ஞானமித்ரர் – 9

நிலவொளியில் குளிர்ந்த மனம்

வானத்தில் சூரியன் முழுமையாக மறையாததால், நிலா நாணப்பட்டு மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது, அந்த நாணத்திற்கு சாட்சியாக மேல் வானம் சிவந்திருந்தது. ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரமத்தின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த, சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை தொழிலதிபர் ஒருவர் தனிமையில் சந்தித்துப் பேசினார்.
“சுவாமி, நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன்தான். அல்லும் பகலும் மிகக் கடுமையாக உழைத்து இன்று பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளேன். எனக்கு உறுதுணையாக என் நண்பனை பார்ட்னர் ஆக்கிக்கொண்டு அவனையும் உயர்த்தியுள்ளேன். அவனும் கெட்டிக்காரன்தான். ஆனால், சமீப காலமாக அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை. என்னுடைய எதிரிகளிடம் நட்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறான். என்னுடன் முன்பு போல இணக்கமாக இருப்பதில்லை. தொழில்களையும் சரிவர கவனிப்பதில்லை. எங்கே எனக்கெதிராக வேலை செய்கிறானோ? என்னை ஏமாற்றி விடுவானோ? என்று பயமாக இருக்கிறது. இரவெல்லாம் சரியாக தூங்க முடிவதில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் சுவாமி.”
அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்ட ஸ்ரீ ஞானமித்ரர், “அன்பரே, நீங்கள் ஞானி துக்காராம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். அவர் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். ஒரு நாள் மதிய உணவு நேரம். அவரை மாற்றி விட கடையில் ஆள் இல்லாததால், அந்தப் பக்கம் வந்த ஒருவரிடம் கடையைப் பார்த்துக்கொள்ள பணித்து விட்டுச் சாப்பிடச் சென்றார். வந்தவன் திருடன். சாதாரண திருடன் இல்லை, திருடர் கூட்டத்துக்கே தலைவன். பணப்பெட்டி திறந்தே இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான். மனத்தில் சில திட்டங்கள் உருவெடுத்தன. அப்போது சிலர் வந்து பொருட்களை வாங்கிச் செல்ல, அவனும் காசை வாங்கி கல்லாவில் போட்டான்.
அந்த சமயம் அவ்வழியே வந்த இவன் நண்பன் விஷயத்தை தெரிந்து கொண்டு, “அருமையான சந்தர்ப்பம், அத்தனைப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம்” என்றான். திருடன் யோசித்தான். தன்னை நம்பி கடையை ஒப்படைத்துச் சென்ற அந்த நல்ல மனிதருக்கு துரோகம் செய்ய மனம் ஏனோ ஒப்பவில்லை. ஆகையால் இத்திட்டத்தை மறுத்து, நண்பனை திருப்பி அனுப்பிவிட்டான்.
சிறுது நேரம் கழித்து வந்த துக்காராமிடம் “அனைத்துப் பொருட்களும், பணமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். நான் கிளம்பவேண்டும்” என்றான். அதைக்கேட்ட துக்காராம், “ஏன் இப்படிச் சொல்கிறாய்? உன் மேல் நம்பிக்கை இல்லாமலா கடையை உன்னிடம் ஒப்படைத்துச் சென்றேன். எதையும் சரி பார்க்கத் தேவை இல்லை. அதுமட்டுமல்ல, நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய். உன்னைப் போய் சந்தேகப்படலாமா? கடையைப் பத்திரமாக பார்த்து கொண்டதற்கு நன்றி” என்று கூறினார். இதைக் கேட்டவுடன் திருடன் அவருடைய கால்களில் விழுந்து,. “நான் ஒரு திருடன். உங்கள் நல்ல குணமும், நீங்கள் ஏன் மீது வைத்த நம்பிக்கையும் என்னை அடியோடு மாற்றிவிட்டது. இனிமேல் நான் ஒருபோதும் திருட மாட்டேன்.” என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
கதையை சொல்லிமுடித்த ஸ்ரீஞானமித்ரர் அந்த தொழிலதிபரின் முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டு தொடர்ந்தார். “ஒருவர் வைத்த நம்பிக்கை ஒரு திருடனையே நல்லவனாக மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கே அன்பு நிரம்பி வழிகிறதோ.. அங்கே நம்பிக்கை செழித்து வளர்கிறது. நாம் நம்பிக்கை வைக்கும் ஒருவர் நம்மிடம் உண்மையாக இல்லையென்றால்.. நம்முடைய நம்பிக்கை முழுமையானதாக இல்லை என்றுதான் பொருள். சந்தேகத்தின் பேரில் எழுப்பப்படும் நம்பிக்கை சீக்கிரமே தகர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.
கடவுளிடம் சென்று நம் பிரார்த்தனைகளை ஒப்படைத்து விட்டும்கூட, அவை நிறைவேறுமா? என்ற அவநம்பிக்கை நமக்கு இருக்கத்தான் செய்கிறது. கடவுள் மீதே நமக்கு முழு நம்பிக்கை இல்லாதபோது, மனிதர்கள் மீது வைக்கக் கூடிய நம்பிக்கையும் பலவீனமாகத்தான் இருக்கிறது.
தொழில் தொடங்கிய ஆரம்பத் தருணங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்து தொழிலை மேம்படுத்தியிருப்பீர்கள். அப்போது இது மாதிரியான நம்பிக்கைத் துரோகம் குறித்த சந்தேகங்கள் எழுந்திருக்குமா? ஆனால், இப்போது இருவரும் தொழிலில் உச்சத்தை எட்டிவிட்டீர்கள், பிரிந்தாலும் அதிக பாதகமில்லை என்கிற நிலையில்.. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க விரும்பாத தன்முனைப்பு அதிகமாகிவிட்டது. நீங்கள் சந்தேகப்படுவதைப் போல் அவர் உண்மையிலேயே உங்களுக்கு எதிராக செயல்படுகிறாரா, இல்லையா? என்பதைவிட, அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
வானத்தில் நிலவு மெதுவாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்ரீ ஞானமித்ரர் பேசுவதை நிறுத்திவிட்டு, வானத்து நிலவைக் காட்டி… “சூரியனின் மறைவுக்குப் பின்தான் நிலாவின் ஒளியை நாம் உணரமுடியும்… அதைப் போலத்தான், மனத்தில் சந்தேகம் மறைந்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.
இரண்டு பேரும் குடும்பத்தோடு ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். பரிசுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். கடந்தகால இனிய தருணங்களை அசைபோடுங்கள். எதிர்காலம் குறித்து மனம் விட்டுப் பேசுங்கள். சேர்ந்தே பிசினஸ் செய்வதா.. இல்லை பிரிந்து சென்று தனித்தனியாக தொழிலை கவனித்துக் கொள்வதா என்று முடிவெடுங்கள். எந்த முடிவை எடுப்பினும் நட்பை விட்டுவிடாமல் தொடருங்கள்.” ஸ்ரீ ஞானமித்ரரின் இந்த நீண்ட உரை அந்த தொழிலதிபரின் மனத்தில் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதே சமயம் வானத்தில் நிலவு முழுவதுமாக வெளிப்பட்டு பூமியின் மீது குளுமையை பரப்பியது.

About கல்லிடை வெங்கட்

Avatar

மேலும் படிக்கவும்

ஞானமித்ரர் – 6

புதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன