முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / பூலோக தெய்வங்கள் ராம்சுரத்-குமார்-1

பூலோக தெய்வங்கள் ராம்சுரத்-குமார்-1

‘குக்கூ… குக்கூ…’ குருவி அழகாய் கூவியது. கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்த பதிமூன்று வயது சிறுவன் ராம்சுரத் குன்வர் தலை நிமிர்ந்து பார்த்தார்.
‘அட… என்ன ஒரு அழகான குருவி! உடல் முழுவதும் பொன் துகளை தூவியது போலிருக்கிறதே!’ குன்வருக்குள் ஆச்சர்யம் அரும்பியது. நீர் நிரம்பிய வாளியை கீழே வைத்துவிட்டு தன் சிறிய விரல்களால் குருவியை ‘இங்கே வா’ என்பதுபோல் அழைத்தார்.
குருவி தலை சாய்த்து குன்வரை பார்த்தது. சில நொடி இடைவெளிவிட்டு மீண்டும் ‘குக்கூ…’ என்றது.
“என்ன சொல்றே..? பசிக்குதா..? வீட்டுக்குள்ளே வா தானியம் தர்றேன்.”
குருவி மவுனம் சாதித்தது.
“நீ பேசுறது எனக்கு புரியலை, நான் பேசுறது உனக்கு புரியலை. ஒன்னு பண்ணு… இந்த கயிற்றை பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் வந்துவிடு. நான் உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போறேன்.” கிணற்று வாளியுடன் இணைக்கப்பட்டிருந்த தாம்புக்கயிற்றை முடிச்சவிழ்த்து விளையாட்டாய் குருவியை நோக்கி வீசினார் குன்வர்.
கயிறு பறந்துசென்று மிகச்சரியாய் குருவியின் தலையை தாக்கியது. குருவி சுருண்டுபோய் ‘பொத்’ என கீழே விழுந்தது.
துடிதுடித்துப்போனார் குன்வர்.
என்ன காரியம் பண்ணிவிட்டேன். விளையாட்டான விஷயம் இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே.

ஓடிப்போய் குருவியை தன் கைகளால் அள்ளினார். அது அலகை திறந்துமூடி சுவாசிக்கத் திணறியது. அப்படியே வீட்டிற்கு அருகிலிருந்த கங்கை நதியை நோக்கி ஓடினார். காப்பாற்றும் முயற்சியாக, கையில் நீரை அள்ளி குருவியின் வாயினுள் ஊற்றினார். கொஞ்சமாய் துடிதுடித்துக்கொண்டிருந்த குருவி, சட்டென அடங்கிப்போனது.
குன்வருக்குள் விசும்பல் எழுந்து அழுகையாய் மாறியது.
ஒரு நிமிடத்திற்கு முன்புவரை ஆனந்தமாய் கூவிக்கொண்டிருந்த ஜீவனின் உயிரை அநியாயமாகப் பறித்துவிட்டேனே. உயிரைப்பறித்தது நானென்றால், அதன் உயிர் என்னிடம் தானே இருக்கவேண்டும். இருந்தால் அதை மீண்டும் குருவிக்கே கொடுத்து உயிர்ப்பி

த்துவிடலாமே. ஆனால் என்னிடம் அப்படி ஏதும் இல்லையே. அப்படியென்றால் இதற்கு நான் காரணமில்லையா? 

 

அதன் உயிர் எங்கே போனது? உயிர் என்கிறேனே, அதற்கு உருவம் எதுவும் உண்டா?

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

குன்வரின் மனதில் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் வந்து நின்றன. கேள்விகளை மட்டும் கேட்கத் தெரிந்த மனதிற்கு விடை சொல்லத் தெரியவில்லை.
மனிதனின் ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்துவிட்டால் அவன் மனிதனல்ல… மகான். அனைவரும் மகான்களாக மாறிவிடுவதில்லை. இறுதிவரை விடை கிடைக்காமல் பலரும் மனிதனாகவே இருந்து மரித்துப்போகிறார்கள். தேடித் தெளிந்தவர்கள் மட்டுமே மகான்களாக மாறுகிறார்கள்.

இச்சம்பவம் நடைபெறும் முன்புவரை ராம்சுரத் குன்வர் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார். அதே சமயம் கடவுள் பக்தியும் குறைவில்லாமல் இருந்தது. அப்பா ராம்தத் குன்வர், அம்மாகுஸீம் தேவி, அண்ணன் மனாரகன் குன்வர், தம்பி ராம்தஹீர் குன்வர் ஆகியோர் அடங்கிய அழகிய விவசாயக் குடும்பம் வசித்துவந்தது உத்திரப்பிரதேச மாநிலம் நரதரா கிராமத்தில். அந்தச் சிற்றூரை ஒட்டி கங்கை நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பள்ளிவிட்டதும் நேரே குன்வர் செல்லுமிடம் நதிக்கரைதான். அங்கு அமர்ந்து கங்கை ஓடும் அழகை ரசித்துக்கொண்டேயிருப்பார். பின்னர் வெகுநேரம் நீச்சல் செய்வார். நன்கு இருட்டிய பிறகும் கங்கையை பிரிய மனமில்லாமல் வீடு திரும்புவார். இரவு படுக்கையில் அம்மா குஸீம் தேவி,தினம் ஒரு கதை சொல்லியாக வேண்டும். அது மாயமந்திரக் கதைகளாக இருக்கக்கூடாது. தெய்வங்களையும், மகான்களையும் பற்றியதாகவே இருக்கவேண்டும்.

இப்படி இனிமையாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் குருவி உயிரைவிட்ட சம்பவம், மனதிற்குள் பல கேள்விகளை எழுப்பி குன்வரை தனிமைப்படுத்தியது.
காலம் சில வருடங்களை விழுங்கிவிட்டு கம்பீரமாய் ஓடிக்கொண்டிருந்தாலும் குன்வரின் தனிமை நீடிக்கவே செய்தது. வழக்கம்போல பள்ளிவிட்டு கங்கைக் கரையில் அமர்ந்துகொண்டு சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பார். அழகை ரசிக்கும் முந்தைய மனோபாவத்திலிருந்து குழம்பிப்போன குட்டையாக மாற்றம் கண்டிருந்தது மனது.
அவ்வப்பொழுது அங்கு வந்துசெல்லும் துறவிகளின் சந்திப்பு அவரின் மனதை சற்றே ஆறுதல்படுத்தியது. அதில் குறிப்பிடத்தக்கவர் கபாடியா பாபா.
ராம்சுரத் குன்வருக்குள் ஞானம் விருட்சமாய் வளர விதையை விதைத்தவர் அவர்தான்.
“காசி விசுவநாதர் தரிசனம் உன் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணும். போய்வா…” குன்வரை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்தினார் பாபா.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன