முகப்பு / வலைத்தலம் / உயர்ந்தவர் யார்?

உயர்ந்தவர் யார்?

துறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. மிகச் சிறந்த, புனிதத் தன்மை பெற்ற, கடவுள் பக்தி கொண்ட மனிதன் என்று தன்னைத் தானே எண்ணிக்கொண்டார். இதனால், பொதுமக்களிடம் இருந்து விலகி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த ஊர் மக்கள் யாருமே தன்னோடு இருக்கத் தகுதியற்றவர்கள்: அவர்கள் இழிவானவர்கள் என்று கருதினார். அவர்களை அருகில் அனுமதித்தாலோ, அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டாலோ தனக்குக் கறை பட்டுவிடும் என்று நினைத்தார்.

புனித நதியில் நீராடல், யார் கையும் படக்கூடாது என்பதற்காக, தானே சமைத்து உண்ணும் தனிப்பட்ட உணவு, பல மணி நேரம் தொடர்ந்து கண்களை மூடி, இறைவன் மீதான மந்திரங்களை ஓதுதல், எவருடைய தொடர்பும் இன்றி, மற்றவர்களிடம் இருந்து விலகி, தொலைதூரத்தில் வாழும் ஆன்மீக வாழ்வு ஆகிய இவை எல்லாமும் அவரைத் தூய்மையான தெய்வீக மனிதனாக மாற்றிவிட்டதாக தனக்குத் தானே கற்பனை செய்துகொண்டு இறுமாப்பில் வாழ்ந்துவந்தார்.

அவருடைய மனத்தில் துளி அன்புகூட இல்லை. மனிதர்களின் ஏற்றத் தாழ்வுகள் பற்றியோ, ஏழைகளின் நிலையைப் பார்த்தோ அவரிடம் அணு அளவுகூட இரக்கம் ஏற்பட்டதில்லை. கருணை மிக்க சூரிய ஒளியும் தூய்மைப்படுத்தும் துப்புரவான காற்றும் புக முடியாத அச்சம் தரத்தக்க இருண்ட, ஆள் நடமாட்டமற்ற, ஆழமான பாதாளம் போல இருந்தது அவருடைய மனம்.

அழிவைத் தரும் குற்றங்களைத் தடுக்கவோ, ஒருவருக்கு அறிவுரை கூறி உதவவோ அவர் நினைத்ததே இல்லை. அடுத்தவர்களுக்காக சிறு தியாகம் செய்யவும் அவருக்கு மனமில்லை.

அவரை யாராவது தொடர்புகொள்ள முயன்றால், கடுமையாக கோபப்படுவார். நோய் தொற்றிக்கொள்ளுமோ என்று அஞ்சுவதுபோல, தான் இருக்கும் இடத்தை யாரையும் நெருங்க விடமாட்டார். தவ வாழ்வு மேற்கொண்டபோதும் முன்கோபக்காரர் அவர். கோபத்தில் கொதித்தெழுந்தால், அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இவரைப் பற்றித் தெரியாத, ஊருக்குப் புதிதாக வந்த சலவைத் தொழிலாளி ஒருவர், அந்த ஆற்றுக்கு வந்தார். அப்போது அந்தத் துறவி, ஆற்றங்கரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்துகொண்டிருந்தார். அந்த சலவைத் தொழிலாளி, அழுக்குத்துணிகளை தண்ண்ணீரில் நனைத்து, கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினார். துணியை அடித்துத் துவைத்தபோது, அதன் அழுக்கு நீர் பறந்து துறவி மீது பட்டது. கண் திறந்து பார்த்தார் துறவி. சலவைத் தொழிலாளி துணி துவைப்பதைக் கண்டார்.  புனிதமான தனது இடத்தில் வந்து துணி துவைத்ததுடன், அழுக்கு நீரை தன் மீது தெறிக்கவிட்டு தன்னைக் களங்கப்படுத்திவிட்டதாக சலவைத் தொழிலாளி மீது கடும் கோபம் கொண்டார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அந்தத் தொழிலாளியை கண்டபடி திட்டித் தீர்த்தார். சாபமிட்டார். உடனடியாக இந்த இடத்தைவிட்டு ஓடிவிடு என்று கத்தினார்.

துணி துவைக்கும் வேலையில் முழு கவனமாக இருந்த அந்த தொழிலாளி, துறவி சொன்னதை கவனிக்கவேயில்லை.  ஏதுவும் அறியாத அப்பாவியாக துணி துவைத்துக்கொண்டிருந்தார்.

தன் வார்த்தையை அவர் மதிக்கவில்லையென்று, கடும் கோபமடைந்த துறவி, நிதானம் இழந்தார். அந்தத் தொழிலாளியை நோக்கி ஓடினார்.  கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஒரு தடியால் அந்தத் தொழிலாளியை சரமாரியாக அடித்தார். எதிர் பார்க்காத இந்தத் தாக்குதலால், அந்தத் தொழிலாளி நிலைகுலைந்தார்.

“எதற்காக என்னை இப்ப்படி அடிச்சிங்க? என்ன தப்பு செய்தேன்?” என்று நலிந்த குரலில் கேட்டார்.

என்ன துணிச்சல் இருந்தால், என் குடிலுக்கு அருகில் நீ வந்திருப்பாய்? அழுக்கு நீரை என் புனித உடல் மீது படச் செய்து, என்னைக் களங்கப்படுத்திவிட்டாயே” என்று கத்தினார்.

தன்னைத் தானே நொந்துகொண்ட அந்தத் தொழிலாளி, “மன்னிச்சுடுங்கய்யா” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

தான் அசுத்தப்பட்டுவிட்டதாகக் கருதிய துறவி, ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கினார். சற்று தொலைவில், சலவைத் தொழிலாளியும் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். துறவிக்கு ஆச்சரியம். இவன் ஏன் குளிக்கிறான் என்று சந்தேகம் எழுந்தது அவருக்கு.

நான் குளிப்ப்பது நியாயம். நீ ஏன் குளிக்கிறாய்? என்று கேட்டார் துறவி.

நீங்கள் என்ன காரணத்துக்காக குளிக்கிறீர்களோ, அதே காரணத்துக்காகத்தான் நானும் குளிக்கிறேன் என்று அமைதியாக பதில் சொன்னார்.

துறவிக்கு ஆச்சரியம். இழிகுலத்தில் பிறந்த உன்னைத் தொட்டுவிட்டதால் நான் குளிக்கிறேன். என்னைப் போன்ற தெய்வீக சாதுவின் கை பட்டதால் உனக்கு எந்த அசுத்தமும் சேராதே. நீ ஏன் குளிக்கிறாய்? என்று கேட்டார்.

அமைதியான குரலில் சலவைத் தொழிலாளி பேசினார். ஐயா, உங்கள் பார்வையில் நான் இழிந்த குலத்தில் பிறந்தவன். ஆனால், இழிந்த குலத்தவனைவிட மோசமான ஒருவர் தங்கள் மூலம் என்னைத் தொட்டுவிட்டார். தன்னை மறந்து என் மீது கை வைத்து அடிக்கும்படிச் செய்துவிட்ட, பொங்கி எழுந்த தங்களது உணர்ச்சி,  வெறுப்பும் அசுத்தமும் கொண்டவை. அத்தகைய உணர்வுகள் கொண்ட ஒருவர் என்னைத் தீண்டிவிட்டதால் நானும் களங்கப்பட்டுவிட்டேன். அதனால் குளிக்கிறேன் என்றார்.

துறவியின் கண்களை மறைத்திருந்த திரை அறுந்துவிழுந்தது. சலவைத் தொழிலாளி சொன்னதை ஆழ்ந்து சிந்தித்தார். ஆடம்பரமான ஆன்மீக வழிபாடுகளும் சாஸ்திர வழியில் கடைபிடித்து வந்த தவ வாழ்வும் சொல்லித் தராத பாடத்தை, சலவைத் தொழிலாளியின் சொற்கள் சொல்லிக் கொடுத்துவிட்டன. தன் உணர்வுகளை வெல்கின்ற ஒருவன், ஒரு பெரிய நாட்டை ஆளுகின்ற பேரரசனைவிட வலிமை பெற்றவனாகிறான். உணர்வுகளை அடக்க முடியாதவனைவிட இழிந்தவன் எவனுமில்லை. இந்த உண்மையை உணர்ந்தார் துறவி.

தன்னுடைய தெய்வத்தன்மை குறித்த தற்பெருமை, அடக்க முடியாத கோபத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது ஆகிய குணங்களையும், தான் கொடுத்த அடியையும் அமைதியாக ஏற்றுக்கொண்ட சலவைத் தொழிலாளியின் பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்தார் துறவி. தன்னைவிட  அந்தத் தொழிலாளி எவ்வளவு மேலானவர் என்பதை உணர்ந்தார். இருவரில், இழிந்தவனாக நடந்துகொண்டது யார் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தார்.

About admin

Avatar

மேலும் படிக்கவும்

எல்லாருக்கும் மகிழ்ச்சி தருவது எது?

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில்_அனைவருக்கும் #மகிழ்ச்சியைதரக்கூடியபொருள் எது என்பதே அவர் கேள்வி. ‘மன்னரின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன