முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -26

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -26

ன்னுடைய குழந்தைகள் கொல்லப்படுவதை அறிந்த திதி வருத்தப்பட்டாள். மறுபடியும் கருவுற்றாள். கடுந்தவம் புரிந்தாள். சிறிது கூட ஆசாரக் குறை இல்லாமல் கர்ப்பத்தைத் தாங்கிவந்தாள். சூதவனான இந்திரன் தன்னுடைய சிற்றன்னைக்கு பணிவிடை செய்துவந்தான். திதி அந்த பணிவிடையை ஏற்றுக்கொண்டாள். அவளுடைய கர்ப்பம் வளர்வதை கண்டு இந்திரன் கவலை கொண்டான். ஒரு நாள் தன் தலைமுடி பாதத்தில் படும் வண்ணம் அவள் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான். இது ஆசாரக்குறைவு என்பதால் அவள் வயிற்றுக்குள் எளிதாக உள்ளே புகுந்தான். அந்த கர்ப்பத்தை வெட்டி எறிந்தான். அந்த கர்ப்பம் ஏழு துண்டங்களாக சிதைந்தது. அந்த கர்ப்பம் அழத் துவங்கியது. அப்பொழுது இந்திரன், ”மா…ருத, மா…ருத” அழாதே, அழாதே என்று அந்த கர்ப்பத்தைக் கெஞ்சினான். அழுகையைக் கேட்டு திதி எழுந்துகொண்டாள். என்னைவிட இவர்கள் பெரிதாகக் கூடாது என்பதால் நான் இந்த காரியம் செய்தேன். சிற்றன்னையே இவர்கள் வானுலகத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். நிரந்தரமாக இருப்பார்கள் என்று இந்திரன் வாக்குக் கொடுத்தான்.

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் மூன்று பேரும் இருக்க, பூமியில் நான்கு மிருத்துகள் பிறந்தார்கள். அந்த மிருத்துகளும் நோய் தீர்க்கின்ற விஷயமாக பூமியிலேயே பரவிக் கிடந்தார்கள். பூமியில் நான்கு திசை ஆட்சியை அந்த மிருத்துகள் பெற்றார்கள்”.

பூமியின் மிகத் தொன்மையான வரலாற்றைக் கேட்ட ஸ்ரீ இராமர் மிகப் பெரிய யுத்தங்கள் நடந்த இடமென்றும், அற்புதமானவர்கள் வாழ்ந்த இடம் இது என்றும் புரிந்து கொண்டு மிகுந்த அடக்கத்தோடு தன் மனதைப் பக்குவப்படுத்தினார்.

திதி சுருண்டு தூங்கியதும், இந்திரன் கர்ப்பத்தை வெட்டியதும் இந்த தேசத்தில்தான் நடந்தது. இந்த பரம்பரையில் வந்த விஷாதன் என்ற அரசனுடைய பெயரால் இந்த இடம் விசாலா என்று அழைக்கப்படுகிறது. என்று அந்த இடத்தினுடைய சரிதத்தை அவர் எடுத்துச் சொன்னார்.

மிதிலையின் எல்லைக்குள் ஸ்ரீ இராமரும் லக்‌ஷ்மணரும் விஸ்வாமித்திரரோடு வர அந்த எல்லை மிதிலையின் அரசன் சுமதி தேர் ஏறி விஸ்வாமித்திரரை நோக்கி வந்தான். தேரை தொலைவே நிறுத்திவிட்டு நடந்து வந்தான். குனிந்து வந்தான். தகுந்தவாறு உபசரித்தான். இராமரையும் லக்‌ஷ்மணரையும் வியப்போடு பார்த்தான்.

என்ன அழகு, என்ன கம்பீரம், எவ்வளவு இளமை யார் இவர்கள். சூரிய சந்திரர்களைப் போல இருக்கின்றார்களே, இவர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன் என்று பரவசத்துடன் கூற, அயோத்தி மன்னன் தசரதருடைய பிள்ளைகள் இவர்கள் என்று விஸ்வாமித்திரர் சுமதிக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தார் நகரத்திர்குள்ளே வரும்படி கேட்டுக்கொண்டு மிதிலையின் எல்லையில் உள்ள பர்ணசாலையை அவர்களுக்குத் திறந்துவிட்டான். அடர்ந்த தோப்புகளும், நல்ல செடிகளும் மூலிகைகளும் உறுதியான ஆசிரமமும் அமைந்த அந்த பர்ணசாலையை இராமரும் லக்‌ஷ்மணரும் சுற்றி வந்தார்கள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ என்ன அழகிய இடம், எவ்வளவு அமைதி இங்கே, இது யாருடைய பர்ணசாலை, இத்தனை அமைதி எப்படி இங்கு வந்தது. இதனுடைய வரலாறு என்ன, இது ஏன் இப்போது இயங்கவில்லை ” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக ஸ்ரீ இராமர் கேட்டார். அவருக்குக் கேட்கத் தெரிந்துவிட்டது.

நன்கு விளக்கக் கூடிய ஒரு குரு கிடைத்தாலும் ஒரு சிஷ்யனுக்கு என்ன கேட்கவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஸ்ரீ இராமர் அதிசயமான விஷயங்களை சந்தித்தாலும் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதைத்தான் விஸ்வாமித்திரரிடம் கேட்டார். தன் நேரத்தையும் விஸ்வாமித்திரருடைய சக்தியையும் அவர் வீணாக செலவிட விரும்பவில்லை.

“ நல்ல கேள்வி கேட்டாய் ஸ்ரீ இராமா, இந்த பர்ணசாலை கெளதமருடையது. கெளதம மகரிஷி மிக உன்னதமான முறையில் தவம் செய்து வந்தார். இந்திரன் ஆகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவர் அந்தத் தகுதியை மெல்ல மெல்ல அடைந்துகொண்டிருந்தார். இந்திரன் கவலைப்பட்டன். தடங்கல் இல்லாமல் மனம் ஒருமைப்பட்டு தவம் செய்கின்ற கெளதமரை கோபமடைய செய்யவேண்டுமென்று விரும்பினான். உலகத்தில் ஒருவருடைய எந்த ஒன்றைப் பறித்துக்கொண்டாலும் அவர்கள் கொபமடையமாட்டார்கள். ஆனால் மனைவியைப் பறித்துக்கொண்டால் எந்த மனிதருக்கும் தாங்காது.

எனவே, கெளதம மகரிஷியினுடைய மனைவியான அகலிகையை நோக்கி இந்திரன் நடந்தான். பிரம்மாவின் சிஷ்யனில் மிக உயர்ந்த மாயாமயமான அகலிகை பேரழகியாகத் திகழ்ந்தாள். அவளைப் பற்றிய செருக்கு கெளதமரிடம் இருந்தது. தவத்திற்குக் கிடைத்த பரிசு என்ற எண்ணம் இருந்தது. யோக்கியதைக்குண்டான பேரழகி என்ற எண்ணம் இருந்தது.

இந்திரன், ஆசிரமத்திற்கு அருகில் வந்தவுடன் கெளதமராக வேடம் பூண்டு கொண்டான். கதவு திறந்து உள்ளே சென்றான். கெளதமருடைய சம்பந்தத்தால் ஞானத்தில் வல்லவளான அகலிகை, வந்தது இந்திரன் என்பதைப் புரிந்துகொண்டாள்.

” நீங்கள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு, என் அழகுக்கு இது மிகுந்த மரியாதை, மதிப்பு. ஆனால் அச்சமாகவும் இருக்கிறது’. என்று சொல்ல இந்திரன் அந்த அச்சத்தை நீக்கினான்.

“ இந்திரனே, உனக்கும் எனக்கும் கெடுதல் ஏற்படாவண்ணம் இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. என் கணவன் வரும் நேரமாகிவிட்டது.

இந்திரன் வெளியே வரும்போது ஆற்றில் குளித்து நீரில் நனைந்து கெளதமர் வருவதைக் கண்டான். பயந்தான். இந்திரனை நேருக்குநேர் சந்தித்த கெளதமர் நடந்ததைப் புரிந்துகொண்டார்.

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன