முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -28

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -28

மிதிலையின் எல்லையில் வந்தவரை ஜனகர் வரவேற்க, அவருடைய குடிபடைகள் ஆவலாக விஸ்வாமித்திரரையும், இராமரையும் தரிசிக்க, கைகூப்பியபடியே சதானந்தர் என்ற மகரிஷி வந்தார். சதானந்த மகரிஷி கௌதம மகரிஷியின் மகன்.

     ” விஸ்வாமித்திரரே என்னுடைய ஆசிரமத்திற்கு இராமரை அழைத்துப் போனீர்களா, என் தாயரை அவர் தரிசித்தாரா, என் தந்தையும், தாயும் அருகருகே நிற்பதை இராமர் கண்ணார கண்டாரா, அவர்கள் சரித்திரத்தை சொன்னீர்களா. இராமரால் அல்லவோ என் தாய்க்கு சாப விமோசனம் கிடைத்தது . அவரை அழைத்து வந்தது நீங்கள் அல்லவா. உங்கள் அனைவருக்கும் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று நெகிழ்ந்து பேசினார்.

    

    அவர் பேச்சில் உற்சாகம் கரை புரண்டது . இராமரை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

    ” இராமா, உனக்கு உன்னை இங்கு அழைத்து வந்த விஸ்வாமித்திரரைப் பற்றி தெரியுமா. அவர் தன்னைப் பற்றி சொல்லியிருக்க மாட்டார். நான் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்க, ஜனக மன்னன் முன்னே குனிந்து சதானந்தர் பேச்சை ஆவலோடு கேட்க ஆரம்பித்தார்.

   “ நீர் பெரிய அதிர்ஷ்டக்காரர். உன்னோடு வந்த இந்த விஸ்வாமித்திரர் சாதாரண மனிதர் அல்ல. பெரும் தவம் செய்த புத்திரர். பல காலம் அரசராக வாழ்ந்தவர். பதிக்கு குசன் என்ற மன்னர் மகனாக இருந்தார். குசனுடைய மைந்தன் குசநாபர். குசநாபருடைய மைந்தன் காதி. காதியின் புதல்வன் கௌசிகர் என்று அழைக்கப்பட்ட விஸ்வாமித்திரர்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

    அவர் லட்சக் கணக்கில் படைகளை திரட்டிக் கொண்டு உலகை வலம் வந்தார். போர் என்ற எண்ணமில்லை. யாரையும் அவமதிக்கவில்லை. உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது . அவர் வசிஷ்டருடைய ஆசிரமத்திற்கு வந்தார்.

   இருந்த மான்களெல்லாம் அங்கு அமைதியாக இருந்தன. சித்த புருஷர்கள் அவருடைய ஆதரவின் கீழ் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.

   கௌசிகரை முறைப்படி வசிஷ்டர் பரமானந்தத்தோடு வரவேற்றார். அவர்கள் பரஸ்பரம் உலகத்தின் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். வசிஷ்டருடைய உபசரிப்பில் கௌசிகர் என்ற விஸ்வாமித்திரர் மனம் குளிர்ந்தார். கை கூப்பினார். ஆனால் வசிஷ்டர் விடுவதாக இல்லை.

   ” உங்களுக்கும் , உங்களுடைய சேனைகளுக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்து விருந்திட விரும்புகின்றேன். இருந்து உணவு அருந்திவிட்டு போகவேண்டும்என்று பணிவாக கை கூப்பினார்.

  ” எனக்கு கிழங்குகளும், கனிகளையும் கொடுத்து , அர்க்யம், பாத்யம் கொடுத்து முறைப்படி உபசரித்தீர்கள். இதிலேயே நான் மகிழ்ந்து விட்டேன். கண்குளிர என்னைப் பாருங்கள். அமைதியாக விடைகொடுங்கள். நான் தொடர்ந்து என் பயணத்தை மேற்கொள்கிறேன். இத்தனை பேருக்கு உணவளிப்பது என்பது சிறிது கடினமான காரியம் என்பது எனக்குத் தெரியும். ”

  ”அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னிடம் காமதேனு என்ற பசு இருக்கிறது . அந்த பசுவின் மூலம் தான் இங்கு நடக்கின்ற ஹோமத்திற்குண்டான நெய்யையும் , இன்னும் பிற விஷயங்களையும் , அவிசுகளையும் ,பருப்பு வகைகளையும், மூலிகைகளையும் பெறுகிறேன். இதே காமதேனுவால் உங்களுக்கு உணவிட முடியும். ” சபலைஎன்று காமதேனுவை அழைத்தார்.

   காமதேனு அருகில் வந்து நின்றாள். அழகிய அந்தப் பசுவை விஸ்வாமித்திரர் கண்குளிர பார்த்தார். வியந்தார். இந்தப் பசு என்ன செய்யும் என்பது போல் ஆவலோடு வசிஷ்டரை நோக்கினார்.

   ”இங்குள்ள அத்தனை வீரர்களுக்கும் உணவிடு. விஸ்வாமித்திரர் எந்த உணவெல்லாம் விரும்புவாரோ அதை உணர்ந்து அவருக்கு உணவு தயார் செய். பக்குவமாக அதை ஏற்படுத்து . என் ஆசிரமத்து மனிதர்கள் அதை பரிமாறுவார்கள்என்று சொல்ல,

  சில விநாடிகளில் வீரர்களுக்கான உணவும், அரசருக்கான உணவும், மந்திரி பிராதானிகளுக்கான உணவும் தயாராயின. விஸ்வாமித்திரர் திகைத்துப் போனார். இனிப்பு வகைகள், கார வகைகள், மது பானங்கள், வெறும் பானங்கள், பழரசங்கள் , பலவகையான சாதங்கள், காய்கறிகள், கூட்டு வகைகள், நொறுக்குத் தீனிகள் என்றெல்லாம் உணவு பரிமாறப்பட்டது .

   இதற்கு முன் இவ்வளவு சுவையான உணவை அந்த படைவீரர்கள் உண்டதேயில்லை. படைவீரர்களுக்கு காரம் அதிகமாகவும், மற்றவர்களுக்கு சற்று குறைவாகவும், அரசருக்கு மிதமாகவும் காரம் சேர்த்து பரிமாறப்பட்டன. வாசம் மிகுந்த நெய்யும் , இன்னும் பிற விஷயங்களும் ஆரோக்கியத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தன. படை வீரர்கள் ருசித்து சாப்பிட்டார்கள். வாய்விட்டு பாராட்டினார்கள். வசிஷ்டரை கை எடுத்து கும்பிட்டார்கள்.

   ”படை வீரர்களாகிய நாங்கள் இலை, தழைகளை சாப்பிட்டுக் கொண்டும், பச்சை மாமிசத்தை கடித்து உறிஞ்சுக்கொண்டும் அரசரோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி தலைவாழை இலை போட்டு சமைத்த உணவை பரிமாறியிருக்கிறீர்கள். நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. வீட்டு hபகம் வந்து வி;ட்டதுஎன்றெல்லாம் பிதற்றினார்கள்.

   விஸ்வாமித்திரர் திகைத்துப் போய் இருந்தார். என்ன அற்புதமான உணவு. இப்படி வினாடி நேரத்தில் இந்தப் பசுவால் தரமுடியுமென்றால் இந்தப் பசு இங்கு இருக்கலாமா அல்லது என்னிடம் இருக்க வேண்டுமா. என்று யோசித்தார்.

  ” வசிஷ்டரே, என் தேசத்தினுடைய சிறந்த விஷயம் மன்னனிடம்தானே இருக்க வேண்டும். எனவே, இந்த தேசத்தின் சிறந்த இந்தப் பசுவை எனக்கு கொடுத்து விடுங்கள் . அதுதான் தர்மம். அரசரிடம் இருக்க வேண்டியது ஒரு அந்தணன் வைத்திருக்கக் கூடாது. ஒரு பெரும் குடிபடைக்கே உணவிடுகின்ற காமதேனுவை ஒரு சிறிய பர்ணசாலையில் நாற்பது , ஐம்பது பேர் இருக்கின்ற தவசிகள் கூட்டத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கக் கூடாது . தயவுசெய்து காமதேனுவை என்னிடம் கொடுத்து விடுங்கள். உலகத்தில் நல்ல பொருள் அரசரிடம்தான் இருக்க வேண்டுமே தவிர, அரசாங்க சொத்தாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஒரு அந்தணனுடைய தனி மனிதச் சொத்தாக இருக்கக் கூடாதுஎன்று வாதித்தார். வசிஷ்டர் மறுத்தார்.

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன