முகப்பு / மனம் மலரும் கதைகள் / துணை வருவாள் துர்க்கையம்மன்-1

துணை வருவாள் துர்க்கையம்மன்-1

அந்த சீட்டில் சரண்யாவை சுற்றிலும் ஐந்து ஆண்களே உட்கார்ந்திருந்தார்கள். அத்தன பேரும் குடித்திருந்தார்கள். பெரிய அளவில் கூட்டமில்லாத ரயிலில் மற்ற கம்பார்ட்மென்ட்டில் இருந்தவர்களும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தனர். இப்படி தனியாக மாட்டிக்கொண்டதை நினைத்து பயந்து கிடந்தாள் சரண்யா. ஐந்து பேரும் இவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள், சரண்யா பட்டீஸ்வரம் துர்க்கையை வேண்டிக்கொண்டாள்.
இரண்டு மூன்று நாட்களாக நடந்ததெல்லாம் சரண்யாவிற்கு மனத்திரையில் நிழலாடின.
சரண்யா எவ்வளவு சந்தோஷமாக இருந்தாளோ, அந்த அளவிற்கு அவளை பயமும் பீடித்திருந்தது. என்னதான் டவுனுக்குப்போய் படித்திருந்தாலும், கிராமத்திலேயே வளர்ந்தவள். பாதி நகரம், பாதி கிராமமாகத்தான் அவள் இருந்தாள். கல்லூரியில் எம்.சி.ஏ., முடித்தகையோடு கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருந்தாள்.
அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டரும் கைக்கு வந்துவிட்டது. காலையில் மெயிலைத் திறந்து பார்த்தபோது வாழ்த்துகளுடன் ஆர்டர்அனுப்பியிருந்தார்கள், மானிட்டருக்கே முத்தம் கொடுத்துவிட்டு பிரிண்ட் எடுத்துக் கொண்டாள். ஸ்பேஸ் டெக்னாலஜி அண்ட் சொல்யூஷன்ஸ் கம்பெனிக்கு பெங்களூர்தான் தலைமையிடம். அங்குதான் இவளுக்கு சிஸ்டம் அனலிசிஸ்ட் வேலை. இரண்டு கை நீட்டி வாங்குகிற அளவுக்கு சம்பளம்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போன வாரம்தான் அப்பா திருமணத் தகவல் மையத்திற்கு போய் கை நிறைய ஜாதகங்களை அள்ளிக்கொண்டு வந்து கட்டங்களை வைத்து சரிபார்த்துக் கொண்டிருந்தார். திருமணப்பேச்சை எடுக்கும் போதெல்லாம் அவள் முகத்தில் ஒரு பயம் கலந்த வெட்கம் பரவிப்படரும்.
“அதெல்லாம் நீங்க பார்த்துகோங்க அப்பா என்கிட்ட எதுவும் கேட்காதீங்க… இப்போதைக்கு நான் ஒரு நல்ல வேலைக்கு போகணும் . . . அதான் என்னோட ஆசை…” கழுவுற மீனில் நழுவுற மீனாகி விடுவாள் சரண்யா!
அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரைப் பார்த்து சரண்யாவின் அம்மாதான் ரொம்பவும் பயந்தாள். தான் பயந்ததோடு மட்டும் அல்லாமல், சரண்யாவையும் ஏகத்திற்கு பயமுறுத்தி இருந்தாள்.
நாட்டுல….அங்கங்க… நடக்கற சம்பவங்களைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு சரண்யா. என்னைக் கேட்டா இந்த வேலையும் வேணாம். ஒண்ணும் வேணாம் நல்ல பையனைப் பார்த்து உன்னை அவன் கையில புடிச்சுக் கொடுத்துட்டாப் போதும்..”
“புரியாமல் பேசாதீங்கம்மா… லட்சக்கணக்கில் காசைக் கொட்டி படிச்சுட்டு. . . கிச்சன்ல போய் வெறுமனே நூடுல்ஸ் செஞ்சி குடுத்துட்டு இருக்கச் சொல்றீங்களா…? இந்தக் கம்பெனில சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஐம்பத்து ஆறாயிறம். . . ஒரு வருஷம் வேலை பார்த்தா போதும்… செலவு போக அஞ்சு லட்சம் மிச்சம் பண்ணிடலாம். படிச்ச கடனையும் அடைச்சுடலாம்.
செல்லமாக அம்மாவிடம் கோபித்துக் கொண்டாள். ”பாருங்கப்பா அம்மாவ என்னை பயமுறுத்திட்டே இருக்காங்க…-”
சரண்யா அப்பா செல்லம். . .
அது மட்டும் அல்லாமல். . சரண்யாவிற்கு எல்லா வகையிலும் தைரியம் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
கோயம்புத்தூருக்கு படிக்க அனுப்பமாட்டேன் என்று அம்மா அடம் பிடித்த போது அப்பாதான் தைரியம் கொடுத்தார்.
“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா..” நீ பாரதியார் பாட்டு படிச்சிருக்கல்ல.. தொட்டதுக்கும் பயந்கிட்டிருந்தா… வீட்டுக் கூரையைக் கூட தொட முடியாது.”
“நாட்டு நடப்பைதான் நீங்க பேப்பர்ல பார்க்கறீங்கல்ல… பட்டப்பகல்ல… பஸ்ல கூட போய்ட்டு வர முடியல.. அதை நெனைச்சாதான் எனக்கு கொலை நடுங்குங்க..”
“இப்ப எதுக்கு இவளுக்கு மேல்படிப்பு.. அது.. இதுன்னு.. செலவு பண்றீங்க.. . அப்புறம் மேல்படிப்புக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கணும்” என்று ஆரம்பத்தில் படிப்புக்கே அம்மா அணை போட்டாள். இப்போது வேலை என்றவுடன்.. அதுவும் பெங்களூரில் வேலை என்றவுடன் அறவே வேண்டாம் என்று போராடிப் பார்த்தாள்.
ஆனால், சரண்யா துணிமணிகளையெல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டு ரெடியாகிவிட்டாள், விட்டால் இன்றைக்கே ரயில் ஏறிவிடுவாள் போலிருந்தது.
“ஆமாம்மா… பின்ன என்ன இன்னும் ரெண்டு நாளைக்கு இங்க இருந்தேன்னா… இல்லாது பொல்லாதெல்லாம் சொல்லி.. இங்கேயே இருக்க வெச்சிடுவே.. அப்புறம் பெங்களூரு போகாம.. வீட்டுக்குள்ளேயேஎ பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருக்க வேண்டியதான்.”
” சரி .. சரி.. இரண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க.. நான் ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க… அம்மா.. உன்னோட பாதுகாப்பைதான பார்ப்பாங்க… சரண்யா… அதுல ஒரு நியாயம் இருக்குல்ல .. அதுக்காக நீ வேலைக்குப் போக வேணாம்னு சொல்ல மாட்டேஎன்..”
“. . . . . . . ”
கும்பகோணம் பக்கத்துல… பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா…! ரொம்ப சக்தி வாய்ந்தசாமி… துர்க்கைகிட்ட சரண் அடைந்தவங்கள அவள் கைவிட்டதே இல்லை… அங்கே போய் சாமி கும்பிட்டு வர்றது உனக்கு ரொம்ப நல்லது. நேரா ஜன சதாப்தி ரயில்ல போய் கும்பகோணத்துல இறங்கு… அங்க உன்னோட முருகன் மாமா இருக்காரு இல்லையா… அவர் வந்து உன்னைக் கோவிலுக்கு கூட்டிகிட்டு போவாரு… கூடவே சாந்தி அத்தையும் வருவாங்க. அவங்களோட பட்டீஸ்வரம் கோயிலுக்குப் போய் எலுமிச்சம் பழத்துல நெய் விளக்கு ஏத்தி வைச்சி வேண்டிக்க…அப்புறம் … பாரு … உன்னை ஒரு ஈ…எறும்பு அண்டாது…
இதைச் சொல்லி முடித்த போது… அப்பாவின் உடம்பு ஒரு முறை சிலிர்த்து அடங்கியதை கவனித்தாள் சரண்யா…
“. . . . . . . . . . ”
கொஞ்சம் நேநரம் அமைதியாக இருந்துவிட்டு அப்பா மறுபடியும் சொன்னார்.
” நான் அந்த துர்க்கை அம்மனோட கருணையைக் கண்ணால கண்டிருக்கேன்…” சரண்யா. . . என்னோட நண்பர் ஒருத்தர் . . . ஒரு அரசியல் கட்சியில ரொம்ப ஆக்டிவா இருந்தார்…அவரோட மனைவியை சில பேர் குண்டு வைச்சு கொன்னுட்டாங்க… அவர் தனக்கு பாகாப்பு கேட்டு பல தடவை போலிஸ்ல மனு கொடுதுத்ப் பார்த்தார். எதுவுமே நடக்கல… ஒரு தடவ பட்டீஸ்வரம் கோயிலுக்கு நானும் அவரும் போயிருந்தோம். . .துர்க்கையம்மன்கிட்ட மனமுருக வேண்டிகிட்டார்… நீ தான் . . . அம்மா . . .எனக்கு பாகாப்புக்கு வரணும்.. உன்னை விட்டா எனக்கு வேற கதி இல்லைன்னு கண்ணீர் விட்டு அழுதார்.. . என்ன நடந்துச்சு தெரியுமா. . .?
கோயிலைவிட்டு வெளியில வர்றப்ப, அவருக்கு போலீஸ் பாகாப்பு கொடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்துச்சு…. கோயில் வாசல்ல இருந்தே அவர் வீட்டுக்கு போலீஸ் பாகாப்போடதான் போனார்… நீ அது மாதிரி வேண்டிகிட்டு வா சரண்யா… அடுத்த வருசம் வந்து அபிஷேகம் பண்ணி பொங்கல் வைச்சசு படைக்கறான்னு வேண்டிகிட்டு வா… சரண்யா. . .
. . . . . . . .
அம்மாவால உன்கூட வர முடியாது… பிரஷர் . . . சுகர் . . .எல்லாம் இருக்கு . .. வேளா வேளைக்கு மருந்து கொடுக்கணும். . . நான் அம்மாவுக்குத் துணையா வீட்டுல இருக்கறேன். .. நீ தான் பெங்களூர் போய் வேல பார்க்க போற இல்ல.. இங்க இருக்கற கும்பகோணத்துக்கு தனியா போய்ட்டு வர மாட்டியா. . .? அதுவும். . . கும்பகோணத்துல முருகன் மாமா உன்னை அழைச்சுட்டுப் போறார்.. இன்னிக்கு ராத்திரியே ரயில் ஏத்தி விட்ருவார். . . .
“. . . . . . .”
” நீ திரும்பி வந்து நம்ம ஜங்ஷன்ல இறங்கிட்டு எனக்கு போன் பண்ணு. . . நீ திரும்பி வர்ற ட்ரெய்ன் நைட் ஒரு மணிக்குத்தான் ஜங்ஷனுக்கு வரும்… எனக்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி போன் பண்ணிடு. . .”
“. . . . . . .”
புறப்படு. . . புறப்படு . . . இன்னைக்கு விட்டா . . . அப்புறம் கோயிலுக்குப் போக நாள் இல்ல. . .நாளைக்கு ராத்திரி நீ பெங்களூர் கௌம்பியாகணும்.
கும்பகோணம் வந்து இறங்கிய போது கம்பார்ட்மென்ட் வாசலில் இருந்தே அத்தையும், மாமாவும் அழைத்துச் சென்றார்கள்.
அர்ச்சனை செய்வதற்காக ஏகப்பட்ட பொருட்களை வாங்கி வந்திருந்தார்கள் அத்தையும், மாமாவும். ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம்-, எலுமிச்சம்பழம். . . குங்குமப் பாக்கெட் என்று சீர்வரிசை மாதிரி தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். . . .
என்ன மாமா. . . . சீர்வரிசை மாதிரி அமர்க்களம் பண்ணி மருமகளை மடக்கப் பார்க்கறீங்களா. . .?

தொடரும்

 

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 1

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன