ஞானமித்ரர் – 10

சாபமும் வரமாகட்டும்

“வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது!”
சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார்.
‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக உருவெடுத்திருந்தது..
சுவாமிகள் மௌனத்தைக் கலைத்துப் பேச ஆரம்பித்தார்…
ஒரு குரு தன் சீடர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றார். சீடர்கள் அனைவரும் காட்டின் அழகை அள்ளிப் பருகியபடி, இயற்கையின் அற்புதத்தை ரசித்து மகிழ்ந்தனர். அவ்வபோது சில நீதி போதனைகளும், கலந்துரையாடல்களும் நடந்துகொண்டிருந்தது.
ஒரு தேக்கு மரத்தைக் காட்டி குரு கேட்டார், “இதனினின்று என்ன செய்யலாம்?”. சீடர்கள் பல்வேறு பதில்களை அளித்தனர். இறுதியில் ஒரு புத்திசாலி சீடன், “இம்மரத்தை இழைத்தால் கட்டில், அலமாரி போன்ற உபயோகமான மரச்சாமான்கள் செய்யப்பயன்படும். அதே நேரம், பிளந்தால் விறகாக மாறும். பயன்படுத்துபவர்களைப் பொறுத்து இதன் பயன் மாறுபடும்.” எனக் கூறினான்.
சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் கதையை நிறுத்தி, அரங்கம் முழுவதும் தன் பார்வையை ஒரு முறை சுழல விட்டு, மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்.
நம் வாழ்க்கையும் இந்த தேக்கு மரத்தைப் போன்றதே. நம் நோக்கம் எதுவாக இருக்கிறதோ, அதைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும். நல்ல இலக்குகள் வாழ்வின் நோக்கமாக இருந்தால், வாழ்க்கை எனும் தேக்கு மரம், உபயோகமான மரச்சாமான்களாக மாறும். இல்லையென்றால், விறகாக உபயோகமற்றுப் போகும். வாழ்கையில் உயரவேண்டுமென்றால் முதலில் மனதால் உயரவேண்டும். தடாகத்தில் தண்ணீர் உயர, அதன் மீதிருக்கும் தாமரையும் உயரும். உள்ளத்தின் உன்னத நோக்கங்கள் உயர, வாழ்வும் உயரும்.
உயர்ந்த இலக்குகளோடு எப்போதும் தயார் நிலையில் இருந்தால், கிடைக்கும் வாய்ப்புகள் வரமாக மாறும். ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனம் அருகிலிருக்கும் சிறு தீவு ஒன்றில், அதன் விற்பனைக் கிளையை திறக்க விரும்பியது. அங்கு விற்பனை எப்படி இருக்கும் என்று அறிந்து வருவதற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி வைத்தது. திரும்பி வந்த அந்தப் பிரதிநிதி, அந்த தீவில் நம் செருப்புகள் விற்பனை ஆகாது என்று கூறினான். அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்ன காரணம் என வினவியபோது.. “அங்கே ஒருவரும் செருப்பு அணிவதில்லை” என பதிலளித்தான்.
தலைமை அதிகாரி இதனை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொரு பிரதிநிதியை அனுப்பி, நிலைமை என்ன? என ஆய்ந்து வரச் சொல்லி அனுப்பினார். திரும்பி வந்தவன் “அந்த ஊரில் நம் செருப்புகள் அதிகமாக விற்பனையாகும், உடனே நம் கிளையை அங்கே துவக்கலாம்.” எனக் கூறினான். தலைமை அதிகாரி “எப்படி சொல்கிறாய்?” எனக் கேட்டதற்கு அவன் தந்த பதில்.. “அங்கே ஒருவரும் செருப்பு அணிவதில்லை. செருப்பு அணிவது உடல் நலத்துக்கு நல்லது என்ற விழிப்ப்புணர்வை அந்த மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அவ்வளவுதான். அங்கே அமோகமாக விற்பனையாகும்” என்றான். குறுகிய காலத்தில் அந்நிறுவனத்தால் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டான் அவன்.
எதை ‘தடை’ என முன்னவன் நினைத்தானோ.. அதையே ‘வாய்ப்பாக’ பின்னவன் கருதினான். தன்னம்பிக்கையுள்ள ஒரு நேர்மறை சிந்தனையாளனுக்கு தடைகள் என்பது அவன் வெற்றிக்கான படிகளாக மாறும் என்பதை இக்கதை நிரூபிக்கிறது.
வாழ்க்கை எப்போதும் வாய்ப்புகளால் ஆனது, சவால்களால் நிறைந்தது. இங்கே மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். வாய்ப்பைத் தவறவிடும் மூடர்கள், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமைசாலிகள். வாய்ப்பையே உருவாக்கும் சாதனையாளர்கள். மூடர்களை யாரும் நேசிப்பதில்லை. திறமைசாலிகளை யாரும் வெறுப்பதில்லை. ஆனால், சாதனையாளர்களை போற்றிக் கொண்டாடுவார்கள்.
ஆகவே அன்பர்கள் அனைவரும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதைவிட சிறந்தது.. வாய்ப்பை நீங்களே உருவாக்கி சாதனைகள் படைக்கும் சாகசக்காரர்களாக மாறுவது. மீண்டும் நான் முதலில் கூறியதை நினைவு படுத்துகிறேன், ‘வாழ்க்கை ஒரு வாய்ப்பு. அதை வரமாகவும். சாபமாகவும் மாற்றுவது நம் கைகளில்தான் உள்ளது’.
ஞானமித்ரரின் உரையைக் கேட்ட அன்பர்களின் கரவொலி அரங்கத்தின் கூரையைத் தாண்டி எதிரொலித்தது. பெருமழை ஓய்ந்து தண்ணீர் பள்ளத்தை தேடி நிரப்பியது. ஆசிரமத்திற்கு வெளியே சாலைகளும், உள்ளே பக்தர்களின் மனமும் தூய்மையாகி இருந்தது.

About கல்லிடை வெங்கட்

Avatar

மேலும் படிக்கவும்

ஞானமித்ரர் – 6

புதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன