முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -29

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -29

ந்த பர்ண சாலையில் நடக்கின்ற வேள்வியெல்லாம் அவள் தயவில்தான் நடக்கிறது . அவள் இல்லையெனில் எங்களுடைய உணவும் , மற்ற விஷயங்களும் பிரச்சனையாகிவிடும். அதுவும் தவிர, காமதேனு விருப்பப்பட்டுதான் இங்கு இருக்கிறாள். எனவே, காமதேனுவை கேட்கின்ற விஷயத்தை மட்டும் விட்டுவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள்.

  ” கேட்பது என்பது ஒரு மரியாதைக்காகத்தான். என் சொத்து , என் சொந்தம் என்று நான் எப்போதோ தீர்மானம் செய்து விட்டேன். இருந்தாலும் மிக நல்லவரான உங்களுக்கு நான் தீங்கிழைக்க விரும்பவில்லை. பல ஆயிரம் பசுக்கள் தருகிறேன். காமதேனுவை கொடுத்து விடுங்கள். ”

      ”இல்லை. கொடுப்பதற்கில்லை

  ” தங்க முகபடாம் போட்ட யானைகளைத் தருகிறேன். ”

     ” இல்லை தருவதற்கில்லை

   “ பல்லாயிரக்கணக்கான குதிரைகளைத் தருகிறேன்

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

    “ இல்லை. தருவதற்கில்லை. ”

    “ என் குடிபடைகளை , பலவான்களை தருகிறேன். இங்கு பெரிய நகரம் நிர்மாணிக்க வைக்கிறேன். காமதேனுவை கொடுத்து விடுங்கள்

    ” இல்லை. தருவதற்கில்லை. நீங்கள் அகங்காரமாக பேசுகிறீர்கள்

     ” வசிஷ்டரே, நீங்கள் அத்துமீறுகிறீர்கள்.”

      அவர்கள் விறைப்பாக முறைத்துக் கொண்டார்கள் . பர்ணசாலை தவித்தது . சித்த புருஷர்கள் கலங்கினார்கள்.

     ” சரி. இனி பேச்சு இல்லை. செய்கைதான். அடேய்….” என்று அவர் குரல் கொடுக்க, அதை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவர் படை வீரர்கள் பாய்ந்து காமதேனுவை மடக்கிக் கொண்டார்கள். ஒட்டுமொத்தமாக இழுத்துக் கொண்டு போனார்கள். தூசு பொறி பறந்தது . கால்கள் தேய காமதேனு இழுக்கப்பட்டாள். அந்தப் பசு கதறலோடு இழுத்துப் போவதை வசிஷ்டர் கவலையோடு பார்த்தார். காமதேனு ஒரு திரும்பு திரும்பியது . வீரர்கள் எகிறி விழுந்தார்கள். அவர்களைத் தாண்டிக் கொண்டு காமதேனு வசிஷ்டரிடம் வந்தது . இவர்களிடம் என்னை கைமாற்றி விட்டீர்களா, எதற்கு என்னை இழுத்துக் கொண்டு போகிறார்கள். நான் பரமானந்தமாக உன்னுடைய ஆசிரமத்திலே இருந்தேனே. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா, என்னை ஏன் நீங்கள் காப்பாற்றாமல் நிற்கிறீர்கள். இவர்கள் வன்முறை காட்டுகிறார்கள். நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள். ”

  ” அம்மா சபலை, அவன் அரசன், வலிமை மிக்கவன். படைகள் கொண்டவன். யானைகள் , குதிரைகள் உள்ளவன். நானோ அந்தணன். அவனை எதிர்த்து என்னால் போர் செய்ய இயலாது . ”

   ” இவன் அகங்காரத்தையும், முட்டாள்தனத்தையும் நினைத்து நான் நொந்துபோய் கொண்டிருக்கிறேனே தவிர, இவன் மீது எனக்கு கோபம் வரவில்லை

   ” அது என் குறை. அடக்கமாக , அமைதியாக இருப்பதை இவன் பயந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அட்டகாசம் செய்கிறான். உன்னை நீ காப்பாற்றிக் கொள். என்னை நம்பாதே. நான் கோபமுற்று எழுந்தால்தான் நான் இவனை தண்டிக்க முடியும். இந்த ஷணம் வரை கோபம் இல்லாததால் நான் மௌனமாக இருக்கிறேன். எனவே, உனக்கு கொம்புகள் இருக்கின்றன. குளம்புகள் இருக்கின்றன. உன் மூச்சிலிருந்து வெப்பக்காற்று வரும். நீ படை வீரர்களை உண்டாக்கு. அவர்களை கீழ்; இறக்கி கௌசிகனுடைய படைகளை அடித்து துரத்து. நீயே உன்னை காப்பாற்றிக் கொள்என்று கட்டளையிட்டார்.

   காமதேனு உற்சாகமடைந்தது . உடம்பு சிலிர்த்தியது . அதன் உடம்பிலிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கீழ் இறங்கினார்கள். மூச்சுக் காற்றிலிருந்து போர் வீரர்கள் வந்தார்கள். விஸ்வாமித்திரர் படைகளை அடித்து துரத்த , நாலாபக்கமும் அடித்து வேட்டையாடினார்கள். மடக்கிக் கொண்டார்கள் . கை, கால்களை ஒடித்தார்கள். ஆயுதங்களை பிடுங்கிப் போட்டு தரையோடு தரையாக நசுக்கினார்கள். கௌசிகர் என்கிற விஸ்வாமித்திரர் பயந்து ஓடினார்.

காமதேனு என்கிற பசுவின் சீறலில் இருந்து வீரர்கள் தோன்றுவதும் அவைகளால் தன் படைகள் நிர்மூலம் செய்யப்படுவதையும் விஸ்வாமித்திரரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. காமதேனு வெறும் உணவுக்கான் விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்க ஒரு பெரிய சைன்னியத்தையே அது தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரியவந்தது . இது காமதேனுவின் மீதுள்ள ஆசையை அதிகரித்தது . இது அரசனுக்கல்லவோ சொந்தமாக இருக்க வேண்டும். ஒரு ஷத்ரியனின் சொத்தல்லவா இது . ஒரு அந்தணன்; இதை வைத்துக் கொண்டிருக்கலாமா. வெறும் சோறும், பருப்பும் , நெய்யும் , தயிரும், பெறுவதற்கா ஒருவனுக்கு காமதேனு. அந்தப் பசு இல்லாது நான் ஊர் திரும்ப மாட்டேன் என்று மனதுக்குள் சூளுரை செய்து கொண்டார்.

விஸ்வாமித்திரர் படைகள் நிர்மூலமானதும் அவருடைய நூறு மகன்கள் போரில் இறங்கினார்கள். சில நிமிடங்களில் அவர்கள் அடித்து கொல்லப்பட்டார்கள். தான் பெற்ற செல்வங்கள் , அற்புதமான பிள்ளைகள் , கண்ணெதிரே மடிந்து போவதைப் பார்த்து விஸ்வாமித்திரர் மனம் குமைந்தார்

    என்னிடம் தவம் இல்லை. வசிஷ்டரிடம் இருக்கின்ற மனோசக்தி எனக்கு வரவில்லை. காமதேனுவை அவர் கயிறால் கட்டிப் போடவில்லை. மனதால் கட்டிப் போட்டிருக்கிறhர். அவரை விட்டு வர இந்த காமதேனுக்கு விருப்பமில்லை. வசிஷ்டருக்கு ஆதரவாக சைன்யத்தை பொழிகிறாள். எனவே , இங்கு இப்போது இவரோடு சண்டையிடுவதில் அர்த்தமில்லை. என்று எண்ணி, வில்லை கீழே எறிந்தார். பின்வாங்கினார். தன் அரசியோடு வேறு கானகம் போனார். பெற்ற பிள்ளைகளை இழந்த துக்கம் அவரை அலற வைத்தது .

   அந்த அலறலை, ஆவேசத்தை தபசாக்கினார். சிவபெருமானை நோக்கி கடும் விரதங்கள் இருந்து தவம் செய்தார். அவர் மன வலிவுள்ள ஷத்ரியன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்ற மனிதன். அவர் தவத்தை பாராட்டி சிவன் தோன்றினார். என்ன வேண்டுமென்று கேட்டார்.

   தேவர்கள், தானவர்கள், மகரிஷிகள், யட்சர்கள் , கந்தர்வர்கள் வைத்திருக்கின்ற அத்தனைவிதமான அஸ்திரங்களும் எனக்கு வேண்டுமென்று ஆவேசம் பொங்க கேட்டார். ஒரு மனிதனை எதிர்க்க , எல்லா சூட்சம சக்திகளும் தனக்கு வேண்டுமென்று விரும்பினார். சிவனும் வரம் தந்தார். ஏகப்பட்ட அஸ்திரங்களோடு வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். எல்லையில் நின்று இடையறாது அஸ்திரங்களை பொழிந்தார். ஆசிரமம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது . பச்சை மரங்கள் பொசுங்கின. சூழ்ந்திருந்த தபஸ்விகள் தலைதெறிக்க ஓடினார்கள். ” அமைதி அமைதிஎன்று வசிஷ்டர் உரக்க குரல் கொடுத்தார். ஆசிரமம் சிதறடிக்கப்பட்டது .

   வசிஷ்டர் கடும் கோபமடைந்தார். மற்றவரெல்லாம் ஓடிவிட வசிஷ்டர் மட்டும் நிற்பதைப் பார்த்து விஸ்வாமித்திரர் அக்னியை பொழியும் அஸ்திரத்தை அனுப்பினார்.

   ” ஷத்ரிய பதறே , உன் பொறாமைக்கு எல்லையே இல்லையா. புரிந்து கொண்டு திரும்பினாய் என்று நினைத்தேன். மறுபடி போர் செய்யவே வெளியேறினாயா. அமைதியான இந்த ஆசிரமத்தை நிலைகுலையச் செய்து விட்டாய். ஆனால் என்னை உன்னால் எதுவும் செய்ய இயலாது”  என்று சொல்லி அந்த அக்னி அஸ்திரத்தின் மீது நீரைப் பொழிந்தார். அந்த அஸ்திரம் குளிர்ந்து கருகிப் போயிற்று.

    கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் வாருணம் , ரௌத்ரம், ஐங்கீரம், பாசுபதம் ,ஐஷீகம், முதலான அஸ்திரங்ளை பிரயோகித்தார். அத்தனையும் வசிஷ்டரால் அடக்கப்பட்டன.

    கோரமான திரிசூலம் காபாளம் , கங்கணம், காளாஸ்திரம் போன்றவைகளை செலுத்தினார். வசிஷ்டர் நீட்டிய தண்டத்தின் சக்தியால் அவை பொலிவிழந்து விழுந்தன. பிரம்மனை தேவதையாகக் கொண்ட பிரம்மாஸ்திரத்தை அனுப்பினார். அதுவும் தண்டத்தின் முன்பு அடங்கிற்று.

   உயர்ந்து எரியும் நெருப்பு போல வசிஷ்டர் நிற்க , ஓடிச் சிதறிய முனிவர்கள் ஒன்று திரண்டு அவரை நமஸ்கரித்தார்கள்.

   ” பேரன்பு மிக்க வசிஷ்டரே , விஸ்வாமித்திரர் உங்களால் தோற்கடிக்கப்பட்டார். செயலிழந்து நிற்கிறார் . நீங்கள் ஜெயித்தவர் ஆகிவிட்டீர்கள். இந்த உலகத்தின் நன்மை பொருட்டு சாந்தமடையுங்கள்என்று வேண்டினார்கள். இதமான வார்த்தைகளால் வசிஷ்டர் மனம் குளிர்ந்தார். அமைதியானார்

மிகுந்த உக்கிரத்தோடும் ,யுத்தம் முடிந்தபிறகு மிகுந்த சாந்தத்தோடும் இருக்கின்ற வசிஷ்டரைப் பார்த்து விஸ்வாமித்திரர் வெட்கப்பட்டார்.

   ஷத்ரியனுக்கு ஏது பலம் . ஒரு அந்தணனோடு ஒப்பிடுகையில் ஷத்ரியன் பலவீனன். மனோ சக்தி இல்லாதவன்;. என் ஆத்திரமே என்னைச் தோல்வியுறச் செய்கிறது . மனம் ஒருமையில்லாததே அதற்குக் காரணம். மனம் ஒருமை வரும்வரையில் நான் அரசராக இருக்க மாட்டேன். எனக்கு அந்த இடம் தேவையில்லை. நான் முனிவனாக மகரிஷியாக மாறவேண்டும். அதுவே உன்னதமான வாழ்க்கை. என்று தெளிந்தார். மீதி இருந்த ஒரே மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு மனைவியோடு கானகம் போனார். அங்கும் அவருக்கு நூறு குழந்தைகள் பிறந்தார்கள்.

அவர் மனம் சத்திய தர்மத்திலேயே தோய்ந்து இருந்தது . இடையறாது அமைதியில் ஆழ்ந்து இருந்தது .

   தன் நிலமையை பிரம்மனிடம் சோதிக்க , நீங்கள் ராஜ ரிஷி என்ற தகுதியை அடைந்து விட்டீர்கள். ஆனால் இன்னும் வளர வேண்டும். என்று சொல்லி விட்டு போனார்.

      விசிஷ்டர் பிரம்மரிஷி. நான் ராஜ ரிஷி தானோ. எங்கே குறை .  என்ன குறை என்று தவித்தார். மீண்டும் அவர் மனம் ஒருமையில் ஆழ்ந்தது .

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன