முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36

சீதை நாணத்துடன் கண் திறந்து இராமரின் கால் நகத்திலிருந்து கழுத்து வரை ஆழமாக ஊடுருவி பார்க்கிறாள். அந்த இரண்டு சிங்கங்களையும் தரிசிக்கிறாள். அவளுக்கு தன் தந்தையினுடைய பயங்கரமான சபதம் ஞாபகம் வந்தது . இந்த இளைஞன் வில் வளைக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது . வேறு யாரும் வளைக்கக் கூடாதே என்ற பயம் வந்தது . மயக்கமான ஒரு நிலையில் சீதை இருப்பதை கண்டு மற்ற தோழிகள் பயந்தார்கள்

”போதும் போதும். நாம் இன்று போய் நாளை வரலாம். இதே நேரம் வரலாம்.” என்று உரக்கச் சொன்னார்கள்.

யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாதே என்ற பயத்தினால் சீதை அந்த நந்தவனத்தை விட்டு அவசரமாக வெளியேறினாள். போகும்போது மிருகங்களையும், செடிகளையும், பட்சிகளையும் பார்க்கின்ற சாக்கில் நடந்து போய்க்கொண்டே திரும்பத் திரும்ப இராமரை சீதை பார்த்துக் கொண்டிருந்தாள் என்று வரகவி வர்ணிக்கிறார்

பிறகு பவானி என்கிற கிரிஜா கோவிலுக்குப் போனாள் . மனம் முழுவதும் இராமர் இருக்க, கண்களில் நீர் ததும்ப பவானியில் மண்டியிட்டு சீதை வணங்கினாள்.

”உன்னையே தன்இஷ்ட தெய்வமாகப் போற்றும் ஸ்தீரிகளுக்கான அன்னையே , சகலருக்கும் வரம் கொடுக்கும் தேவியே , சிவனாரின் பெரிய பத்தினியே, என் விருப்பம் என்ன என்று உங்களுக்குத் தெரியும். எப்பொழுதுமே மனிதர்களுடைய இருதயத்தில்தானே நீங்கள் வாசம் செய்கிறீர்கள். உங்களுக்கா என்னை அறிய முடியாது. என்னால் எதையும் வாய் திறந்து வெளிப்படையாக பேச முடியவில்லை. ஆனாலும் உங்களுக்குத் தெரியும். உங்கள் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்கிறேன். தயவுசெய்து என் மனதுக்கு உகந்த வரனை எனக்குக் கொடுங்கள்” என்று கண்களில் நீர் வழிய வேண்டினாள்.

தேவியின் பூச்சரம் நழுவி கீழே விழுந்தது . அதை எடுத்து தன்னுடைய கூந்தலில் சீதை சூடிக் கொண்டாள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

”சீதா இதுவே என்னுடைய ஆசிர்வாதம் . எவன் மீது உன் மனம் ஈடுபட்டுவிட்டதோ அவனே வரனாக உனக்கு நிச்சயம் கிடைப்பான். எவன் மீது ஆவல் கொண்டாயோ அந்த இராமச்சந்திரமூர்த்தியே உனக்கு வரனாக அமைவான். அவர் தயையின் களஞ்சியம். உன்னுடைய சீலமான குணத்தையும் , நட்பையும் அவர் அறிவார். ஏனவே, கவலைப்படாமல் போய் வா” என்று அசரீரியாய் தேவி சொல்ல, திரும்பத் திரும்ப பலமுறை கிரிஜா தேவியை வணங்கிவிட்டு ராஜசபைக்கு திரும்பினாள்.

சீதையினுடைய இடது தோள்கள் துடித்தன. மங்களமான சகுனங்கள் ஏற்பட்டன.

நந்தவனத்திலிருந்து கிளம்பி மாளிகைக்கு வந்த இராமரும் லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரரை வணங்கினார்கள். பூக்களை அவரிடம் கொடுத்தார்கள். இராமர் தான் சீதையை சந்தித்ததையும், அவள் அழகில் மயங்கியதையும் விலாவரியாக விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். அவர் எதையும் மறைக்கக்கூடிய மனம் உடையவர் அல்ல. குறிப்பாய் தன் குருவிடம் மிக உண்மையாக நடந்து கொள்பவர். ஏனவே, அவர் இரகசியமாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை.

இதைக் கேட்ட விஸ்வாமித்திரர் விஷேசமாக பூஜை செய்தார்.

”உன்னுடைய எல்லா மனோபீஷங்களும் நிறைவேறும்” என்று இராமனை ஆசிர்வதித்தார்.

மாலை நேரம் உணவு உண்ட பிறகு புராணக்கதைகளை அவர்களுக்குச் சொல்லத் துவங்கினார்.

மாலை முடிவு நெருங்கி வர அவர்கள் சந்தியாவந்தனம் செய்தார்கள். கிழக்கு திசையில் பூரண சந்திரன் உதயமானான். அந்த நிலவை பார்த்ததும் சீதையினுடைய முகம் இராமருக்கு ஞாபகம் வந்தது . இதனோடு எப்படி ஒப்பிடுவது சந்திரன் பகலில் ஒளியிழந்து இரவில் சோபை கொண்டு இருக்கிறான். ஆனால் சீதை பகலிலும் பிரகாசிக்கிறாள் இவனுடைய முகத்தில் மாசு , மரு இருக்கிறது . சீதையினுடைய முகத்தில் மாசு மருவே இல்லையே என்று ஆச்சரியத்துடன் ஒப்பீடு செய்தார்.

இரவு, இராமரும், லக்ஷ்மணரும் அயர்ந்து தூங்கினார்கள். விடியலில் எழுந்தார்கள். காலைக் கடன்களை முடித்தார்கள். நீராடினார்கள். சந்தியாவந்தனம் செய்தார்கள்.

லக்ஷ்மணரை பிரியத்துடன் இராமர் அணைத்துக் கொண்டார். லக்ஷ்மணரோ,
”எப்படி சூரியன் உதித்த பிறகு நட்சத்திரங்கள் மயங்கி விடுகின்றனவோ , செடிகள் வாடி விடுகின்றனவோ அதேபோல் நீ வந்திருக்கிறாய் என்று கேட்டதுமே பல ராஜாக்கள் நடுங்கத் துவங்கிவிட்டார்கள். எப்படி தாமரை போன்ற மலர்களும், வண்டினங்களும், பட்சிகளும் சந்தோஷப்படுகின்றனவோ அப்படி அருணோதயத்தால் சந்தோஷப்படுகின்றவர் போல உன்னுடைய பக்தர்கள் ஆனந்தமடைகிறார்கள் .”

யாக சாலைக்கு இராமரும், லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரரோடு நடக்க, யாகசாலையில் பெரிய கும்பல் ஏற்கனவே கூடியிருந்தது. ஜனகர் அவர்களை வரவேற்று மிக முக்கியமான இடத்திலே அவர்களுக்கு ஆசனம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அங்கே இராம, லக்ஷ்மணர் உட்கார்ந்ததும் சபை அவர்களை கை கூப்பி நமஸ்கரித்தது .

எல்லா வித்வான்களுக்கும் அவர் ஒரு பாடுபொருளாக காட்சியளித்தார். ஜனகருக்கோ தன்னைப் போன்ற அரசகுடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனாக காட்சியளித்தார். ஜனகருடைய பத்தினிகள் அத்தனைபேரும் ஒரு குழந்தையைப் போல இராமரை பார்த்தார்கள். யோகிகளுக்கு அவர் சாந்தமானவராக காட்சியளித்தார். தங்களைப் போலவே பவித்திரமானவர் அவர் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தினார். நாராயண பக்தர்கள் இவரை நாராயணன் அம்சமாகக் கண்டார்கள். சகல சுகங்களையெல்லாம் தரவல்ல இஷ்ட தேவர்களாக வணங்கினார்கள்.

சீதை எப்படி பார்த்தாள் என்று எப்படி வர்ணிப்பது என்று வரகவி பின் வாங்கி விடுகிறார்.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன