முகப்பு / மனம் மலரும் கதைகள் / வாழ்வு, தேவை, ஆசை

வாழ்வு, தேவை, ஆசை

மன்னர் பொன்னரசன் ஒரு நாள், அரசகுரு ஆளுடை நம்பியிடம், வாழ்வு, தேவை, ஆசை இவற்றுக்கான வாழ்வியல் தத்துவத்தைக் கூறுமாறு கேட்டார். சில குறிப்புகளைக் கூறினார் குரு.
அதன்படி, அரசனுக்கு முன் பாதுகாப்புக்கும் பாதை காட்டவும் செல்லும் குதிரை வீரன் வல்லவன் வரவழைக்கப்பட்டான். மன்னன் அவனைப் பார்த்து, “ உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் குதிரையில் சென்று, அடையாளம் இட்டுவா. அவ்வளவு இடத்தையும் உனக்கே தருகிறேன்” என்றான்.

“மாமன்னரே! தாங்கள் தரும் மாத ஊதியமே எனக்குப் போதும். மேலும், என் தந்தைக்காக தாங்கள் தந்த மானிய வருமானமும் வருகிறது. தேவை எனில் தங்களிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வேன். எனக்கு இப்போது எதுவும் வேண்டாம் மன்னா” என்று மறுத்துவிட்டான்.

பின்னர், தனக்கு இரு பக்கமும் பாதுகாப்புக்காக வரும் குதிரை வீரர்களை தனித் தனியாக அழைத்தான். இதே வாய்ப்பு அவர்கள் முன்பும் வைக்கப்பட்டது. அவர்களும் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் மெல்ல மெல்ல, “மன்னா! அவ்வளவு வேண்டாம். தாங்களாகப் பார்த்து எவ்வளவு தருகிறீர்களோ அதுவே போதும்” என்று கூறினர்.

தனக்குப் பின்னால் பாதுகாப்புக்கு வரும் குதிரை வீரன் ஆசைத்தம்பி அழைக்கப்பட்டான். ’’உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் குதிரையில் சென்று, அடையாளம் இட்டுவா. அவ்வளவு இடமும் உனக்கு மானியமாகத் தருகிறேன்” என்றான் மன்னன்.

பேராசைகொண்ட ஆசைத்தம்பி, மிகவும் மகிழ்ச்சியுடன், சரி மன்னா என்றான். குதிரை மீது தாவி ஏறினான். தட்டிவிட்டான் குதிரையை. இலகானை இழுத்துவிட்டு, குதிரையின் அடிவயிற்றில் காலால் உதைத்து, சவுக்கால் அடித்து விரட்டினான் குதிரையை. வெறி பிடித்தவன் போல, காற்றை விடவும் வேகமாகப் பறந்தான் குதிரையில். நீண்ட நிலப்பரப்பை வளைத்துவிட்டான். ஆனால், குதிரை கடுமையாக களைத்துவிட்டது. கடும் வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது குதிரை.

நீரும் சோறும் இன்றி வந்ததால், ஆசைத்தம்பியும் சோர்ந்து விழுந்தான். உடலில் நீர்ச்சத்து குறைந்தது. உடல் கலகலத்தது. கண்கள் இருண்டன. உதவிக்கு அங்கே யாரும் இல்லை. ஆவி பிரியப்போவதை உணர்ந்தான் ஆசைத்தம்பி.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அப்போது சிந்திக்கத் தொடங்கினான்.

“குதிரையை ஏன் இவ்ளவு கடுமையாக ஓட்டிவந்தோம்? பசி, தாகம் மறந்து வந்தது ஏன்? ஆசைதானே காரணம்? இல்லை. பேராசை. எவ்வளவு காலம்தான் மன்னன் பின்னால் செல்வது? சிற்றரசன் ஆனால், நம் பின்னால் ஒருவன் வருவானே என்ற பேராசையும் ஏக்கமும்தான் இப்படி செய்யக் காரணம். மிகப் பெரிய நிலப்பரப்பை வளைத்துவிட்டேன். ஆனால், உயிர் பிரியப் போகிறது. இப்போது தேவை ஆறடி மண் மட்டும்தானே இனி நான் காணப்போவது என்ன? மண்ணுக்கும் பொன்னுக்கும் புகழுக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டுப் பேயாக அலைந்தேன்.

மனைவி, மக்கள், மகிழ்ச்சி அனைத்தையும் பணயம் வைத்தேன். உணவைக்கூட சுவைத்துச் சாப்பிடாமல் அவசர கதியில் பறந்தேன். இருப்பதை ரசித்துச் சுவைக்காமல், இல்லாததைத் தேடி அலைந்தேன் இப்போது வாழ்க்கையையே தொலைத்துவிட்டேன். இன்பம் பொருளில் இல்லை. அன்பைக் கொடுத்துப் பெறுவதில் உள்ளது. இப்போது உணர்கிறேன். இனி என்ன பயன்?

ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழவே வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணராமல் போனேன். தேவையான ஆசை, அதைப் பெற அளவான முயற்சி, எளிமையான உணவு, இயல்பான ஓய்வு, இயற்கை மீது அன்பு. இவை எவையுமின்றி வீழ்ந்தேனே….” அவன் உயிர் பிரிந்தது.

மறுநாள் மாலை, மன்னனிடம் வந்த வீரர்கள், “ மன்னா! எண்பது மைல் தொலைவில் எழ முடியாத குதிரை அருகில் இறந்து கிடந்தான் நம் குதிரை வீரன். குதிரை, லாயத்தில் கிடத்தப்பட்டுள்ளது. மருத்துவர் பரிசோதிக்கிறார்” என்றனர்.

அரண்மனை மருத்துவரைப் பார்க்கிறான் மன்னன். “ குதிரை வீரனை பரிசோதித்தேன். நீர் வற்றி, களைப்பால் நினைவிழந்து செத்துவிட்டான் மன்னா” என்றார் மருத்துவர்.

“நீங்கள் தரும் பொற்கழஞ்சு, அழகிய வீடு, மனைவி மக்கள், அன்பான பெற்றோர், இத்தனை இருந்தும் நிறைவான வாழ்வு வாழாமல் பேராசைப்பட்டான். நாள் முழுக்க ஓடி அவன் தேடிக்கொண்டது ஆறடி மண்தான் மன்னா” என்றார் அரச குரு.

தேவை, ஆசை, வாழ்வு, இவை மூன்றுக்குமான தொடர்பு மன்னனுக்குப் புரிந்தது. அண்டை நாட்டின் மீது படையெடுக்க, மனத்துக்குள் வைத்திருந்த திட்டத்தைக் கைவிட்டான் மன்னன். மக்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும் திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தான்.

About admin

Avatar

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 2

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன