலியாண்டானை அர்த்தத்தோடு நோக்கினார் ராமானுஜர். அவரது முகம் புன்னகை பூத்தது.

“உபதேசிப்பதற்கு முன்னால் உனக்கொரு வேலை காத்திருக்கிறது…”

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன