முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -27

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -27

வ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் காமம் என்கிற விஷயம் மனிதனை எப்படிக் கவிழ்த்துப் போடுகிறது. இந்த உறுப்புக்காகத் தானே இத்தனை ஆட்டம் ஆடுகிறாய். இந்திரனே, எது உன்னுடைய ஆண்மையைப் பற்றிய உறுப்பாக நினைக்கிறாயோ, எது உன்னுடைய கம்பீரமாக நினைக்கிறாயோ அந்த உறுப்பு அறுந்து விழட்டும் என்றார்.

இந்திரனுடைய ஆண்மை அறுந்து விழுந்தது. இந்திரன் நாணத்தால் தவித்தான்.

கெளதமர் எதிர்த்து நோக்கினார். வாசற்படியில் நின்றுகொண்டிருந்த அகலிகையைப் பார்த்தார்.

குப்பையாகப் போய்விட்டாயே, எதை செய்யக்கூடாதோ அதை செய்துவிட்டாயே. உன்னைப் பற்றிய கர்வம் எனக்கு அழிந்து விட்டது. போ, இந்த குப்பையோடு குப்பையாகிக் கிட. மஹாவிஷ்ணு, ஸ்ரீ இராமராக அவதரித்து இந்தப் பகுதியில் வரும்பொழுது அவர் கால் கட்டைவிரல் உன் மீது பட உனக்கு விமோசனம் வரட்டும். அது வரை குப்பையாகக் கிட என்று சாபமிட்டார். மனம் நொந்தார். தளர்ந்து தளர்ந்து மறுபடியும் இமயமலைக்கு தவம் செய்ய நடந்து போனார்.

தேவர்கள் இந்திரனை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து இந்திரன் கதறினான்.

உங்களுக்காக அல்லவா நான் அந்த பெரும்பழியை ஏற்றுக்கொண்டேன். உங்களுக்கு அவர் தலைவராக வந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்காது என்று நான் அல்லவா இந்த தியாகத்தைச் செய்தேன். எனக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று அலறினான்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

தேவர்கள் ஒன்றுகூடி யோசித்து ஒரு ஆட்டினுடைய பீஜத்தை அறுத்து எடுத்து இந்திரனுக்குப் பொறுத்தினார்கள். இந்திரனுடைய குறி ஆட்டினுடைய குறியாக மாறிற்று. கெளதமரை வென்ற திருப்தியுடன் இந்திரன் தேவலோகத்திற்கு போக,

ஸ்ரீ இராமா, இந்த குப்பை மேட்டில்தான் கருங்கல்லாக அகலிகை கிடக்கிறாள்.. இதோ அந்தக் கல்தான். உன் வலது காலை எடுத்து அந்த கல்லின் மீது வை. ஒரு பெண்ணின் துயரம் தீர்க்கவேண்டும் என்று வை. ஒருவனின் தவறு சீராக வேண்டும் என்று வை. என்ன தவறு செய்தாலும் மன்னிப்பு உண்டு என்ற நினைப்போடு வை. ” என்று உபதேசிக்க, கருணை மிகுந்த அந்த காகுத்தன் ஸ்ரீ இராமன் ஒரு பெண்ணின் மனகேதம் தீர்க்கும் பொருட்டு மிகுந்த கவனத்துடன் தன் வலது காலை எடுத்து வைத்து அதன் நுனியில் பட்டும் படாதவாறு அந்த கருங்கல்லில் தன் கட்டைவிரலை வைக்க, அந்த இடம் சுழல்காற்று தோன்றி பாறை அகன்று அகலிகை தோன்றினாள்.

கெளதமர் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் இருந்தன. அவள் ஸ்ரீ இராமரை விழுந்து வணங்கினாள். இராமர் அவளை ஆசிர்வாதம் செய்தார். விஸ்வாமித்திரரை வணங்கினாள். குறிப்பிட்ட காலத்தில் இது நடைபெறும் என்று தெரிந்த கெளதமர் தொலைதூரத்தில் வர, கெளதமரும் ஸ்ரீ இராமரை வணங்கினார். கெளதமரை ஸ்ரீ இராமரும் லக்‌ஷ்மணரும் வணங்கினார்கள். தன்னிடம் வரச் சொல்லி தன் வலது கையை அகலிகையை நோக்கி நீட்ட, குற்றம் நீங்கப் பெற்றவளான, குற்றம் நீங்கி மன்னிக்கப்பட்டவளான மறுபடியும் கணவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவளான அகலிகை சந்தோஷத்துடன் தன் கனவனின் அருகே போய் புஜத்தை  பிடித்துக் கொண்டாள்.

அந்தக் காட்சி இராமரை நெகிழ்த்தியது. ஒரு கணவனும் மனைவியும் பிரிந்து கூடுகின்ற அந்த மகத்தான கணத்தை அவர் முழுவதுமாக உணர்ந்தார். லக்ஷ்மணரும் கண்கள் பணிக்கப் பார்த்தார். ஸ்ரீ இராமரும் லக்‌ஷ்மணரும் ஒரு புதிய அனுபவத்தை முழுமனதாக அனுபவிப்பதை விஸ்வாமித்திரர் தொலைவில் இருந்து பார்த்துப் புன்னகை செய்தார். இராமாயணத்தின் மிக அற்புதமான பகுதி இது.

ஸ்ரீ இராமா, எந்தப் பாவம் பண்ணியவர்களும், இந்த அகலிகையின் சாப விமோசனம் கேட்க, அவர்கள் தங்களுடைய வேதனை தீர்க்கப் பெறுவார்கள். அவர்கள் சாபம் கலையும். அவர்கள் முன்னிலும் பலம் பொருந்தியவர்களாக விளங்குவார்கள். நீ அவதார புருஷன் என்பதை அறிந்துகொள் ஸ்ரீ இராமா என்று மென்மையாகச் சொன்னார்.

சொல்லப்பட்ட போதும் ஸ்ரீ இராமர் தன்னை அவதார புருஷனாக நினைத்துக் கொள்ளவில்லை.

அயோத்தியின் இளவரசனாக, தசரதனின் மகனாக, ஒரு வீரனாகவே தன்னுள் அவர் அமைதியாக இருந்தார். பட்டம் சூட்டப்பட்ட பிறகும் அவர் அமைதியாக இருக்க, விருதுகள் கொடுத்தபின்பும் அமைதியாக இருக்க, மிக உயர்ந்தவர்களால் பாராட்டப்பட்ட பிறகும் அமைதியாக இருக்க வெகு சிலருக்கே தெரியும். அவர்கள் அவதார புருஷர்கள்.

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன