முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37

அந்த வில்லினுடைய பிரவாகத்தை மானுடர்கள் சொல்லத் துவங்குகிறhர்கள்.

” பாணாசுரன் போன்ற வீரர்கள் கூட இதை அசைக்க முடியவில்லை. ராஜாக்களுனுடைய பலம் சந்திரன். அந்த சந்திரனையே விழுங்கும் இராகுவை போன்றது இந்த சிவதனுசு . வில்லினுடைய கனமும், கொடுர தன்மையும் எல்லோரும் அறிந்ததே. வலிவு உள்ள வீரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லை வளைத்து யார் நாணேற்றுகிறார்களோ அவர்கள் ஜானகியை வரிக்கலாம் என்று எங்கள் மன்னரான ஜனகர் சொல்கிறார்” என்று உரக்க பேசினார்கள்.

அரசர்கள் கோபாவேசத்தோடு அந்த தனுசை எடுக்க முயற்சி செய்தார்கள். அவர்களால் அதை நகர்த்தக்கூட முடியவில்லை. இரண்டு கைகளாலும் வெகு நேரம் முயற்சி செய்து இடுப்பு தளர்ந்து சோபியிட்டு துவண்டு நடந்து வந்தார்கள். அவர்கள் புஜ பலத்திற்கு ஏற்றவாறு அந்த வில்லினுடைய கனமும், சக்தியும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது . எனவே, அதை நகர்த்தக்கூட முடியவில்லை. பத்தாயிரம் அரசர்கள் ஒன்று கூடி அந்த வில்லை அசைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதிகாரிகள் தடுக்க, அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள். இந்த பத்தாயிரம் பேரில் யார் ஜானகியை திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது . அவர்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள். யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் ஜானகியை கரம் பற்றுவார்கள் என்று அவர்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.

காமாந்தகனான ஒருவன் ஒரு பதிவிரதையிடம் போய் பல் காட்டி பசப்பு மொழிகள் சொன்னாலும் அந்த ஸ்தீரி அசைந்து கொடுப்பதில்லை அல்லவா. அதேபோல இந்த அற்பர்களிடம் இந்த வில் அசைந்தே கொடுக்கவில்லை என்று சொல்கிறார். எப்படி வைராக்கியம் இல்லாத சன்னியாசிகள் பரிகாசத்திற்கு உள்ளாவார்களோ அதேபோல தூக்க முயற்சித்து தோல்வியுற்ற இந்த அரசர்கள் பெரும் பரிகாசத்திற்கு உள்ளானார்கள்.

இராம, லக்ஷ்மணர்கள் அசையவில்லை. விஸ்வாமித்திரரின் உத்தரவிற்காக காத்திருந்தார்கள். அரசர்களுடைய தோல்வியைப் பார்த்து விட்டு ஜனகர் புலம்பத் துவங்கினார். இதை செய்து முடிக்கின்ற வீரர்கள் இங்கே இல்லை என்று தெரிந்திருந்தால் நான் எதற்கு இந்த சபதத்தை மேற்கொள்கிறேன். நான் செய்தது பிசகு என்பது போல் பேசினார்.

லக்ஷ்மணருக்கு கோபம் வந்தது . எங்கள் அண்ணன் இராமன் இருக்க இந்த வார்த்தை இவர் சொல்லப்படுமோ என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தார். ரகு வம்சத்தினுடைய சமூகம் இருக்கும் இடத்திலே அந்த சபையிலே இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்கலாம் என்று கோபப்பட்டார். லக்ஷ்மணருடைய மனதை புரிந்து கொண்ட ஸ்ரீ இராமசந்திரமூர்த்தி லக்ஷ்மணனை தொட்டு சமாதானம் செய்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

நல்ல முகூர்த்த நேரம் வந்த பிறகு விஸ்வாமித்திர முனிவர்,
” ஸ்ரீ இராமச்சந்திரா, எழுந்திரு. சிவனாரின் இந்த அரிய வில்லை உடைத்து ஜனகரின் துயரத்தை தீர்த்து விடு” என்று கட்டளையிட்டார். இராமர் எழுந்து நின்றார் அப்படி நின்றபோது அவருக்கு சந்தோஷமும் இல்லை. துக்கமும் இல்லை. ஒரு சிங்கம் போல நடந்து வில்லிற்கு அருகே வந்தார். அப்பொழுது சீதை அந்த வில்லை நோக்கி தரிசித்தாள்.
“, சிவ தனுசே, நீ மற்றவர்களுக்கு கடினமாக இரு. ஆனால் நான் விரும்புகின்ற இராமனுக்கு மெல்லியதாக இரு. . எளிதாக வசப்படு. என்று மனதிற்குள் கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்தாள்.

சீதை அப்படி தனக்காக வேண்டிக் கொள்கிறாள் என்பதை அவளுடைய முக லட்சணங்களிலிருந்து தெரிந்து இராமர் மென்மையாக புன்னகை பூத்தார். அந்த வில்லை உற்று பார்த்தார். எங்கு தொட வேண்டுமோ அங்கு தொட்டார். எப்படி தூக்க வேண்டுமோ அப்படி தூக்கினார். எப்படி நிறுத்த வேண்டுமோ அப்படி நிறுத்தினார். எப்படி வளைக்க வேண்டுமோ அப்படி வளைத்தார். நாணை இழுத்து அந்த வில்லை கட்டும்பொழுது அந்த வில் இரண்டு துண்டாக உடைந்தது .

எடுத்த நேரமும், நிறுத்திய நேரமும், இழுத்த நேரமும், உடைத்த நேரமும் அடுத்தடுத்து இருந்தன. எந்த ஷணத்தில் எது நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மிகப் பெரிய பேரொலி எழுந்து பூமியினுடைய அதளபாதாளம் வரை தாக்கியது . சூரியனுடைய குதிரைகளும் திடுக்கிட்டு பயந்து ஓடின. அங்குள்ள அரசர்கள் எல்லாம் முடிந்து போயிற்று என்று சோர்ந்து முகவாட்டம் அடைந்தார்கள்.

ஜானகியினுடைய மனதிற்குள் தண்ணீர் மடுவுக்குள் பாய்வது போல ஒரு சந்தோஷம் நிரம்பியது . மிதிலையின் ராஜா ஜனகர் நிம்மதியடைந்தார். சீதாதேவி கை கூப்பி கிரிஜாதேவியை வணங்கினாள். அவளுடைய சரீரத்தில் நாணம் இருந்தது . ஆனால் மனதில் உற்சாகம் இருந்தது . சிரமப்பட்டு அடக்க வேண்டியிருந்தது . ஆனால் எழுந்து நின்றபோது இராமருடைய உருவம் தெரிந்து அவள் அந்த அழகில் திகைத்து நின்றுவிட்டாள்.
ஒரு சகி, சீதா, போ. போய் ஜெய மாலையை இராமர் கழுத்திலே அணிந்து விட்டு வா.” என்று சொல்ல, சீதை நினைவிழந்து இரண்டு கைகளிலும் ஜெயமாலை பிடித்துக் கொண்டாள். அந்த மாலையை இராமருக்கு அணிவிக்க முடியாமல் திண்டாடினாள். சீதையை உற்சாகப்படுத்த தோழிகள் பாட, சீதையும் உற்சாகமடைந்து அந்த ஜெய மாலையை இராமனின் கழுத்தில் அணிவித்தாள்.

சுற்றி எல்லா இடத்திலும் வாத்திய கோஷங்கள் முழங்க ஆரம்பித்தன. வேதியர்கள் நல் வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஜெய ஜெய என்று கோஷம் செய்தார்கள். சகலரும் இராமனுக்கும் சீதைக்கும் ஆசிர்வாதம் செய்தார்கள்.

இராமசரித மானஸ் தொடர்கிறது . அவ்வப்போது ஒரு சுவாரசியத்திற்காக வால்மீகி கதையினூடே துளசி தாஸரையும் , கம்பரையும் , அருணாசல கவிராயரையும் நான் காட்டுவேன்.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன