முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -25

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -25

ஸ்ரீ இராமா, யாக தீட்சையில் இருந்த அவர் கங்கையின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு அவள் நீர் பெருக்கு முழுவதையும் குடித்துவிட்டார். பகீரதன் திகைத்துப் போனான். சகலரும் பூமியின் நலன் கருதி ஜான்ஹுவை பிரார்த்தித்தார்கள். கங்கை உங்கள் மகள் போல அல்லவா என்று கெஞ்சினார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ஜான்ஹு தன் செவி வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அன்று முதல் ஜான்ஹுவின் மகள் என்ற புகழோடும் ஜான்ஹவி என்றும் அழைக்கப்படலானாள்.

பகீரதன் ரதத்தைத் தொடர்ந்து சென்றாள். பகீரதன் அந்த சாம்பல் குவியலை அடைந்தான். அவர்களை வணங்கினான். இத்தனை காலமாயிற்றே நான் உங்களைக் கரைத்தேற்ற. இத்தனை காலம் மெளனமாக இருந்தீர்களே என்று வேதனைப் பட்டான். கங்கையை வணங்கினான். கங்கை அந்த சாம்பல் குவியலை சூழ்ந்து கொண்டது. மொத்தமும் நனைத்தது. அறுபதாயிரம் அரசகுமாரர்களும் சொர்க்கத்தை அடைந்தார்கள்.

கங்கை நதியில் பாய்ந்து சமுத்திரத்தில் கலந்து அதோடு முடியாது அறுபதாயிரம் வீரர்கள் எரிக்கப்பட்ட அசாதலம் வரை ஆழ்ந்து பூமிக்கு அடியே இன்னும் போய்க்கொண்டிருக்கிறது. அது கடலில் கலக்கும் மெல்லிய நதியல்ல. மிகுந்த வேகம் கொண்டது. கடலில் தாண்டி அது அடி ஆழத்திற்கு ஊடுருவி போவது.

பூமியைச் சுற்றி மிகுந்த வேகத்துடன் அலையும் கருமேகங்கள்தான் ஆகாச கங்கை. அந்த மேகங்கள் நிமிர்ந்து நிற்கும் சிவபெருமானைப் போல இமயத்தின் மீது பட்டு குளிர்ந்து பனியாகி அந்த பனிப்பொழிவு ஏழு திக்குகளாக பிரிந்து கிழக்கு மேற்காக போய் அலக்நந்தா என்று நேர்நடுவாக பரதகண்டத்தில் நுழைகிறது. பரதகண்டம் செழிப்புற்றது கங்கை நதியால். இமயத்திற்கும் விந்தியத்திற்கும் நடுவில் இருக்கின்ற அந்த மிகப் பெரிய சமவெளி தாணியக் களஞ்சியமாக மாறியது கங்கை நதியால். அந்த கங்கை நதியைக் கொண்டுவந்தது உன்னுடைய மூதாதையரில் ஒருவனான பகீரதன். கடுந்தவம் செய்தவன். தனக்காக அல்ல. பூமிக்காக. இந்த பரதகண்டத்திற்காக அவன் மிகப் பெரிய தவத்தை மேற்கொண்டான். கங்கை நதி இல்லாத பரதகண்டத்தை நினைத்துப் பார். அப்போழுது பகீரதனின் மேன்மைத் தெரியும். இந்த கதையை யார் கேட்கிரார்களோ அவர்களுடைய பித்ருக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுடைய ஆயுளும், கீர்த்தியும் மிகப் பெரிதாக வளரும்.

ஸ்ரீ இராமரும், லக்‌ஷ்மணரும் விஸ்வாமித்திரரை தொடர்ந்து பெரும் புல்வெளிகளையும், மலைகளையும் தாண்டி தொடர்ந்து நடந்தார்கள். அழகிய சோலைகள் உள்ள விசாலா என்கிற நகரத்தை அடைந்தார்கள்.

“கங்கை பல கிளைநதிகளாக பாய்ந்து பசுமையாக இருக்கின்ற இந்த நகரம் யாருடையது, இதனுடைய வரலாறு என்ன? கேட்டுக் கேட்டு பழகிய ஸ்ரீ இராமர் அச்சமின்றி விஸ்வாமித்திரரை நோக்கி கேள்விகளைச் செலுத்தினார். சொல்லிக் கொடுப்பதில் ஆர்வமுடைய விஸ்வாமித்திரர் உற்சாகமானார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ ஸ்ரீ இராமா, முன்னொரு காலத்தில் வாழ்ந்த அரசர்களுடையை கதைகளைச் சொல்லியிருக்கிறேன். மிகுந்த பலமுடைய அவர்கள் செயற்கறிய காரியங்களை செய்தார்கள். அற்புதமான வேள்விகளை நடத்தினார்கள். எதிரிகளை மிகுந்த மூர்க்கத்துடன் தாக்கினார்கள். அவர்களால் இயலாத காரியமே இல்லை என்கிறபடி வாழ்ந்தார்கள்.

ஸ்ரீ இராமா, இந்த அரசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முந்தின புராணகாலத்தை நான் உனக்குச் சொல்கிறேன். காகுத்தனே, இந்த உலகம் எப்பொழுதும் நிரந்தரமாக வாழவேண்டிய ஆவலைக் கொண்டிருக்கிறது. மரணமே எய்தாமல், மூப்பே இல்லாமல் இந்த உலகத்தில் வாழ இயலாதா என்ற ஏக்கம் இங்குள்ள எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது.

திதியின் மைந்தர்களான தைத்திரியர்களும், அதிதியின் மைந்தர்களான தேவர்களும் இது பற்றி பெரிதும் கவலைப்பட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு வழி சொல்லப்பட்டது. மிகப் பெரிய ஆமையை மடுவாக்கி, மகேந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி பாற்கடலை இடையறாது கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் தோன்றும். அந்த அமிர்தத்தை பருகியவருக்கு மூப்பும் இல்லை, மரணமும் இல்லை என்று சொல்லப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் இரண்டாக பிரிந்து இருந்தாலும் ஒன்றாக முயற்சி செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை புரிந்து ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து அந்த காரியத்தைச் செய்யத் துவங்கினார்கள். உலகத்தில் நிரந்தரமாக இருக்கின்ற ஆசை யாரை விட்டது. அதற்காக எந்த முயற்சியும் செய்ய இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள் தயாராக இருந்தார்கள்.

அப்படி கடைந்த பாற்கடலில் இருந்து தன்வந்திரி என்பவர் வந்தார். உலகத்தில் உள்ள அத்தனை நோய்களுக்கும் உலகத்திலேயே மருந்து இருப்பது தெளிவாக கண்டு உணரப்பட்டது. தன்வந்திரியின் தோற்றம் அதைத்தான் உணர்த்தியது.

அப்சரஸ்கள் என்கிற மிக அழகிய பெண்கள் தோன்றினார்கள். சிற்றோடையின் வளைவாகவும், பெருநதியின் அலைவாகவும், காற்றின் வீச்சலாகவும், மரங்களின் அசைவாகவும், செடிகளின் பூத்துக் குலுங்கலாகவும் அந்த வனிதையர்கள் காட்சியளித்தார்கள். அவர்கள் இந்த உலகத்தில் பொதுமகளிர் ஆனார்கள். உலகத்தினுடைய அழகு அவர்களால் மேம்பட்டது. உலகம் ரம்மியமான இடமாக போயிற்று. வறட்சியும் கடும் காற்றும் வீசுகின்ற இந்த பூமி பல்வேறு ரசமான இடங்களை உடையதாயிற்று.

காமதேனு, மஹாலக்‌ஷ்மி போன்ற அற்புதமான் விஷயங்கள் இந்த பூமிக்கு வந்த பிறகு வாருணி என்கிற தேவதை வந்தாள். அவளுக்கு சுரா என்ற பெயரும் உண்டு. தைத்திரியர்கள் அவளை விலக்கினார்கள். சுராவை விலக்கியதால் அசுரர்கள் என்று சொல்லப்பட்டார்கள். தேவர்கள் அவளை விரும்பினார்கள். சுராவை விரும்பியதால் சுரர் என்று சொல்லப்பட்டார்கள்.

அதற்குப் பிறகு அமிர்தகலசம் மேலே வந்தது. அந்த கலசத்திற்காக தேவர்களும் தைத்திரியர்களும் அடித்துக்கொண்டார்கள். மிக கோரமானயுத்தம் தேவர்களுக்கும் தைத்திரியர்களுக்கும் அதாவது சுரர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்தது. தேவர்கள் அசுரர்களைக் கொன்று குவித்தார்கள்.

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன