முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / பூலோக தெய்வங்கள்-ராம்சுரத் குமார் -2

பூலோக தெய்வங்கள்-ராம்சுரத் குமார் -2

ஆனந்தவனம், மகாமயானம், அவிமுக்தம் என்றெல்லாம் புராணகாலத்தில் அழைக்கப்பட்ட காசி நகரம், சாதுக்களாலும் அகோரிகளாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. கடிவாளம் கட்டியதுபோல் நேரே விசுவநாதர் சந்நிதிக்குள் நுழைந்தார் குன்வர். அனைவரையும் ஆட்கொண்ட ஆடலரசன் அவரை மட்டும் விட்டுவிடுவானா என்ன!

விசுவநாதரை தரிசித்துக்கொண்டே இருக்க மனம் விரும்பியது. பல நாட்கள் குழப்பம் நீடித்த மனதில் குதூகலம் நிரம்ப ஆரம்பித்தது. உடலின் உச்சியிலிருந்து பாதம்வரை பரவச உணர்வு பரவியது. சிந்தனையே இல்லாத பேரானந்தம் அது. இன்னும்… இன்னும்… இன்னும்… ஆனந்தத்தை அள்ளி அள்ளிப் பருகியது மனம்.

சற்று நேரம் கழித்து, தன் நினைவு வந்தவராய், கோயிலைவிட்டு வெளியே வந்தார் குன்வர். கங்கைக்கரை சென்றவர், அங்கு எரியும் பிணங்களையும், கரைக்கப்படும் அஸ்திகளையும் வெகுநேரம் பார்த்தபடி நின்றிருந்தார்.

மனித வாழ்க்கை ஒருபிடி சாம்பலிலே முடியும் என்கிற உண்மை உரைக்க ஆரம்பித்தது. அடுத்ததாக புத்தரின் உபதேசம் நிகழ்ந்த சாரநாத் சென்றார். அந்தப் பயணமும் பரவசத்தில் முடிந்தது.

ஒருவழியாய் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். தன் பயண அனுபவங்களையும், பரவச நிலையையும் கபாடியா பாபாவிடம் பகிர்ந்துகொண்டார்.
“இது ஆரம்பம் மட்டுமே… போகப்போக அனைத்தும் புரியும்.” குன்வரின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார் பாபா.

ராம்சுரத் குன்வர் குடும்ப விஷயங்களில் பிடிப்பில்லாமல் இருப்பது பெற்றோரை கவலையளிக்கச் செய்தது.
கால்கட்டுப் போட்டால் அனைத்தும் சரியாகிவிடும். வழக்கம்போல்அனைத்து பெற்றோர்களும் நினைப்பதையே அவர்களும் நினைத்தனர்.
இறுதியாய், குன்வரின் பிடிவாதம் புறம் தள்ளப்பட்டு, பீஹாரைச் சேர்ந்த ராம்ரஞ்சனி தேவியுடன் இல்லற வாழ்க்கையை துவங்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு வாய்த்தது.
ஆன்மிகத் தேடல் ஒருபுறமிருந்தாலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டியது கட்டியவனின் கடமையல்லவா? அடுத்தடுத்து இரு குழந்தைகள் பெற்றெடுத்தாள் ராம்ரஞ்சனி தேவி.

அதேசமயம் பட்டப் படிப்பை முடித்திருந்த குன்வருக்கு ஆசிரியப் பணி கிடைத்து உத்தியோகம் புருஷ லட்சணமானது.
தன் தேடல் அடுத்த கட்டத்தை தாண்டாதது, குன்வருக்குக் கவலையைத் தந்தது. மீண்டும் கபாடியா பாபாவை சந்தித்தார்.

இப்பொழுது பாபாவின் சுட்டுவிரல் நீண்டது – திருவண்ணாமலையையும், புதுச்சேரியையும் நோக்கி.

முதலில் திருவண்ணாமலை சென்று ரமணரை சந்தித்தார். அதே பழைய பரவசநிலை அவரை ஆட்கொண்டது. அடுத்தது புதுச்சேரி சென்று அரவிந்தரை தரிசிக்க முற்பட்டார். முடியவில்லை. ஊர் திரும்பினார்.

மனம் நிலையில்லாமல் தவித்தது. தன் தேடல் முற்றுப் பெறாததால் உள்ளம் எதற்காகவோ ஏங்கித் தவித்தது. பல நாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு ஒருபிடி உணவு கிடைத்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தமுடியும். அதுமாதிரி தன் ஆன்மிகப் பசிக்கு உணவு தேடி அலைந்துகொண்டிருந்தார் குன்வர். அந்த உணவு எங்கு, யாரால் சமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அவருக்கு தெரியவில்லை.
அடுத்த சிலவருடங்களில் மீண்டும் திருவண்ணாமலை பயணப்பட்டார் குன்வர். ரமணர் தன் கூட்டைவிட்டுப் பிரியும் சமயம் அது. அவரின் அருட்கடாட்சம் பொருந்திய கண்கள் குன்வரை முழுமையாய் நனைத்தது. ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தார் அவர். அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரியை அடைந்தார். இப்பொழுது அரவிந்தரின் தரிசனம் கிட்டியது. அவருக்குள் இறங்கியிருந்த சக்தியை இன்னும் அதிகமாய் உணரமுடிந்தது.
அதே வேளையில், கேரளாவில் தங்கியிருந்த துறவி பாபா ராம்தாஸ் என்பவரைப்பற்றிய செய்தி அவர் காதுகளில் விழுந்தது.

கேரளாவிலுள்ள குன்னங்காடு நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தார் குன்வர். அங்கே இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது. சிறிது நாட்கள் அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருந்தார் அவர். அப்படியிருந்தும் ராம்தாஸின் கொள்கைகளில் அவருக்கு பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. மீண்டும் தனது ஊருக்கே திரும்பினார்.
பிடிப்பேதும் இல்லாமல் படிப்பு சொல்லிக் கொடுப்பதை மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. வேறுவழியில்லாமல் தனது குடும்பத்தாரின் நெருக்குதலுக்காக அப்பணியை தொடர்ந்தார். வேலை முடிந்த மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் கோயில், குளம் என கிளம்பிவிடுவார். தன் தேடலுக்கான முற்றுப்புள்ளி எப்பொழுது விழும்? எனும் கேள்வி அவர் மனதைக் குடைய ஆரம்பித்தது. இதற்கிடையே மீண்டும் இரு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார் குன்வர்.
அந்த சமயத்தில், அடுத்தடுத்து இரு அதிர்ச்சிகள் அவரைத் தாக்கின.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன