முகப்பு / மனம் மலரும் கதைகள் / நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது

நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது

மகபாரதப்போரின் பத்தாவது நாளில் பீஷ்மர் வீழ்ச்சியடைந்தார். பதினெட்டாம் நாள் போர் முடியும்வரை, போரின் பல நிகழ்ச்சிகளை கவனித்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். போரில் வெற்றி பெற்றதும் பாண்டவர்கள் ஐந்து பேரும், பாஞ்சாலியுடன் பீஷ்மரைப் பார்க்க வந்தனர். அவர்களிடம், அம்புப் படுக்கையில் படுத்தவாறே பாச உணர்வுடன் பேசினார் பீஷ்மர். சாந்தி பருவம் என்று போற்றப்படும் அமைதி நூலை அவர்களுக்குப் போதித்தார்.
ஒருவன் அமைதி பெறக் கூடிய ஒழுக்க நிலையின் இயல்புகளை பீஷ்மர் போதித்துக்கொண்டிருந்தபோது, பாஞ்சாலியின் மனத்தில் வேறு சில எண்ணங்கள் தோன்றின. அதனால் அவள் உரக்கச் சிரித்தாள்.

இந்த நேரத்தில் அவளது செயலை பொருத்தமற்றதாகக் கருதினர் பாண்டவர்கள். பெரியோர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பாஞ்சாலி உரக்கச் சிரித்ததை விரும்பாமல், பாண்டவர்கள் முகம் சுளித்தனர். எல்லாமும் அறிந்த பீஷ்மர், பாண்டவர்கள் மனத்தில் ஓடும் எண்ணத்தைப் புரிந்துகொண்டார். அவர்களுக்கு, ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்க விரும்பினார். பாஞ்சாலியை அருகில் அழைத்து, தீர்க்கசுமங்கலியாக வாழ ஆசிர்வதித்தார்.
“நீ எது செய்தாலும் காரணத்தோடுதான் செய்வாய். நீ உரக்கச் சிரித்ததற்கான காரணத்தை உன் கணவர்கள் அறியும்படி விளக்கிச் சொல்” என்று பாஞ்சாலியிடம் கூறினார்.
மரியாதை கலந்த அன்புடன் பீஷ்மரை வணங்கி எழுந்தாள் பாஞ்சாலி. பின்னர், பெரியோர்! துரியோதனன் சபையில் நான் துகிலுரியப்பட்டபோது, ஒழுக்கத்தின் பண்புகளைப் பற்றித் தாங்கள் ஒன்றுமே பேசவில்லையே. என் கணவன்மார்களை வனவாசம் அனுப்பியபோதும், ஓராண்டு மறைந்து வாழக் கட்டளையிட்டபோதும் ஒழுக்க இயல்புகளைக் குறித்து தாங்கள் ஒரு சொல்கூட போதிக்கவில்லையே. தர்மத்தின் திருவுருவங்களாக விளங்கும் பாண்டவர்களுக்கு இப்போது சாந்தி பர்வதத்தைப் பற்றி விளக்குகிறீர்கள். இத்தகைய போதனையை, தேவையற்றவர்களுக்கு இப்போது ஏன் தாங்கள் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? இந்த அறிவுரையை துரியோதனனுக்கும் அவனோடு இருப்பவர்களுக்கும் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இந்த எண்ணங்கள் என் மனத்தில் ஓடியதால் நான் உரக்கச் சிரித்தேன். அதுமட்டுமல்ல, அரச சபையில் தர்மர் சொக்கட்டான் ஆடியபோது, தன்னையே பணயம் வைத்துத் தோற்றுவிட்டார். அதன் பிறகுதான் என்னைப் பணயம் வைத்து ஆடினார். அப்போது, பாண்டவர்கள் வணவாசம் போக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். நானும் அவமானப்படுத்தப்பட்டேன். அது தர்மமா என்று கூறுங்கள். தாங்கள் தமத்தின் திருவுருவம். நேர்மையின் வடிவம்.

தர்மர் தன்னையே பணயம் வைத்துச் சூதாடித் தோற்ற பிறகு, என்னைப் பணயம் வைக்க உரிமை பெற்றவரா என்பதை நீங்களே சிந்தித்துக் கூறுங்கள். தாங்கள் உறுதியாகப் பின்பற்றும் நேர்மையின் பண்புக்கு அப்போது என்ன நேர்ந்தது? தர்மர் தன்னை பணயம் வைத்துச் சூதாடித் தோற்ற பிறகு, என்னைப் பணயம் பணையம் வைத்தாரா? அல்லது என்னை முதலில் பணயம் வைத்தாரா என்று அன்று தங்களிடம் கேட்டேன். அப்போது தாங்கள் மறுமொழியே சொல்லவில்லை. தங்களுடைய நேர்மையான பண்புகளுக்கு அன்று என்ன நேர்ந்தது? இன்று, எந்த விதத்திலும் தேவையற்று இருக்கும்போது, நேர்மையின் பண்புகளைப் பாண்டவர்களுக்குத் தாங்கள் போதிக்கிறீர்கள். இது கட்டாயம் சிரிக்கத் தகுந்ததுதானே. அதனால், என்னை உரக்கச் சிறிக்கத் தூண்டியது என்று பாஞ்சாலி கூறினாள்.
மரணத்தை எதிர்பார்த்து, அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரிடம் இவ்வளவு உறுதியாக வாதாடி, கேள்விகளை பாஞ்சாலி கேட்டது, தர்மரைத் திடுக்கிட வைத்தது. ஆனால் பாஞ்சாலி பேசி முடித்தபோது, பீஷ்மரும் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். பாஞ்சாலி இப்படிக் கேட்டதற்காக அவளை வாழ்த்தினார். அவளது கேள்விகள், வரப்போகும் கலி காலத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி, பாண்டவர்களை அமைதிப் படுத்தினார்.
பின்னர், பஞ்சாலிக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

”பல ஆண்டு காலமாக, தீய அரசர்களுக்கும், பழி பாவமே செய்தவர்களுக்கும் பணி புரிந்து வந்தேன். அவர்கள் எனக்குக் கொடுத்த உணவை, அவர்கள் போட்ட உப்பை உண்டு வந்தேன். அதனால், நேர்மையும் தர்மமும் என்னுள் ஆழப் புதைந்து போயிருந்தன. உன் கணவன் அர்ஜுனன் விட்ட அம்புகள் என்னைத் துளைத்தபோது, என் உடம்பில் ஓடிய தீய இரத்தமெல்லாம் வடிந்துவிட்டது. இதனால், என்னுள் புதைந்து கிடந்த தர்மம் இப்போது மேலெழுந்து வந்துவிட்டது. அதனால்தான் நல்லியல்புகளைப் பற்றி இப்போது என்னால் பேச முடிகிறது” என்றார்.
பீஷ்மர் உபதேசித்தருளிய சாந்தி பருவம் நூலில் இருந்து, நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். கெட்ட வழிகளிலும் தீய செயல்களாலும் பணம் சேர்த்து ஒருவன் செல்வந்தன் ஆனால், அவனது உடலிலும் தீய ரத்தம் ஓடும். அதனால், அவனிடம் இருக்கும் நற்பண்புகள் அவனுள் ஆழப் புதைக்கப்பட்டுவிடும். அதனால்தான், சமைக்கும் பாத்திரம், சமையல் செய்யப் பயன்படும் பண்டங்கள், சமைப்பவர்கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் வற்புறுத்தியுள்ளார்.
இந்த உரையாடல் மூலம், நாம் உண்ணும் உணவிலும் தீங்கு நிறைந்திருக்கும் என்று உலகுக்கு பீஷ்மர் உணர்த்தியுள்ளார்.

தீயவர்களோடு சேரும்போது, அவர்களது இயல்பே நமக்கும் வந்துவிடும். அவர்கள் தரும் உணவை உண்பதன் மூலம் நம் நல்ல எண்ணங்கள் புதைந்து போகும். எனவே, நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தீயவர்களை விட்டு விலகியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நம் நல்ல எண்ணங்கள் புதைபட்டுப் போகும். தீய எண்ணங்களே மேலெழும். நல்லவர்களோடு சேர்வோம். நல்லியல்புகளோடு வாழ்வோம்.

About admin

Avatar

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 2

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன