முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / பூலோக தெய்வங்கள்-யோகி ராம்சுரத் குமார் -3

பூலோக தெய்வங்கள்-யோகி ராம்சுரத் குமார் -3

ஒன்று அரவிந்தர், மற்றொன்று ரமணர் முக்தியடைந்த செய்திகள் அவை.
குன்வரின் மனதிற்குள் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது.
இனி தன் கைபிடித்து வழிகாட்டுபவர் எவர்?
குழப்பம் முழுமையாய் சூழ்ந்தது.
இனி பாபா ராம்தாஸ் மட்டுமே தனக்கான வழிகாட்டி என்பதை உணர்ந்தார் அவர்.
குன்னங்காடு சென்று ராம்தாஸை மீண்டும் சந்தித்தார். குன்வருக்கு தீட்சையளிக்க முடிவுசெய்யப்பட்டது.

குன்வரை அமரவைத்து, அவரெதிரில் அமர்ந்தார் ராம்தாஸ்.
“நான் உச்சரிக்கும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக்கொண்டே இரு… ஓம் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்” மும்முறை மந்திரத்தை உபதேசித்தார்.
ராம்சுரத் குன்வர் தன் தேடலுக்கான விடை கிடைத்ததை உணர்ந்தார். குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை இடைவிடாது உச்சரிக்க ஆரம்பித்தார். அவர் உடல் முழுவதும் பேரருள் நிரம்பியது. ஆனந்தத்தில் அமிழ்த்தி எடுத்ததுபோல் அவர் உடம்பு துடித்தது. தவித்தது.

ஆசிரமத்தில் தங்கி அனுதினமும் மகாமந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். அவ்வப்பொழுது திடீரென அழுவார். சிரிப்பார். உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டும் விதத்தில் அவரது செய்கைகள் அமைந்திருந்தன.
சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்த குன்வரை, பக்குவப்படுத்தும் வேலைகளில் இறங்கினார் ராம்தாஸ்.

அவர் குறிப்பிடத்தக்க பக்குவநிலைக்கு வந்ததும், “இனி உனக்கு இங்கே வேலையில்லை வெளியே போகலாம்” பொட்டிலடித்தார் போல் கூறினார் ராம்தாஸ்.

குன்வரைப்பற்றி வெளியுலகம் அறிய வேண்டுமென்றால் அவர் இவ்வாசிரமத்தில் இருக்கக்கூடாது என்கிற குரு-சிஷ்ய மனோபாவமே அவ்வாறு சொல்ல வைத்திருந்தது.
குருவின் வார்த்தைகள் குன்வரை திகைப்படையச் செய்தது.

“நான் எங்கே செல்வேன்? எப்படி வாழ்வேன்?”
“பிச்சையெடுத்து பிழைத்துக்கொள்” ராம்தாஸ் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
குருவின் கட்டளையை தட்டமுடியுமா?

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அங்கிருந்து கிளம்பினார் குன்வர். பல்வேறு ஊர்கள், பலதரப்பட்ட மக்கள் சந்திப்பு. தரிசிக்காத கோயில்களே இல்லை என்கிற அளவு திருத்தல யாத்திரை.கிட்டத்தட்ட இந்தியா முழுமையும் சுற்றிவந்தார் அவர். பசித்தபொழுது யாசகம் வாங்கி புசிப்பார். இது மேலும் அவரை பக்குவப்படுத்தியது.

இறுதியில் திருவண்ணாமலை வந்தடைந்தார் ராம்சுரத்குன்வர். பல மனிதர்களை மகான்களாக மாற்றிய புண்ணியபூமி அவரையும் வரவேற்று இடமளித்தது.
பெருமாளின் கைகளில் சங்கு சக்கரம் இருப்பதுபோல் குன்வரின் ஒரு கையில் கொட்டாங்கச்சியும், மறு கையில் பனையோலை விசிறியும் இடம் பிடித்தன.
ரமணாசிரமத்தில் தரப்படும் உணவை கொட்டாங்கச்சியில் வாங்கி உண்டுவிட்டு மலைக்குகைகளிலும் குன்றுகளிலும் தங்கியிருப்பார்.
குன்வருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கூட்டம் சேர ஆரம்பித்தது. அவர்கள் ராம்சுரத் குமார் என்றே அவரை அழைக்க ஆரம்பித்தனர். ரமண பக்தர் ஒருவர் ‘யோகி’ என்றழைக்க, முடிவில்‘ யோகி ராம்சுரத் குமார்’ என்று மாறினார் ராம்சுரத் குன்வர். எப்பொழுதும் விசிறியுடன் காணப்படுவதால் ‘விசிறி சாமியார்’ என்றும் செல்லப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.
யோகி தங்குவதற்கு வீடு ஒன்றை ஏற்பாடு செய்துகொடுத்தார் பக்தர் ஒருவர். அதன்பிறகு மக்கள் கூட்டம் அதிக அளவில் அவரைக்காண வர ஆரம்பித்தது.
தன்னுடைய அருட்பார்வையால் மக்களின் கஷ்டங்களை யோகி ராம்சுரத் குமார் தீர்த்துவைப்பதாக மக்கள் நம்பினர்.
பக்தியுடன் அவரைக் காணவரும் பக்தர்கள் சிலரிடம் கடுமை காட்டுவார் அவர். பின்பு‘அந்த பக்தர்களின் கர்மவினையை போக்கும் செயல்தான் இது’ என மற்றவர்களுக்கு விளக்குவார்.

அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. ஒருசில பக்தர்களுக்கு எதிரில் குறைவாகவும், வேறு சிலருக்கு எதிரில் அதிகமாகவும் புகைப்பிடிப்பார். இதுவும் அவர்களின் கர்மவினையை அகற்றும் நிகழ்வே என மக்களுக்கு பின்னர் தெரியவந்தது.
பக்தர்களாக இல்லாதோரின் கனவுகளில்கூடத் தோன்றி அவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பது யோகியின் வழக்கம். இந்த அனுபவம் பலரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது.
“எந்த ஒரு நேரத்திலும் நாம ஜெபத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள். அது எந்த கடவுளுடைய நாமமாக இருந்தாலும் சரி. அந்த ஜெபம் உங்களது கஷ்டங்களை களைந்து மனஅமைதியை தரும்.”- இதை வேண்டுகோளாகவே தனது பக்தர்களின்முன் வைப்பார் யோகி.
ஒரு கட்டத்தில் குளிப்பதை நிறுத்திக்கொண்டார் அவர். மனிதர்கள் மட்டுமே சாம்பலாகப்போகும் இந்த உடலை போற்றிப் பாதுகாப்பார்களே தவிர மகான்கள் அப்படிச் செய்வதில்லை என்பதை மற்றவர்களுக்கு உணரவைக்கும் செயலாகவே அது இருந்தது.
அவரது தலையில் ஒரு முண்டாசு நிரந்தர இடம் பிடித்திருந்தது. உடையும் அழுக்கு நிறைந்தே காணப்படும். அவ்வுடைக்கு மேலே பச்சை அல்லது சிவப்பு நிற மேலாடை அணிந்திருப்பார். பொதுவாக பச்சை வண்ணம் அவருக்கு பிடித்த நிறமாகவே இருந்தது. எதிலும் பற்றற்ற தன்மையை உணர்த்தும் விதமாகவே ஆடை அணியும் பழக்கத்தையும் வைத்திருந்தார்.

மக்கள் கூட்டம் அதிகரித்துவருவதால்அவருக்கென ஆசிரமம் அமைக்க பக்தர்கள் முடிவெடுத்தனர். திருவண்ணாமலை அக்ரஹாரக்கொல்லையில் இடம் ஒதுக்கி ஆசிரமம் கட்டப்பட்டது. அதன் பின்னர் அங்கேயே தங்கி உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்க ஆரம்பித்தார் யோகி.
பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது உறுதி. அதற்கான காரணங்கள் மட்டுமே மாறுபடும். யோகி ராம்சுரத் குமாருக்கு புற்றுநோய் அக்காரணமாய் அமைந்தது.
2001ம் வருடம் பிப்ரவரி 20ம் நாள் இறைவனுடன் ஒன்று கலந்தார் விசிறி சாமியார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத் குமார்.
அவ்விடத்திலேயே அவருக்கு சமாதி அமைக்கப்பட்டு அதன்மீது சிவலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விசிறி சாமியார் இப்போது இல்லாவிட்டாலும், அவரது அருளாசியால் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் மறைந்துபோகின்றன என்பது மட்டும் உறுதி.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன