முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32

பல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் தவம் செய்த பிறகு பிரம்மா அவர் முன் தோன்றி ரிஷி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்னும், தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல, அதனால் சஞ்சலமடைந்த விஸ்வாமித்திரர் இன்னும் கடுமையாக தன் தவத்தை செய்யத் துவங்கினார்.

அப்ஸர ஸ்தீரியில் சிறந்தவளான மேனகை அந்த புஷ்கரத்தில் குளிக்க வர, அவள் பேரழகைக் கண்டு விஸ்வாமித்திரர் மோகித்தார். அவருடன் பத்தாண்டுகள் கூடிக் குலவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். மறுபடியும் தவம் குறைந்தது. ஒளி குறைந்தது.

தான் மறுபடி மறுபடி தவம் செய்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு சிறு தவறு கூட செய்யாது தன் தவத்தை செய்யவேண்டுமென சங்கல்பித்துக்கொண்டு விஸ்வாமித்திரர் தவம் செய்ய வடக்கே போனார். உத்தர மலையில் கடும் தவம் செய்ய தேவர்கள் பயந்தார்கள். அவர் தவத்தினுடைய வீரியம் தாங்காமல் வேதனைப்பட்டார்கள். பிரம்மா, போதும் நிறுத்திகொள்ளுங்கள் என்று வேண்டிய போது, இல்லை என்னை நீங்கள் பிரம்மரிஷி என்று அழைத்தாலொழிய நான் என் தவத்தை நிறுத்தப்போவதில்லை. என்று சொல்ல, இன்னும் நீங்கள் அந்த தகுதியை அடையவில்லை என்று பிரம்மா மறுத்துவிட்டார்.

விஸ்வாமித்திரர் இரண்டு கைகளையும் உயரே தூக்கி, பிடிப்பேதும் இல்லாதவராய் காற்றையே உணவாகக் கொண்டு, தன்னைச் சுற்றி அக்னி மூட்டிக்கொண்டு கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெய்யிலிலும், குளிர்காலத்தில் நீருக்கு அருகேயும் தன்னை வருத்திக்கொண்டு தவம் செய்தார்.

ஒரு மானுட உடம்பு கடும் வேதனைக்கு ஆளாவது கண்டு தேவர்கள் வேதனைப்பட்டார்கள். தாங்கமுடியாது அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்திரன் ரம்பையை அழைத்து, தயவு செய்து அவருடைய மனம் மாற்றும்படியான வேலைகளைச் செய். அவர் முன்னும் பின்னும் நடனமாடு. உன்னை மோகிக்கும்படி செய். நான் குயிலாக இருந்து அவர் கவனத்தைக் கலைப்பேன். உனக்குத் துணையாக மன்மதன் வருவான். பயப்படாமல் போ என்று சொல்ல, முதலில் மறுத்த ரம்பை பிறகு இந்திரனின் கட்டளையை ஏற்றாள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

தன்னை இன்னும் பேரழகியாக செய்து கொண்டு அங்கு போக, குயில் சத்தம் கேட்டு விஸ்வாமித்திரர் கண் விழித்தார். தவத்திலிருந்து மீண்டார். ஆழ்நிலைக்கு போன அவரை ஒரு அழகிய ஒளி கலைத்தது. ஒளி ரூபமான அந்த பெண்மணியின் உடல் வனப்பு அசைந்தது. ஆனால் இது இந்திரன் சூழ்ச்சி என்பதை அறிந்தார். இந்திரன் கட்டளைப்படி என் தவத்தை கலைக்க வந்திருக்கிறாயா. இது இங்கு நடக்காது. போ. பாறையாகக் கிட என்று ரம்பையை விஸ்வாமித்திரர் சபித்தார். ரம்பை அந்த கணமே கற்பாறையானாள்.

கோபமே கொள்ளக் கூடாது என்ற அந்த முனைப்பு சிதறிப் போக, தவம் கலைந்து போக மறுபடியும் உக்கிரமாக தவம் செய்யத் துவங்கினார். இந்திரனும் , மன்மதனும் ஓடிப் போனார்கள்.

எந்த தவத்தின் விளைவாக எனக்கு பிராமணத்தன்மை கிடைக்குமோ, அதை அடையும் வரை சுவாசமும் இல்லாது, உணவும் இல்லாது இப்படியே இருப்பேன். என்று சங்கல்பித்துக் கொள்ள, ஒரு மரக்கட்டையைப் போல எந்த உணர்வும் அற்று தன்னுள் மூழ்கிக்கிடந்தார். 100 ஆண்டுகள் ஒப்பற்ற அந்த தவத்தை செய்ய, நூற்றி ஓராவது ஆண்டு கண் விழிக்க , அந்த ஒரு நாள் சாப்பிட வேண்டிய உணவை எடுத்துக்கொண்டு சாப்பிட முயற்சிக்கிறபோது இந்திரன் வந்து கையேந்த, தனக்கு என்று வைத்திருந்த உணவை அந்தணனாக வேடம் தரித்து வந்த இந்திரனுக்கு தானம் கொடுத்தார். உணவு இல்லை. மறுபடியும் உணவு அவரால் செய்து கொள்ள முடியும். ஆனால் இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை என்று மறுபடி தவத்தில் ஆழ, அவர் தலையிலிருந்து நெருப்பு பறந்தது. உடம்பிலிருந்து ஒரு ஒப்பற்ற ஒளி தேவலோகத்தை வருத்தியது.

என்ன இடையூறு செய்தாலும் நான் கோபப்படுவதில்லை என்று உறுதியாக இருக்க, பிரம்மா ஆச்சரியப்பட்டு நீங்கள் பிரம்மரிஷி ஆனீர்கள் என்று அழைத்தார் பிரம்மாவுடைய வார்த்தை கேட்டு விஸ்வாமித்திரர் சந்தோஷப்படவில்லை. துவேஷமும் கொள்ளவில்லை. ஆனால் பிரம்ம ரிஷி என்று அழைத்ததும் அவர் மனம் குளிரவில்லை.

தனுர்வேதத்தில் சிறந்தவரும், நான்கு வேதங்களை அறிந்தவருமான வசிஷ்டர் என்னை பிரம்ம ரிஷி என்று அழைக்கும் வரை நான் என் தவத்தை நிறுத்துவதாக இலலை என்று சொல்ல, தேவர்கள் வசிஷ்டரை அவ்விதம் அழைக்குமாறு வேண்டினார்கள்.

வசிஷ்டரும் விஸ்வாமித்திரரை முற்றிலும் உணர்ந்து அவர் பிரம்மரிஷி தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, விஸ்வாமித்திரர் மிக சந்தோஷமாக, இந்த பூமியில் உயர்ந்த ரிஷியாக வலம் வந்தார்.

ஸ்ரீ ராமா, நீ யாரோடு இருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள் “ என்று விஸ்வாமித்திரரை சதானந்தர் சுட்டிக் காட்டினார்.

“ பிராமணத்தன்மை அடைந்த இந்த ஷத்திரியர் உனக்கு குருவாக கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம். இஷ்வாகு குலத்தின் செழுமையை உணர்ந்து உன்னை ஆசிர்வதிக்க அவர் வந்திருக்கிறார். மகத்தான காரியங்கள் உன்னால் நடக்கப்போகிறது. வாழ்க ராமா” என்று சதானந்தர் ஆசிர்வதிக்க, இராமர் சதானந்தரையும், விஸ்வாமித்திரரையும் வணங்கி எழுந்தார்.

“ இராமருக்கு சொல்லப்பட்ட இந்த கதையை நானும் கேட்கும்படியாயிற்று. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு.” என்று ஜனகர் கை கூப்பி சதானந்தருக்கு நன்றி தெரிவிக்க, சதானந்தரும், விஸ்வாமித்திரரும் அவரை ஆசிர்வதித்தார்கள்.

“ தொடர்ந்து நடக்கவேண்டியவைகளை நான் செய்வதற்கு எனக்கு அனுமதி தர வேண்டும் என்று சொல்லி, அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு ஜனகர் மிதிலைப் பட்டணத்திற்குள் நுழைந்தார்.

மறுநாள் காலை மிதிலை பட்டணத்திற்குப் போவதற்காக இராமரும், லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரரோடு மிதிலையின் எல்லையில் உள்ள அந்த கிராமத்தில் ஓய்வெடுத்தார்கள். காலை மிதிலைப் பட்டணத்திற்கு போனபோது அங்கு அவர்களை ஜனகர் வரவேற்றார்.

“ ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட, அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன