முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயம் இருந்தது . ஆனால் அதை புரிந்து கொண்ட இராமர், விஸ்வாமித்திரரிடம் போய் கை கூப்பி, ”நீங்கள் கட்டளையிட்டால் நானும் ,லக்ஷ்மணனும் ஜனகபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்” என்று பவ்யமாகக் கேட்டார்.

”உனக்கு நான்கட்டளை இடுவதா. ஜனகபுரியை சுற்றிப் பார்க்கவா. அவர்கள் கண்கள் சுகத்திற்காக நீ அங்கு போக வேண்டுமென்கிறாய். அந்த மக்கள் சுகப்படட்டுமே. இதில் என்னுடைய ஆணை எதற்கு. போய் வா இராமா. போய் வா லக்ஷ்மணா.” என்று விடைகொடுக்க, அந்த இரண்டு பேரும் ஜனகபுரியின் தெருக்களில் இறங்கினார்கள்.

பார்க்க மிக அற்புதமாக இரண்டு பேரும் இருந்தார்கள் என்பதை வரகவி துளசிதாஸர் மிக அழகாகச் சொல்கிறார்
.
சிங்கத்தின் பிடரி போன்ற உறுதியான கழுத்து , அகலமான தோள்கள். இடுப்பு குறுகியிருந்தது . உறுதியான பிருஷ்டம். இடுப்புக்கு கீழே வேட்டியை பாந்தமாக உடுத்திக் கொண்டிருக்க, நான்கு மூலைகள் கொண்ட உத்திரியத்தை மேலே அணிந்து கொண்டிருந்தார்கள். சுருள் கேசங்கள் ஆடிக் கொண்டிருந்தன. காதுகளில் தங்கத் தோடுகள் இருந்தன. முதுகில் அம்பாரத்தூணியும், கையில் வில்லுமாய் அவர்கள் இரண்டு பேரும் ஜனகபுரி தெருக்களில் நடந்து வர, தரித்திரர்கள் கஜானாவை கொள்ளை அடிக்க வருவது போல, மிதிலை நகரத்து மக்கள் அவர்களை பார்ப்பதற்கு தங்கள் கை வேலைகளை அங்கங்கே விட்டு விட்டு பரபரத்து ஓடினார்கள். இராமரை சிறுவர்கள் தான் சூழ்ந்து கொண்டார்கள். ” இதைப் பாருங்கள் , அதைப் பாருங்கள்” என்று தங்கள் பட்டணத்தை கர்வத்தோடு காட்டினார்கள். தொட்டுப் பேசினார்கள்.

குழந்தை மனதுள்ளவர்கள் , இராமரை எளிதில் அடைய முடியும் என்பதை கவி இங்கு சூசகமாகச் சொல்கிறார். அரசாங்க அதிகாரிகளோ, பண்டிதர்களோ , பெருந்தனக்காரர்களோ இராமரை வரவேற்கவில்லை. அவரை வரவேற்றது குழந்தைகள்தான். அவர்களோடுதான் அவர் பேசினார். குழந்தை மனம் கொண்டவர்கள்தான் இராமரை எளிதில் தரிசிக்க முடியும், ஸ்பரிசிக்க முடியும் என்று வரகவி துளசிதாஸர் சொல்லாமல் சொல்கிறார்.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக அவரை மிதிலை தேசத்து இளம் பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர் அருகே நடந்து அவர் காதுபடவே புகழ்ந்து பேசினார்கள். என்ன அழகு, என்ன அழகு என்று வியந்தார்கள்.

”சகி, விஷ்ணுவிற்கு நான்கு கரங்கள். பிரம்மாவிற்கு நான்கு முகங்கள். சிவனோ கோரரூபம் இவர்களையெல்லாம் பார்க்க முடியுமா. ஆனால் இந்த இளைஞனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது . எல்லா தெய்வத்தின் சாயலும் இவரிடம் இருக்கிறது” என்று வாய்விட்டு ஒருத்தி சொன்னாள். மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இராமரும், லக்ஷ்மணரும் அந்தப் பெண்கள் பின்னே வர, அமைதியாய் ஜனகபுரியை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தார்கள். யாரென்று தெரியவில்லையே என்று ஒருத்தி ஆரம்பிக்க, அயோத்தியிலிருந்து மிதிலைக்கு குடித்தனம் செய்ய வந்த ஒருத்தி அவர்களைப் பற்றி அழகாகச் சொல்கிறாள்
.
”இவர் அயோத்தி அரசர் தசரதருடைய குமாரர். சியாமள நிறத்தில் சுருள் குழலோடு, சிவந்த உடலோடு உயரமாக இருப்பவர் பெயர் இராமர். சுகந்த நிறத்தோடு தன் அண்ணனுக்கு பின்னே நடந்து போகிறவர் லக்ஷ்மணர். இவர் தாய் சுமித்திரை. இராமரின் தாய் பெயர் கோசலை. விஸ்வாமித்திர மகரிஷியின் யாகத்தை காப்பதற்காக தசரதரால் விஸ்வாமித்திர மகரிஷிக்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்விதமே அவருடைய யாகம் பூர்த்தியடைவதற்காக மாரீசன், சுபாகு போன்ற அரக்கர்களை கொன்று அப்புறப்படுத்தி அந்த வேள்வியை தொடர்ந்து நடக்க காரணமானவர்கள். மாபெரும் வீரர்கள்” என்பதை அந்தப் பெண் தெளிவாக சொன்னாள். அந்தப் பெண்கள் அதைக் கேட்டு நிறைவெய்தினார்கள்.

”என்ன நம்முடைய மிதிலை அரசனை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது . எதற்காக இப்படி ஒரு சபதத்தை மேற்கொள்ள வேண்டும். வில்லை வளைப்பவருக்குத்தான் சீதை என்று ஏன் சொல்ல வேண்டும். இவ்வளவு அழகிய இராமன் இங்கிருக்கும்போது சீதையை இழுத்து வந்து இவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாதா. எதற்கு இந்த சபதம். ” என்று ஒரு பெண் அலுத்துக் கொண்டாள்.

” ஏய் கவலைப்படாதே. பிரம்மன் நல்லவன். அவன் கெடுதல் செய்ய மாட்டான். வெகு நிச்சயமாய் சீதைக்கு இந்த வரன்தான் அமையும் ” என்று ஒரு பெண் சொல்ல, மற்றவர்கள் ”ஆமாம் ஆமாம் ” என்றார்கள்.

”அப்படி ஒரு திருமணம் நடந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்”

”என்ன சொல்கிறாய் புரியவில்லையே?”

” சீதையை பார்க்க நாம் அயோத்திக்கு போகலாம். ’, இராம தரிசனம் செய்யலாம். சீதையை இங்கு அழைத்து வரும்போது இராமர் இங்கு வருவார். மிதிலையிலும் இராம தரிசனம் பெறலாம். இடையறாது வருடத்திற்கு பலமுறை நாம் இராமரை தரிசித்துக் கொண்டிருக்கலாம். எப்படியாவது இந்த சம்பந்தம் நடைபெறவேண்டும்” என்று பெண்களுக்கே உண்டான வெகுளியான மனோபாவனையினால் அவர்கள் பேசி வந்ததை , இராமரும், லக்ஷ்மணரும் கேட்டார்கள். எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக வந்தார்கள்.

கையிலே வில். முதுகிலே அம்பாரத்துணி . அதிலே அம்புகள் என்று அந்த இரண்டு இளைஞர்கள் வருவதை ஜனகபுரி கை கூப்பி மிக ஆவலோடு வேடிக்கை பார்த்தது . அவர்கள் வரவேற்று கைகூப்புவதாக இருந்தாலும் அந்த கை கூப்புதலில் ஒரு சரணாகதியும் இருந்தது .

அற்புதமான விஷயங்களைக் கண்டால் மனிதர்களுக்கு மனம் மயங்கி அதை நோக்கி கும்பிடத் தோன்றும் அல்லவா, அப்படித்தான் இருந்தது .
.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன