முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட,அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது.

“தட்சனுடைய யாகத்தில் சிவன் புறக்கணிக்கப்பட, மற்ற தேவர்கள் தட்சனுடைய யாகத்தில் வந்து அவிஸை ஏற்றுக்கொள்ள, என்னை புறக்கணித்த யாகத்தில் நீங்கள் எப்படிப் போய் அந்தப் பங்கை ஏற்கலாம் என்று சிவன் கோபப்பட்டு இந்த வில்லை உயர்த்தி அவர்களைக் கொன்று விடுவதாகச் சொல்ல, அவர்கள் பயந்து போய் பரமேஸ்வரனை துதித்தார்கள். சிவன் சாந்தமடைந்தார். அந்த வில்லை தேவர்களுக்கே கொடுத்துவிட்டார்.

பல கைகள் மாறி என் முன்னோர்களுக்கு இந்த வில் வந்து, இப்போது என்னிடம் இருக்கிறது. கலப்பையால் நான் இந்த நிலத்தை உழுதபோது கலப்பை ஒரு பெட்டியில் இடிக்க , அந்த பெட்டியை திறக்கும்போது அதனுள் அழகான ஒரு பெண் குழந்தை இருந்தது. உழவு செய்கின்ற கலப்பை இடித்த பெண் என்பதால் சீதா என்ற பொருளுடைய அந்த சொல்லுக்கு நிகராக சீதை என்று அந்தக் குழந்தைக்கு நான் பெயர் வைத்தேன். மனுஷ்ய கர்ப்பத்தில் பிறக்காத அந்த பெண்ணை வீரத்தினால் தான் ஒரு ஆண்மகன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வில்லை வளைக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தேன். தேவர்களும் அசுரர்களும் இந்த வில்லை வளைப்பதற்கு முயற்சி செய்துவிட்டு அசைக்கக்கூட முடியாதபடி அவஸ்தைபட்டு திரும்பியிருக்கிறார்கள். இதை மானுடர்கள் வளைக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் உங்கள் கட்டளைக்கேற்ப இந்த வில்லை இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறேன். என்று அவநம்பிக்கையோடு ஜனகர் கை கூப்பினார்.

விஸ்வாமித்திரர், “ குழந்தாய் இராமா, போய் அந்த வில்லைப் பார்” என்று கட்டளையிட்டார். பார் என்பதை சோதித்துப் பார்ப்பதாக ஸ்ரீ இராமர் எடுத்துக் கொண்டு அந்த வில்லை நோக்கி நகர்ந்தார். வில்லைத் தூக்கி நிமிர்த்தினார். ஒரு ஸ்தம்பம் போல வில் நேரே நின்றது. ஜனகர் முதலானோர் ஆச்சரியத்தோடு குரல் எழுப்பினார்கள். இடது கால் கட்டை விரல் நுனியில் வில்லின் அடிப்பாகத்தை அழுத்திக் கொண்டு, இடது கையால் மேல் பாகத்தை வளைத்து நாணை இழுத்து, வில்லையும் நாணையும் ஒன்று சேர்க்க நிதானமாக ஸ்ரீ இராமர் முயற்சி செய்து கொண்டிருக்கையில் ஜனங்கள் வியப்புத் தாங்க முடியாமல் கத்தினார்கள். எழுந்து நின்றாகள். படேர்.. என்ற ஒரு சத்தம் எழுந்தது. விஸ்வாமித்திரர், இராமர், லக்‌ஷ்மணர் ஜனகரைத் தவிர , மற்ற எல்லோரும் அந்த சப்தத்தின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டு துவண்டு சரிந்து விழுந்தார்கள்.

நிமிர்ந்து பார்த்தபோது வில் இரண்டு துண்டாக உடைந்திருந்தது. வில்லை வளைத்து நாணேற்றச் சொன்னால் உடைத்தே விட்டாரா. எப்பேர்பட்ட வீர புருஷன் என்று ஜனங்கள் வாய்விட்டு சொன்னார்கள். வில் உடைந்த சத்தம் தொலைதூரத்தில் உள்ள அலை ஒன்று படர்ந்து கரையைத் தொடுவது போல மிதிலாபுரி நகரம் முழுவதும் அந்த சப்தம் பரவியது. ஜனங்கள் என்ன சப்தம் என்று வேடிக்கை பார்க்க வெளியே வந்து குவிந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள்.

சீதை உப்பரிகையில் இருந்து கீழே இறங்கி வந்து ஜனகரை நோக்கி கை கூப்பினாள். சீதைக்கு ஸ்ரீ இராமரை பிடித்துவிட்டது என்று மெல்லியதாய் ஒரு செய்கை அதில் தெரிந்தது. ஜனகர் சந்தோஷப்பட்டார். விஸ்வாமித்திரர் புன்னகை செய்தார். எந்த சலனமும் இல்லாமல் ஸ்ரீ இராமர் அமைதியாக நின்றார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அன்பர்களே, இந்த வால்மீகி இராமாயணத்தில் இராமரை மிக சம்பிரதாயமாக சீதை சந்திக்கிறார்.. அப்படித்தான் ஜனகர் அழைத்து வருகிறார். அவர் வில் உடைத்ததை பார்த்ததாகக் கூட வால்மீகி சொல்லவில்லை. ஆனால் வால்மீகியின் விவரணையில் திருப்தியுறாது அந்த விஷயங்களை இன்னும் அற்புதமாக நடந்திருக்குமே என்று யோசித்து அந்த யோசிப்பில் பரவசப்பட்டு சில வரகவிகள் , இராமாயணத்தை இக்காட்சியை வேறு விதமாக எழுதியிருக்கிறார்கள்

அதில் முக்கியமானவர் துளசிதாஸர். இந்தியில் நாலுவரி பாடல் வரியாக, ஆமாம் . இசைக்கு ஏற்றதாக சந்த நயத்தோடு அவர் இராமருடைய சரிதத்தை எழுதி அதற்கு “இராமசரித மானஸ்” என்று பெயரிட்டிருக்கிறார்..

இந்த விஷயம் சிவன் மனதில் இருந்து உமாவிற்கு சொல்லப்பட்டது . இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று அது தன்னால் சொல்லப்பட்டதல்ல, தெய்வத்தின் சாட்சியாக , தெய்வத்தின் குரலாக வெளியே வந்திருக்கிறது என்று அடக்கமாகச் சொல்கிறார்.

” உறுதியான மனதுடைய நானே தடுமாறுகிறபோது ஜனங்கள் என்ன செய்வார்கள். உண்மையில் இவர்கள் யார்? ”என்று முன்பே கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறார் ஜனகர். விஸ்வாமித்திரர் சிரிக்கிறார்.

” நீ சொல்வது உண்மை. அந்த மயக்கம் நியாயமானது . இந்த குழந்தைகள் தசரதருடைய மக்கள். என்னுடைய வேள்வியை ஊறு செய்கின்ற அரக்கர்களை கொல்வதற்காக தசரதரால் எனக்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் அவ்விதமே அரக்கர்களை கொன்றார்கள். மகத்தான வீரம் உடையவர்கள் இவர்கள்” என்று புகழ்ந்து சொல்ல, விஸ்வாமித்திரர் வாயால் அவர்களுடைய வீரம் பாராட்டப்பட்டது கேட்டு நிம்மதியாக ஜனகர் மிதிலை பட்டணத்திற்கு போக விடை கேட்டார்.

ஒரு நல்ல மாளிகையில் விஸ்வாமித்திரரையும் , இராம,லக்ஷ்மணர்களையும் தங்க வைத்து சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்தார். மறுபடியும் ஆழ்ந்து ஒருமுறை இராமரை பார்த்து விட்டு தன்னுடைய கடமைகளை முடிப்பதற்காக மிதிலா பட்டணத்திற்கு விரைவாக நடந்து போனார்.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன