முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35

தன்னைச் சுற்றி வந்த சிறுவர்களை தன் மாளிகை வாசலில் நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி விட்டு இராமரும், லக்ஷ்மணரும் உள்ளே வந்து விஸ்வாமித்திரரை விழுந்து வணங்கினார்கள். சந்தியா காலம் நெருங்கி விட்டதே என்று சந்தியாவந்தனம் செய்தார்கள். விஸ்வாமித்திரர் எதிரே உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டார்கள். அவர் கண்ணயர்ந்து கால்நீட்டி படுக்கையில் சாய, இராமரும், லக்ஷ்மணரும் அவருக்கு கால் பிடித்து விட்டார்கள்.

” இராமா, நடுநிசி வந்து விட்டது . நீ போய் தூங்கு” என்று விஸ்வாமித்திரர் கட்டளை இட, அவர்கள் இரண்டு பேரும் மிருதுவாக அந்த இடத்தை விட்டு அகன்று வேறு இடத்திற்கு போய் படுத்துக்கொண்டார்கள்

இராமர் படுத்துக் கொள்ள லக்ஷ்மணர் அவர் பாதங்களை பிடித்து விட்டார். சிறிது நேரம் அவர் அந்த உதவியை செய்ய அனுமதித்து விட்டு ,”போதும் லக்ஷ்மணா போய் தூங்கு” . விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டுமே” என்று , இராமர் அவருக்கு விடை கொடுத்தார்.

இந்த அழகையெல்லாம் மிக சந்தநயமான அந்தக் கவிதைகளை படிக்கிறபோது அந்த இடத்திலேயே இருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது . துளசிதாஸருடைய இந்த இராமசரித மானஸ் வடஇந்தியாவில் மிகப் பிரபலம். கிராமங்களில் இசையோடு பாடப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

விடியற்காலையில் அந்த மாளிகையில் சகோதரர்கள் இருவரும் சந்தியாவந்தனம் செய்தார்கள். மாளிகைக்கு மறுபுறம் ஒரு பெரிய நந்தவனம் இருப்பதும் அதில் செடி , கொடிகளில் பூக்கள் பூத்திருப்பதையும் இராமர் கண்டார். விஸ்வாமித்திரரின் பூஜைக்கு ஆகும் என்று சொல்லி லக்ஷ்மணனோடு அந்த நந்தவனத்திற்குள் நுழைந்தார். அண்ணனும், தம்பியும் பூக்களை பறிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த நந்தவனத்தில் கிரிஜாதேவியின் கோவில் இருந்தது . அங்கு போய் பூஜை செய்து விட்டு வா என்று சீதா தேவியின் தாய் கட்டளையிட, சீதை கிரிஜாதேவியை வணங்குவதற்காக அந்த நந்தவனத்திற்குள் நுழைந்தார். கிரிஜாதேவியின் கோவிலை வலம் வந்தார். விழுந்து நமஸ்கரித்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

என் மனதிற்கு பிடித்த வரனே எனக்கு அமையவேண்டும் என்று மன்றாடி மனம் உருக வேண்டினார்.

சீதையின் சிரிப்பும் கால் கொலுசின் ஒலியும் , நகைகளின் ஒலியும் கேட்க, லக்ஷ்மணரை பார்த்து, ”என்ன அற்புதமான சப்தம் இது” என்று வியந்து அந்த சப்தங்களை ராமர் கேட்டார். லக்ஷ்மணரும் அந்த சப்தங்கள் கொடுத்த சந்தோஷத்தினால் புன்னகை செய்தார். என்னவோ நல்லது நடக்கப் போகிறது என்பது போல் அந்தப் புன்னகை இருந்தது .

சீதா தேவியினுடைய தோழி ஒருத்தி சற்று நகர்ந்து வேறு யாரோ இருப்பது போல் இருக்கிறதே என்று தேடி, இராமர், லக்ஷ்மணரைக் கண்டாள். திகைத்தாள். திரும்பி பரபரக்க சீதா தேவியிடம் ஓடி வந்தாள். அவள் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்ததை மற்ற பெண்கள் பார்த்தார்கள். சீதாதேவியும் வியப்புடன் நின்றாள்.

” இங்கே இரண்டு இளைஞர்கள் நிற்கிறார்கள். நேற்று விஸ்வாமித்திரரோடு நகரத்திற்குள் வந்ததாக ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்களல்லவா, அந்த இளைஞர்கள்தான் இவர்கள். இராமர்,லக்ஷ்மணர் என்ற பெயர் கொண்டவர்கள். அயோத்தி மன்னர் தசரதருடைய புதல்வர்கள். அவர்கள் அந்த செடிகளின் மறைவில் நின்று நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்ட, சீதை கொஞ்சம் மறைந்து கொண்டு, அந்த செடிகளுக்குப் பின்னே இருந்த அந்த இளைஞர்களை பார்த்தாள். இராமரை கண்ணாரக் கண்டாள். இராமரை தரிசித்து அவர் உருவம் மனதில் இறுத்திக் கொள்ள முயற்சி செய்து, அந்த மனதில் இறுத்திக் கொண்ட உருவம் தன்னை விட்டு வெளியேறக்கூடாது என்று தன் இமைகளை சீதாதேவி மூடிக் கொண்டாள்.

ஒரு அழகிய இளைஞனை பார்த்து விட்டு, ஒரு சின்னதாய் மயக்கம் ஏற்பட்டு கண்களை மூடிக் கொள்வது என்று பெண்ணின் குணத்தை, இராமன் நெஞ்சிலிருந்து மறைaந்து விடக்கூடாது என்று கதவு சார்த்தியது போல கண்களை மூடிக்கொண்டாள் என்று வரகவி துளசிதாஸர் வர்ணிக்கிறார். நெகிழ்ச்சியாக இருக்கிறது .

இதேபோல அந்தப் பக்கம் சீதையினுடைய உருவத்தை கண்டு திகைத்து நின்றார் இராமர். தன்னுடைய சக்தியெல்லாம் திரட்டி பிரம்மன் இந்த உருவத்தை ஸிருஷ்டித்திருக்கிறானோ என்று வியந்தார். இருட்டான இடத்தில் ஒரு தீபஜூவாலை எப்படி எரியுமோ அப்படி இருந்தது சீதையினுடைய அழகு.

”லக்ஷ்மணா, இவள் ஜனகருடைய மகள். இவளுக்காகவே வில்லை வைத்து ஒரு வேள்வியை துவக்கியிருக்கிறார் ஜனகர். இந்த இடத்திலே இருக்கிற கோவிலுக்கு கௌரி பூஜை செய்ய இந்தப் பெண் வந்திருக்கிறாள். நந்தவனம் இந்தப் பெண்ணால் அழகாகிவிட்டது . எந்தப் பெண்ணை பார்த்தாலும் நான் அமைதியாக இருப்பதுதான் வழக்கம். ஆனால் இவள் அழகை பார்த்ததும் மனம் கலங்குகிறது . அதே நேரம் என் வலது கண் துடிக்கிறது. வலது தோளும் துடிக்கிறது. நல்ல மங்களமான சகுனங்கள் ஏற்படுகின்றன. அதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.

ரகு வம்சத்தில் பிறந்தவர்கள் சொப்பனத்தில் கூட பர ஸ்தீரிகளைப் பற்றி நினைப்பதில்லை என்கிற ஒரு விஷயம் இந்த இடத்தில் என்னால் உடைந்து போயிற்று. எதிரிகளை வெற்றிகொள்ள முடியாமல் பயந்து புறமுதுகு காட்டி ஓடுகிறவனும், மற்ற பெண்களை கண்ணாறவும் ஏறெடுத்து பார்க்காதவனும், தன்னிடம் யாசகம் கேட்டு வருபவனை மறுக்காது அவனுக்கு வேண்டியவற்றை கொடுப்பவனும் உள்ள இந்த ரகுகுலத்தில் நான் ஏன் இப்படி….. .. லக்ஷ்மணனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவருடைய கரு வண்டுகள் போன்ற கண்கள் சீதையின் தாமரை போன்ற முகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன.அழகு மிக்க அந்த இராமனை வரகவி மிக அழகாக வர்ணிக்கிறார்

இராமர் திகைத்து சீதையை பார்க்க, சீதை திகைத்து இராமரைப் பார்க்க நாணத்தால், பெண்களுக்குண்டான இயல்பான குணத்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடவேண்டும் என்று சீதை நகரும்போது அவளுடைய தோழி பிடித்துக் கொள்கிறாள்

”கௌரி பூஜை பின்னால் செய்து கொள்ளலாம். இந்த இளைஞர்களை பார்க்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் வருமா. சீதை தப்பித்துக் கொள்ளாதே. நன்றாக இந்த இளைஞர்களைப் பார் ” என்று வற்புறுத்துகிறாள்

சீதை நாணத்துடன் கண் திறந்து இராமரின் கால் நகத்திலிருந்து கழுத்து வரை ஆழமாக ஊடுருவி பார்க்கிறாள். அந்த இரண்டு சிங்கங்களையும் தரிசிக்கிறாள். அவளுக்கு தன் தந்தையினுடைய பயங்கரமான சபதம் ஞாபகம் வந்தது . இந்த இளைஞன் வில் வளைக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது . வேறு யாரும் வளைக்கக் கூடாதே என்ற பயம் வந்தது . மயக்கமான ஒரு நிலையில் சீதை இருப்பதை கண்டு மற்ற தோழிகள் பயந்தார்கள்.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன