ஞானமித்ரர் – 8

நஞ்சை முறிக்கும் மருந்து

கதிரவன் மேற்கில் கடலுக்குள் மூழ்கி வெகு நேரமாயிற்று. நிலவின் ஒளியில் கரையை நோக்கிப் பாய்ந்து வந்த கடல் அலைகள், கரையைத் தொட்டவுடன், எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துப் பின் வாங்கின. கடற்கரையின் அருகில் இருந்த ‘ஸ்ரீஞானாலயம்’ ஆசிரமத்தில், சுவாமி ஸ்ரீஞானமித்ரரிடமிருந்து கிளம்பிய உற்சாக அலை ஆன்மீக அன்பர்களின் மனத்தை அமைதியால் நிரப்பியது. என்றும் மாறாத புன்முறுவல் தாங்கிய முகத்துடன், சுவாமிகள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
மாமியார்-மருமகள் உறவில் விரிசல் விழ மாமியார்கள் மட்டுமே காரணம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மருமகளை தன்னுடைய சொந்தப் பெண்ணைப் போல நினைக்கும் எத்தனையோ மாமியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லா மாமியார்களும் மோசமானவர்கள் இல்லை. அதேபோல எல்லா மருமகள்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பதுவுமில்லை.
ஒரு ஜோக் சொல்வதுண்டு. இரு கல்லூரி தோழிகள் பல வருடங்களுக்குப் பின்பு சந்தித்து பழைய விஷயங்களை எல்லாம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டார்கள். இருவர் பேச்சும் மாமியார்கள் பக்கம் திரும்பியது. அதில் ஒருத்தி கேட்டாள்..
“கல்யாணமான புதுசுல உனக்கும், உன் மாமியாருக்கும் தினமும் சண்டை நடக்குமே, இப்ப எப்படி?”
“இப்ப அப்படி இல்ல. எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து பத்து வருஷமாச்சு!” என்றாள் மற்றவள்.
“அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அவள்.
“ஆமாமா.. அவங்க செத்து பத்து வருஷமாச்சு!” என்று சோகமாக பதிலளித்தாள் இவள்.
எப்பேர்ப்பட்ட மாமியார்-மருமகள்? மாமியார் சாகும்வரையில் சண்டை நடந்திருக்கிறது. இப்போது சண்டை போட மாமியார் இல்லையென்ற சோகம் வேறு! இன்றைய ஹைடெக் யுவதிகள், தங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே மாமியார்-மாமனார் இல்லாத குடும்பம்தான் வேண்டும் என்று நிபந்தனை போடும் அளவிற்குத்தான் நவீன சமூகம் இருக்கிறது. அவர்களுடைய மனம் இப்படித் தானாகவே சுருங்கி விட்டதா, இல்லை தற்போதைய நானோ உலகம் அவர்களை அப்படி மாற்றிவிட்டிருக்கிறதா? என்று பட்டிமன்றம்கூட வைக்கலாம். தன் கணவனும், குழந்தையும் மட்டும் போதும், வேறு உறவுகளே தேவையில்லை என்று தனியாக வாழும் கலாச்சாரம் பெருகிவிட்டது. ஆனாலும் இதையெல்லாம் மீறி சில மாமியார்களும், மருமகள்களும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி?
சீன தேசத்தில் ஒரு கதை உண்டு. லீ-லீ என்றப் பெண்ணிற்குத் திருமணம் நடந்தது. கணவனது குடும்பம் கூட்டுக் குடும்பம். மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை. லீ-லீக்கு மாமியார் மீதுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒருநாள் லீ-லீ தன் தந்தையின் நண்பர் ஒருவரை சந்திக்கச் செல்கிறாள். எதற்குத் தெரியுமா? தன் மாமியாரைக் கொல்வதற்கு ஆலோசனைக் கேட்பதற்காக..
ஆம். லீ-லீ தேடிச் சென்றது ஒரு மூலிகை வைத்தியரை. தன் மீது யாருக்கும் சந்தேகம் வராதவகையில் தன் மாமியாரைக் கொல்வதற்கு நஞ்சு ஒன்றைத் தருமாறு வைத்தியரிடம் கேட்டாள். மருத்துவரும் ஒரு மூலிகைப் பொடியை அவளிடம் கொடுத்து, “இது மெல்லக் கொல்லும் நஞ்சு. இதை தினமும் காலையிலும், மாலையிலும் பாலில் கலந்து உன் மாமியாருக்குக் கொடு. மூன்றே மாதங்களில் இறந்துவிடுவார். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த மூன்று மாதங்களும் உன் மாமியாரின் மீது மிகவும் அன்பாக நடந்து கொள்வதைப் போல் நடி. அப்போதுதான் உன் மீது யாருக்கும் சந்தேகம் வராது.” என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
இரு மாதங்கள் கழித்து வந்த லீ-லீ, “ஐயா, இந்த விஷமருந்தை முறிப்பதற்கு வேறு மாற்று மருந்து இருந்தால் உடனேத் தாருங்கள்” என்று பதற்றமாகக் கேட்டாள். “பதற்றப்படாமல் விஷயம் என்னவென்று முதலில் சொல்.” என்றார் வைத்தியர். அதற்கு அவள், “நீங்கள் கூறியது போல், என் மாமியாருக்கு தினமும் பாலில் மருந்து கலந்து கொடுத்தேன். ஆரம்பத்தில் என் மாமியாரிடம் அன்பாக இருப்பது போலவும் நடித்தேன். ஆனால் போகப் போக நான் அன்பாக இருப்பதைப் பார்த்து என் மாமியாரும் என்னிடம் மிகவும் பிரியமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையில் பாசம் அதிகமாகிவிட்டது. இப்போதுதான் என் தவறு என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். என் மாமியார் இறந்துபோகக் கூடாது. தயவு செய்து எப்படியாவது மாற்று மருந்துக் கொடுத்து அவரை காப்பாற்ற உதவுங்கள்.” என்று அழாத குறையாகக் கெஞ்சினாள்.
இதைக் கேட்ட மருத்துவர் சிரித்துக் கொண்டே, ”பயப்படாதே பெண்ணே, நான் கொடுத்து வெறும் சத்துப்பொடிதான். அதில் நஞ்சொன்றுமில்லை. நஞ்சு உன் மனத்தில்தான் கலந்திருந்தது. அதுவும் இப்போது நீங்கிவிட்டது. அன்புதான் உன் மனதிலிருந்த நஞ்சை முற்றிலுமாக அகற்றியிருக்கிறது. கோபம், விரோதம், குரோதம் போன்ற, மனத்தில் கலந்திருக்கும் நஞ்சுகளைக் குணப்படுத்தும் ஒரே அருமருந்து அன்பு மட்டும்தான் என்பதை இப்போதாவது உணர்ந்துகொண்டாயே, மிக்க மகிழ்ச்சி.” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
சுவாமி ஸ்ரீஞானமித்ரர் தொடர்ந்து பேசலானார். இந்தக் கதை எதோ வெளிநாட்டில் மட்டுமே நடக்கும் என்று நினைக்க வேண்டாம். நம் ஊரிலும் இப்படிக் கதைகள் உண்டு.
ஒரு வீட்டில் மாமியார் இறந்துவிடுகிறார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வருகிறார்கள்.

“நல்லாதான் இருந்தாங்க… காலையில கிணத்துல தண்ணி இறைக்கப் போனவங்க, தவறி உள்ளே விழுந்துட்டாங்க..” என்று அந்த வீட்டின் மருமகள், மாமியார் எப்படி இறந்தார் என்கிற கதையை சொல்லி கண்ணீர்விடுகிறாள்.

இதைக் கேட்ட பெண்களில் சிலர், “ம்.. நம்ம வீட்லயும்தான் கிணறு இருக்கு. மாமியாரும் இருக்காங்க. இந்த மாதிரி ஏதும் நடக்குதா என்ன!” என ஏக்க பெருமூச்சு விட்டனர்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, இறந்தவரின் மருமகள், “எல்லாம் தானாவா நடக்கும்? நாமதான் ஒத்தாசையா இருந்து உதவி செய்யணும்!” என்றாள், கண்களைத் துடைத்தபடி. எப்படி இருக்கிறது கதை!
மாமியாரைத் தரக்குறைவாகவும், மரியாதை இல்லாமலும் நடத்தும் மருமகள்கள் கொஞ்சம் சுற்றும் முற்றும் பாருங்கள். அங்கே உங்கள் மகன் நின்று கொண்டிருக்கக்கூடும். உங்களின் நடவடிக்கைகளை அவன் மௌன சாட்சியாக கவனித்துக் கொண்டிருக்கக்கூடும். அது அவன் ஆழ்மனத்தில் பதியக்கூடும். நீங்களும் ஒருநாள் மாமியார் ஆகக்கூடும். இப்போது நீங்கள் என்ன செய்தீர்களோ, அதை உங்கள் மருமகள் உங்களுக்கும் நாளை செய்யக்கூடும். அப்போது உங்கள் மகனும் அதைக் கண்டும் காணாமல் இருக்கக்கூடும். ஜாக்கிரதை.
வாழவேண்டிய காலம் முழுவதும், பிள்ளைகளுக்காக ஓடாக உழைத்துத் தேய்ந்த பெரியவர்களின் இதயத்திற்கு ஒத்தடம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து உதாசீனப்படுத்தாதீர்கள். கணவனுடைய பொருள் உங்களுக்கு எப்படிச் சொந்தம் என்று கருதுகிறீர்களோ, அதே போல அவர்களுடைய பெற்றோர்களையும் உங்களுடைய பெற்றோர்களாக நினைக்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடனும், நட்புறவுடனும் நடந்து கொள்ளும்போதுதான், அது நல்ல குடும்பமாகிறது. நல்ல குடும்பத்தை உருவாக்குவதன் மூலமாகத்தான், நல்ல சமுதாயத்தை கட்டமைக்கமுடியும். ஆன்மீக சொற்பொழிவுகளில் கலந்துகொள்ள வரும் அன்பர்கள், இது போன்ற கருத்துகளை கேட்டால் மட்டும் போதாது, நடைமுறையிலும் பின்பற்றவேண்டும். அப்போதுதான் நீங்கள் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழமுடியும்.

About கல்லிடை வெங்கட்

Avatar

மேலும் படிக்கவும்

ஞானமித்ரர் – 6

புதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன