முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31

பலவிதமான மந்திரங்களால் அக்னியில் திரவியங்களை சொரிந்து அந்த அவிஸை தேவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது எந்த தேவரும் அதை வாங்கவில்லை. விஸ்வாமித்திரருடைய இந்த முயற்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. விஸ்வாமித்திரர் சினம் கொண்டார். யாகத்திற்கு நெய் ஊற்றும் மரக்கரண்டியை உயரே பிடித்து, “ திரிசங்கே, போ. சொர்க்கத்துக்கு போ” என்று உரக்க கத்த, திரிசங்கு பூமியிலிருந்து கிளம்பி நேரே தேவலோகத்திற்குப் போனான். அங்கே இந்திரன் அவனைப் பார்த்துத் திகைத்தான்.

“ இந்த உடம்போடு இங்கு வருவதற்கில்லை. இது உன்னுடைய இடம் இல்லை. போ. உன்னை யார் இஙகு அனுப்பியது ” என்று பிடித்துத் தள்ள, திரிசங்கு தலைகீழாக பூமியை நோக்கி வந்து “ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் “ என்று கதறினார்.

தான் அனுப்பிய பின்னும் புறக்கணிக்கப்பட்ட திரிசங்குவை பார்த்து , விஸ்வாமித்திரர் எழுந்து நின்று ,”நில் அங்கே” என்று கத்தினார். விஸ்வாமித்திரர் குரலுக்கு கட்டுப்பட்டு திரிசங்குவினுடைய உடம்பு அந்தரத்தில் நின்றது.

” நீ இந்திரலோகத்திற்கு போக முடியவிட்டால் என்ன, உனக்கு ஒரு இந்திரலோகத்தை நான் ஸ்ருஷ்டிக்கிறேன். அந்த லோகத்தில் நீ தான் இந்திரன்”. என்று அவனுக்கு என்று ஒரு இடம் ஏற்படுத்தி, அவனுக்கு எதிரே சப்தமாதர்களையும் ஏற்படுத்தி, மற்ற நட்சத்திரங்களையும் சகல கிரகங்களையும் ஏற்படுத்தி புதியதாய் ஒரு உலகத்தை தன் வலிமையால் ஸ்தாபித்தார்.

அவருக்கு தேவையே இல்லாத ஒரு வேலைக்காக, வசிஷ்டர் மீது உள்ள துவேஷத்தை காண்பிப்பதற்காக, ஒரு போட்டியின்பால் ஈடுபட்டு தன் வலிமையை தேவையில்லாமல் செலவழித்தார். திரிசங்கு தனியாக சொர்க்கத்திலே வாழத் துவங்கினான். அவரை நோக்கி நன்றியோடு கை கூப்பினான்.

வலிமை குன்றியதால் உரு இழந்தவராய், தேஜஸ் குறைந்தவராய் விஸ்வாமித்திரர் துவண்டு காணப்பட்டார். கோபப்பட்டு விட்டேனே. கோபத்தால் வலிமையை இழந்து விட்டேனே. எது செய்யக் கூடாதோ அதை செய்து விட்டேனே. இனி நான் கோபப்படுவது இல்லை. பதட்டப்படுவது இல்லை என்று தீர்மானித்து மேற்குப் பக்கம் போய் பரத கண்டத்தின் மேற்குபகுதியில் “ விசாலா” என்ற புண்ணிய நதிக் கரைக்கு அருகே புஷ்கர புண்ணிய கரையில் மிகக் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டு கடும் தவம் மேற்கொண்டார்

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அயோத்தியை ஆண்டுகொண்டிருந்த அம்பரீட்சன் என்ற அரசன், வாழ்வு விளக்கம் பெற மிகப் பெரிய வேள்வியை செய்ய, அந்த வேள்விக்குண்டான யாகப்பசுவை இந்திரன் கவர்ந்து போய்விட்டான். அந்தணர்கள் பரிதவித்தார்கள். யாகப்பசுவை மறுபடியும் மீட்டுக்கொண்டு வா, இல்லையெனில் வேள்வி பூர்த்தியடையாது. இதனால் கெடுதல்கள் உண்டாகும் என்று எச்சரித்தார்கள். அப்படி யாகப்பசு கிடைக்காவிட்டால் அதற்கு இணையான ஒரு மனிதனை, ஒரு நரனை இங்கு அழைத்து வா. அவன் மனம் ஒப்பி இதில் ஈடுபடவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அம்பரீட்சன் பிருகுதத்தம் என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த ரிஷிகன் என்ற முனிவரை கண்டான். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். அவர்களில் யாரேனும் ஒருவனை தனக்கு யாகப்பசுவாக அனுப்பும்படி அம்பரீட்சன் வேண்டிக்கொள்ள, மூத்த மகன் மீது எனக்கு பிரியம். அவனை நான் இழப்பதற்கில்லை என்று ரிஷிகர் மறுத்துவிட்டார். ரிஷிகருடைய மனைவி மூன்றாவதான இளைய மகன் மீது எனக்கு பிரியம் அதிகம், எனவே அவனை கொடுப்பதற்கில்லை என்று அவள் மறுத்துவிட்டாள். இரண்டு பேருக்கும் நடுவே பிறந்த கனத்சேவன் தானாக முன் வந்தான். எல்லாத் தந்தைக்கும் மூத்த குழந்தை பிரியமானவன். எல்லாத் தாய்க்கும் இளைய குழந்தை பிரியமானவன். நடுவில் இருக்கின்ற என்னை எவரும் ஆதரிப்பதில்லை. தாயும் தந்தையும் புறக்கணித்த என்னை யாகப்பசுவாக ஒப்புக்கொடுக்கிறேன். , என்னை அழைத்துப் போங்கள். என்று சொல்ல, அம்பரீட்சன் அவனை தேரில் ஏற்றிக்கொண்டு தன் தேசம் நோக்கி பயணப்பட்டான்.

அப்படி பயணப்படும்போது விஸ்வாமித்திரர் தங்கி இருந்த பர்ணசாலையில் தங்கி ஓய்வு எடுக்க, கனத்சேவன் விஸ்வாமித்திரரிடம் நெருங்கி, அவருடைய பாதங்களில் தன் தலையை பதிய வைத்து, ”இது தான். தந்தையும் தாயும் விரும்பவில்லை. நானாக என்னை ஒப்புக்கொடுத்தேன். இருப்பினும் ஒரு யாகப்பசுவாக நான் சாகப் போகிறேனே என்று நினைத்து எனக்கு வேதனையாக உள்ளது. என்னை காப்பாற்றக் கூடாதா, எனக்கு உயிர் பிச்சை அளிக்கக்கூடாதா” என்று வேண்டினான்.

தன்னுடைய நான்கு மகன்களை பார்த்து விஸ்வாமித்திரர் , இவன் நிலைமையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இவன் அழுகை என் நெஞ்சைக் கரைக்கிறது. இவனுடைய செயலற்றத் தன்மை பரிதாபமான இடம். என்னைப் பதற்றமடைய வைக்கிறது. எனவே, பல வேள்விகளைச் செய்த உத்தம மக்களாகிய நீங்கள் யாரேனும் ஒருவர் யாகப்பசுவாக போங்கள் என்று கட்டளையிட்டார். அவருடைய மகன்கள் சினந்தார்கள். ”அயலார் பிள்ளையை காப்பாற்றுவதற்காக சொந்தப் பிள்ளையை பலி போட எந்த தகப்பனுக்கு மனம் வரும். நல்ல உணவு பரிமாறிக் கொண்டிருக்கும்போது நாய் மாமிசத்தைக் கொண்டு வைப்பார்களா, அப்படி இருக்கிறது உங்கள் செயல்” என்று கடுமையாகப் பேச விஸ்வாமித்திரர் மறுபடியும் கோபமானார்.

”முன்பு பிறந்த குமாரர்களை நாய் மாமிசம் சாப்பிடும்படி போங்கள் என்று நான் சாபமிட்டேன். அதே போல நீங்களும் நாய் மாமிசம் சாப்பிடுபவராக இந்த பூமியிலே வசியுங்கள்” என்று சீறினார்.

” உன்னை அந்த யாக ஸ்தம்பத்தில் கட்டிப்போடும் வரை, பலி கொடுக்கும் வரை இந்த மந்திரங்களை இடைவிடாது சொல்லிக்கொண்டிரு. உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது..”

அம்பரீட்சன் யாகத்தில் கனத்சேனன் கட்டப்பட்டான். ஆனால் ரட்சாமந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான். இந்திரனும், மற்ற தேவர்களும் மகிழ்ச்சி அடைந்து அவனை விடுவித்தார்கள். அம்பரீட்சன் கொடுத்த அவிஸை ஏற்றார்கள்.

கோபமடைந்து தன் மகன்களை சபித்து கனத்சேனனுக்கு ரட்சா மந்திரங்கள் சொல்லி அவனை காப்பாற்றியதால் மறுபடியும் விஸ்வாமித்திரரின் தவத்தின் பலன் குறைந்தது. ஒளி அமுங்கியது. மறுபடியும் தவம் செய்யத் துவங்கினார்.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன