முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் / ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -24

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -24

ஸ்ரீ இராமர் வருத்தப்பட்டார். தன் மூதாதையரில் சிலர் மிக மோசமான ஒரு முடிவுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அவர் முகம் வாடியது.

“ ஸ்ரீ இராமா, சரகனின் கதை இதோடு முடியவில்லை. மிகப் பெரிய பூமியின் நலத்திற்காக இந்த விஷயம் நடந்தது. தன்னுடைய மைந்தர்கள் திரும்பி வராததைக் கண்டு, அம்சுமானை அழைத்து நான் யாக தீட்சை கொண்டிருப்பதால் வெளியே வரமுடியாது. நீ கிளம்பிப் போய் உன் சிற்றப்பன்களைத் தேடு. அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களை மீட்டு குதிரையையும் தேடி எடுத்து வா. உடனே செய் என்று கட்டளையிட்டார்.

அம்சுமான் வில்லும் வாளும் தரித்து சகோதரர்களைத் தேடிப் போனார். அவரும் திசை யானைகளைக் கண்டு குசலம் விசாரித்து வணங்கி தடவி மகிழ்ந்தார். திசை யானைகள் அம்சுமானை ஆசிர்வதித்து வெகு நிச்சயம் நீ குதிரையோடு திரும்புவாய், என்று உத்திரவாதம் கொடுத்தார்கள். தேடிப் போகையில் பெரிய சாம்பல் குவியலைக் கண்டார். தன்னுடைய சிற்றப்பன்கள் கபிலரால் எரிக்கப் பட்டதை உணர்ந்தார். அவர்களுக்கு நீத்தார் கடன் செய்ய விரும்பினார். அந்த இடத்தில் நீர் கிடைக்கவில்லை. தொலைதூரம் பார்வையை செலுத்த கருடன் உயரே பறப்பது தெரிந்தது.

மருமகனே இந்த உலகத்தின் தண்ணீரால் இவர்களுக்கு நீர் கடன் தரமுடியாது. இவர்கள் கபிலர் என்னும் வாசுதேவரால் எரிக்கப்பட்டவர்கள். எனவே, கங்கையினுடைய ஜலம்தான் தேவை. கங்கை வானத்தில் உலவிக் கொண்டிருக்கிறாள். அவள் பூமிக்கு வந்தால் இந்த பூமி அதைத் தாங்காது. எனவே சிவபெருமானை நினைத்து வணங்கி , கங்கையை அவர் ஏற்று பூமிக்கு வரச்சொல். அந்த கங்கை பூமிக்கு வந்தால் உன்னுடைய முன்னோர்கள் சாபம் தீர்ப்பது மட்டுமல்லாது உன் பித்ரு கடனும் கழியும். இந்த பூமியும் குளிரும்.

குதிரையைக் கொண்டுவந்த அம்சுமான் நடந்தவைகளை சரகரிடம் சொன்னார். சரகர் யாகத்தை பூர்த்தி செய்தார். ஆனால் கங்கையைக் கொண்டுவரும் வழி அவருக்குத் தெரியவில்லை. எப்படி எங்கே எவர் மூலம் என்றெல்லாம் யோசனை செய்தார். எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் பல ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து இயற்கையாக மரணமடந்தார்

சரகனுடைய ஆயுள் முடிந்து அவருடைய பேரன் அம்சுமான் பதவிக்கு வந்தார். அம்சுமானுக்குப் பிறகு அவருடைய மகன் திலீபன் பதவி ஏற்றார். அம்சுமானுடைய தவ முயற்சியும் கங்கையைக் கொண்டு வரமுடியவில்லை. திலீபன் பாட்டனார்கள் வதம் செய்ததைக் கேட்டு, எப்படி தவம் செய்வது என்று தெரியாமல் எவ்விதம் கங்கையை கீழ் இறங்கச் செய்வேன் என்று புரியாமல் கவலையில் இறந்து போனான்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

திலீபனுக்கு தர்மமூர்த்தியான பகீரதன் என்ற பெயருடையவன் புத்திரனாகப் பிறந்தான். பகீரதன் முடிசூடினான். அறுபதாயிரம் அரச குமாரர்களும் பல தலைமுறையாய் எந்தவித விமோசனமும் இல்லாமல் இருந்தார்கள். பகீரதனுக்கு துக்கம் முண்டிற்று. அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை. எனவே, ஆட்சியை மந்திரிமார்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் தவம் செய்ய இமயமலைக்கு போனான். இமயமலைக்கு அடிவாரத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் அவன் கடுமையாக விரதம் இருந்து தவம் செய்தான். பஞ்சாக்னிக்கு நடுவே கைகளை உயரே தூக்கி ஒரு மாதம், ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு புலன்களை அடக்கி தீவிரமாக பிரம்மாவை வேண்டி தவம் செய்ய, பிரம்மா திருப்தி அடைந்தார். வேண்டிய வரம் என்னப்பா என்று அன்புடன் கேட்டார்.

என்னுடைய தவம் உங்களை மகிழ்ச்சி செய்திருந்தால் பிரம்மரே சரகனுடைய முன்னோர்கள் அத்தனை பேரும், என் முன்னோர்கள் அத்தனை பேரும் என் கையால் நீர் பெறுவார்களாக. மகாத்மாக்களான என் கொள்ளுப்பாட்டன்கள் சாம்பல் குவியலாக இருக்கின்றார்களே, அவர்கள் கங்கை நதியால் நனைக்கப் படவேண்டும். பிரம்மனே எனக்கு சந்ததியைக் கொடுக்க வேண்டும். என் இஷ்வாகு பரம்பரை என்னுடன் முடிந்துவிடக் கூடாது. இதுவே நான் கேட்கும் வரம் என்று கை கூப்பினான்”.

உன் விருப்பம் நிறைவேறும்.இஷ்வாகு குலம் அழிவில்லாமல் விளங்கும். ஆனால் கங்கை பூமிக்கு வருவது எளிதல்ல. பரமேஸ்வரனால் தான் கங்கையைத் தாங்க முடியும். எனவே பரமேஸ்வரனை நினைத்து நீ தவம் புரிவாயாக என்று ஆறுதல் கூறிவிட்டு அகன்றார்.

மறுபடியும் பகீரதன் ஒரு காலின் கட்டை விரலை மட்டும் தரையில் ஊன்றி கையை உயரே தூக்கி பரமேஸ்வரனை நோக்கி தவம் செய்தான். காற்றே உணவு. வேறு எந்த ஆகாரமும் இல்லை. இரவு பகலாக ஒரே சிந்தனையாக இருந்தான்.

அது கண்டு உமாபதி வருத்தப்பட்டார். இரக்கப்பட்டார். மிகப் பெரிய உருவெடுத்து கங்கை பூமியை நோக்கி விரைவாக வந்தாள். பூமி நடுங்கிற்று. ஆகாயத்தில் இருந்து வேகமாக இறங்கும் கங்கையை மறித்து சிவபெருமான் கால் அகட்டி இடுப்பில் கை வைத்து கம்பீரமாக நின்றார். தன்னுடைய சிகையில் அவர் ஏற்றார். அதையும் தள்ளி வீழ்த்துவேன் என்று வேகத்தோடு கங்கை முயல சிவபெருமான் தன் சடையில் அதை செலுத்திக் கொண்டார். சடையில் சிக்கிக்கொண்ட கங்கையால் வெளியே வரமுடியவில்லை. கங்கையைக் கண்டு சிவபெருமான் சிரித்தார்.

பிந்துசரஸ் என்ற நீர்நிலையில் கங்கையை பாயவிட்டார். அங்கு அவள் ஏழு பிரிவுகளாக பிரிந்து பூமியை நோக்கி வந்தாள். ஹாலஜினி, வாவினி, நளினி என்ற மூன்று ஆறுகள் கீழ் நோக்கி சென்றன. ஏழாவது நதியான அலக்நந்தா பகீரதனை பின் தொடர்ந்தது.

ரிஷியான பகீரதன் தன் ரதத்தில் ஏறி வேகமாக போக, கங்கை மிக கம்பீரமாக சகல காடுகளையும் அடித்து உடைத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். பேரிரைச்சலோடு பிரவாகித்து வந்தாள். ஆமைகள். முதலைகள், மீன்கள் கூட்டம் கூட்டமாக அந்த நீரில் விளையாடின. நீர் வாழ் பிராணிகள் பலதும் அதில் இருந்ததால் கங்கை அழகோடு விளங்கினாள், மிக உயிர்ப்போடு இருந்தாள். பரமேஸ்வரன் சடையில் இருந்து வந்த நதியில் கந்தர்வ, யட்ச, சித்தர்கள் நீராடினார்கள். விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்குத் தள்ளப்பட்ட பல ஆத்மாக்கள் நீராடிப் புண்ணியம் பெற்றார்கள். விண்ணுலகிற்கு மறுபடியும் திரும்பினார்கள். தெளிவான நதியை பகீரதன் அழைத்துப் போனான். கங்கை நதி மிக சக்திவாய்ந்த ஜான்ஹு என்ற யாகம் செய்து கொண்டிருந்த வேள்விச் சாலையை நீரில் மூழ்கடித்தாள்.

தொடரும்

About பாலகுமாரன்

பாலகுமாரன்
சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன