முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30

தான் தவம் செய்து பெற்ற அஸ்திரங்கள் அத்தனையும் தன்னுடைய தண்டத்தால் தடுத்து நிறுத்தி எதுவும் இல்லாமல் செய்ததை கண்ணாரக் கண்ட ஷத்திரியரான விஸ்வாமித்திரர், ஷத்திரியருடைய பலம் ஒரு பலமா, பிரம்ம தேஜஸ்தான் உண்மையான பலம். அந்தணருடைய தவத்திற்கு முன்பு ஷத்திரியருடைய அஸ்திரங்கள் எதற்கும் லாயக்கற்றவை என்று நொந்து வசிஷ்டரை விட்டு விலகிப் போனார். தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் வசிஷ்டரை நோக்கிய அவருடைய பகைமை அழியவில்லை. வளர்ந்து கொண்டே இருந்தது.

இனி இந்த பிரம்ம தேஜஸை அடைவதற்கு என்ன விதமான தவம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்று சொல்லி, தனது அரசியோடு தென் திசை நோக்கிப் பயணப்பட்டார். அங்கு அமைதியாக வனாந்திரங்களில் வாழ்ந்து, காய், கனி போன்றவற்றை உண்டு, கடுமையாக புலன்களை அடக்கி தவம் செய்யத் தொடங்கினார்.

”அந்த அரசன் நுண்ணிய வளமுடையவன். தன்னைச் சுற்றி தினம் தினம் மனிதர்கள் இறப்பது கண்டு பயந்து போனான். மரணத்தை வெல்ல முடியாதா என்று பல அறிஞர்களைக் கேட்டான். மரணமில்லா பெருவாழ்வு பற்றி சொல்லுங்கள் என்று வினவினான். அவன் சபை விழித்தது. சொன்ன பதில்கள் திருப்தியாக இல்லை. தன் குலகுருவான வசிஷ்டரை நாடினான். உடலோடே சொர்க்கம் போக வேண்டும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான். வசிஷ்டர் அது இயலாது என்று சொல்லி விட்டார். ஆனால் அவன் விடுவதாக இல்லை. வசிஷ்டரின் புதல்வர்களை நாடினான். அந்த அரசனுக்கு ” திரிசங்கு “ என்று பெயர்.

உடலோடே சொர்க்கம் போக வேண்டும் என்று குலகுருவான வசிஷ்டரிடம் கேட்டேன். அதற்கு அவர் இயலாது என்று சொல்லிவிட்டார். உதவ மறுத்து விட்டார். நான் இப்போது உங்களிடம் வந்து நிற்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். நான் மிகுந்த பணிவோடு உங்களை பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த உடலோடே நான் தேவலோகத்திற்கு போக வேண்டும். அதற்குண்டான வேள்விகளை நீங்கள் செய்ய வேண்டும்” என்று கெஞ்சினார்.

“ உங்கள் தகப்பனார் என்னுடைய கோரிக்கையை மறுத்துவிட்டதால் நான் உங்களிடம் வந்து நிற்கிறேன். தடை சொல்லாமல் உதவி செய்யுங்கள்” என்று விதம் விதமாகப் பேசினார்.

ஒரு குலகுருவே முடியாது என்று மறுத்துவிட்ட பிறகு, எல்லாம் வல்ல வசிஷ்டரே, ”இது தவறு, செய்யாதே” என்று எச்சரித்த பிறகு அதை மறுபடியும் வந்து கேட்கிறாய் பார், உன்னை விட அறிவிலி எவரேனும் உண்டா. ஆசைக்கு ஒரு அளவு இல்லையா, வசிஷ்டரால் முடியாதது எங்களால் எப்படி செய்ய முடியும். அவ்விதம் செய்வோம் என்று நீ எப்படி நினைத்தாய், அப்படி அதற்கு முயற்சி செய்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகாதா. எனவே , இதற்கு மேல் இங்கு நிற்காதே, விலகிப் போ” என்று கடும் கோபத்தோடு சொன்னார்கள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ மிக்க நன்றி முனி குமாரர்களே, உங்களுக்கு நல்லதே நடக்கட்டும். நான் இந்த விஷயத்தை வேறு யாரிடமாவது போய் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன்னுடைய நியதியிலிருந்து பிசகாது, தன் ஆசையிலிருந்து விலகாமல் அவர்களை வணங்கினார்.

அரசருடைய பிடிவாதம் அவர்களுக்கு கோபம் கொடுத்தது.

“ இத்தனை சொல்லியும் அடக்க முடியாமல் இப்படி பேசுகிறாயே, உன் மனம் என்ன கோரமாக இருக்கிறதோ அதே போல உன் உடம்பும் கோரமடையட்டும் போ” என்று சாபமிட்டார்கள்.

மறுநாள் விடியும் போது திரிசங்கு என்ற அந்த இஷ்வாகு குலத்தின் அயோத்தி அரசன், கருப்பாக, பழுப்பேறிய தலையுடன், இரும்பு ஆபரணங்களுடன், தடுமாற்றமான மொழியுடன், உடம்பெல்லாம் சாம்பல் பூத்து கோரமான உருவத்துடன் எழுந்திருந்தான். ஆனாலும் அவன் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அவனை விட்டு அவனுடைய மக்களும், மற்றோரும் விலகினார்கள். அதனால் அவன் பயந்து விடவில்லை. தவச்செல்வரான விஸ்வாமித்திரரிடம் வந்து கை கூப்பினார்.

திரிசங்கு அயோத்திக்கு அரசன். உடம்பு முழுவதும் சாபத்தால் மாறியிருக்கிறது என்று விஸ்வாமித்திரர் புரிந்துகொண்டார். நடந்தது என்ன என்று கேட்டார்.

“ உடம்போடு சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வேள்வியை செய்யுங்கள் என்று என் குலகுருவை வேண்டிக் கேட்டுக்கொண்டேன். குலகுரு மறுத்ததோடு அவருடைய மகன்களிடமும் போனேன். அவர் மறுத்ததாய் அவர் மகன்களிடம் சொன்னேன். அவர் மகன்கள் கோபமுற்று, மறுபடியும் அதே எண்ணத்தோடு எங்களிடம் வந்து நிற்கிறாயே என்று இந்த உருவத்தை அடையும் படி சாபமிட்டார்கள். இப்படி மாறியும் எனக்குள் இருக்கும் அந்த வேட்கை தீரவில்லை. நான் உங்களை சரணடைந்திருக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். இந்த உடம்போடு சொர்க்கம் போக வேண்டிய வேள்வியை எனக்காக செய்யுங்கள் “ என்று சொன்னார்.

ஆச்சரியத்தோடு விஸ்வாமித்திரர் அவரை பார்த்தார். நடந்தவைகளை நன்கு தெரிந்து கொண்டார்.

ஆக, வசிஷ்டர் முடியாது என்று சொல்லி, அவருடைய நூறு மகன்களும் இந்த கோர உருவத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்களா, வசிஷ்டர் மறுத்தால் முடிந்து போயிற்றா… இந்த விஸ்வாமித்திரர் செய்து காண்பிப்பேன். அதற்குண்டான வேள்வியை நான் செய்வேன். திரிசங்கே கவலைப்படாதே என்று சொல்லி, மறுபடி தான் பெற்ற மகன்களை அழைத்து, ” அரசர் உயிரோடு சொர்க்கம் போக விரும்புகிறார், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இவ்வளவு வேதனை பட்டும் தன் லட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. இதுவே எனக்கு சந்தோஷமளிக்கிறது. தன் தர்மத்திலிருந்து பின்வாங்கவில்லை. இதுவே இவரை வலிவு நிறைந்தவராகச் செய்கிறது. எனவே இவருக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். இங்கே அடைக்கலம் புகுந்து கௌசிகனான என்னிடம் வந்திருக்கிறாய். நீ சொர்க்கம் போனது போலத்தான் “. என்று கர்வத்தோடு சொன்னார்.

திரிசங்கு உடலோடு சொர்க்கம் போக வேண்டும் என்பதை விட, வசிஷ்டரால் மறுக்கப்பட்ட ஒரு விஷயத்தை தான் செய்து காட்டினால் அது வசிஷ்டருக்கு அவமானத்தை ஏற்படுத்தும். அவருடைய நூறு மகன்களும் தலைகுனிவார்கள் என்ற ஆகங்காரமே அவரிடம் மேலோங்கியிருந்தது.

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன