வள்ளிமலை சுவாமிகள் – 2

கையில் தடியுடன் கோவணாண்டியாக காட்சியளித்த ரமண மகரிஷி, அர்த்தநாரியின் கண்களுக்கு பழனி தண்டாயுதபாணியாக தெரிந்தார்.
திருவண்ணாமலையில் சிறிது காலம் இருந்துவிட்டு சென்னை சென்றடைந்தார் அர்த்தநாரி. அங்கு வெங்கடேச அய்யர் என்பவரது வீட்டில் தங்கிக்கொண்டார்.
அன்றைய தினம் கந்தர் சஷ்டி விழா என்பதால் அய்யரின் வீட்டில் அடியார்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மகிழும் வண்ணம் அர்த்தநாரியும் அவரது மனைவியும் கவனித்துக் கொண்டனர்.
உணவருந்த வந்திருந்த அனைவருமே முருகனின் அடியார்கள் என்பதால், அவர்கள் உண்ட எச்சில் இலைகள் தன் உடம்பில் படுவது பெரும் பாக்கியம் என்று நினைத்தாரோ என்னவோ, அந்த இலைகளில் படுத்து உருள ஆரம்பித்தார் அர்த்தநாரி.
தொழுநோயாளி சாப்பிட்ட இலையில் உருளும்போது தம்மை மறந்த ஒருவிதபரவசம் அவரை ஆட்கொண்டது.சட்டென அவருக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு ஒளி வட்டம். அதில் சேஷாத்ரி சுவாமிகள் தோன்றி “என்ன இதெல்லாம்..? நாம் போய்க் கொண்டேயிருப்போம்” என்றார். அருகிலேயே மற்றொரு காட்சி. அதில், பூணூலும் தலையில் சிகையும் அற்ற அர்த்தநாரி நின்றிருந்தார்.
இக்காட்சியை மனைவியிடம் விவரித்தவர், ‘தான் துறவறம் மேற்கொள்ளவேண்டும்’ என்பதை சேஷாத்ரிசுவாமிகள் உணர்த்தியதாகவே எண்ணினார். நாளாக நாளாக சந்நியாசத்தின் மீதான விருப்பம் அவருக்குள் அதிகரித்தது. தன் மனைவியிடம் இது குறித்து கூறினார். ஆனால் அவளோ அர்த்தநாரியின் பேச்சுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
“நெய்க்குன்றம் தண்டபாணி சுவாமிகள் உத்தரவு கொடுத்தால், எனக்கு ஆட்சேபணை இல்லை.” கறாராக பதில் வந்தது நஞ்சம்மாவிடமிருந்து.
அர்த்தநாரி மனம் வெதும்பி, பூஜை அறைக்குள் அமர்ந்து திருப்புகழைப் பாடத்துவங்கினார்.
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே ஒரு குரல். எட்டிப்பார்த்த நஞ்சம்மா ஆச்சரியமடைந்தாள்.
“சாமி… இப்போதான் உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களே வந்துட்டீங்க…”
நெய்க்குன்றம் தண்டபாணி சுவாமிகள், தன் நீண்ட தாடிக்குள் மர்மப்புன்னகை ஒன்றை சிந்தினார்.
“எல்லாம் எனக்கு தெரியும். உன் கணவன் ஞானிகளிலும் மேலான நிலையை அடைந்துவிட்டான். இன்னும் அவன் தொட வேண்டியது தூரத்தில் இருக்கிறது. அதற்கு தடை போடாதே. அவனை துறவறம் மேற்கொள்ள அனுமதி கொடு” என்றார்.
“சாமியே சொல்லீட்டிங்க அப்புறம் நான் குறுக்கே நிற்பேனா?” விழுந்து வாங்கினாள் நஞ்சம்மா.
சுவாமிகள் வந்த வழியே புறப்பட்டார்.
உண்மையில் நெய்க்குன்றம் தண்டபாணி சுவாமிகள் ரூபத்தில் வந்தது, சாட்சாத் அந்த பழனி தண்டாயுதபாணியேதான்.
அர்த்தநாரி தனது மகனின் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு காசிக்குப் புறப்பட்டார். சில வருடங்கள் கழிந்த நிலையில் கங்கைகரையில் இருந்த தனது மகனை அவர் காண நேரிட்டது.
தாயார் தவறிவிட்டதாகவும், அவருடைய அஸ்தியை கங்கையில் கரைக்க வந்ததாகவும் தெரிவித்தான். மனைவியின் இழப்பு அர்த்தநாரியை சற்றும் அசைத்துப் பார்க்கவில்லை. மௌனம் காத்தார்.
“எனக்கென யார் இருக்கா? தயவுசெஞ்சு என்கூட வந்திருங்களேன்…” கெஞ்சினான் மகன்.
பிடிவாதமாய் மறுத்துவிட்டார் அர்த்தநாரி. தோல்வியுடன் திரும்பிப்போனான் அவன்.
காசியிலிருந்து இமயமலைக்கு பயணப்பட்டார் அர்த்தநாரி. அங்கே சந்தித்த சாது ஒருவரிடமிருந்து முறையான சந்நியாசம் பெற்றுக்கொண்டார். அப்படியே தனது பயணத்தை தொடர்ந்தவர் பல திருத்தலங்களை தரிசித்து முடித்து மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார். ரமண மகரிஷியுடன் சில நாட்கள் தங்கியிருந்தார். பத்து நாட்கள் கழிந்த நிலையில், மகரிஷியிடமிருந்து அந்த உத்தரவு பிறந்தது.
“மலையைவிட்டு கீழே இறங்கு.”
திடுக்கிட்டார். தான் தவறொன்றும் செய்யவில்லையே. அப்புறம் எதற்காக இந்த உத்தரவு. ஒன்றும் புரியவில்லை அவருக்கு. மறுப்பேதும் சொல்லாமல் மலையை விட்டு இறங்கும் வேளையில், சேஷாத்ரி சுவாமிகள் எதிர்ப்பட்டார்.
“அர்த்தநாரி, உன் மந்திரம் திருப்புகழ் அல்லவா… அது மகாமந்திரம் அதுவே உனக்கு போதும். இப்போது நீ வள்ளிமலைக்கு போ. நான் அங்கே வருகிறேன்” என்றார்.
ரமணர், மலையிலிருந்து இறங்கச் சொன்ன காரணம் அர்த்தநாரிக்குப் புரிந்தது. சேஷாத்ரி சுவாமிகளையும், ரமண மகரிஷியையும் தனது குருவாக ஏற்றுக்கொண்டு வள்ளிமலைக்கு பயணப்பட்டார்.
குறத்தியாக வள்ளி பிறந்து வளர்ந்ததாலேயே, இது வள்ளி மலையாக அழைக்கப்பட்டது. இத்திருத்தலத்தில் தங்கியவர், தவம் இயற்றுவதையும் திருப்புகழை பரப்புவதையும் மேற்கொண்டுவந்தார். அங்கிருந்த மக்கள் அவரை வள்ளிமலை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என தங்களுக்கு பிடித்த பெயர்களில் அழைக்க ஆரம்பித்தனர்.
திருப்புகழை பரப்புவதில் வள்ளிமலை சுவாமிகள் பெரும் பணியாற்றினார். பல்வேறு ஊர்களில் திருப்புகழ் சபைகளை அமைத்தார். பழனியில் திருப்புகழ் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
அந்நேரத்தில் சேஷாத்ரி சுவாமிகள் ஜீவசமாதி அடைந்தார். குருநாதரை இழந்த வருத்தத்தோடு அக்காரியங்களில் கலந்துகொண்டு திரும்பினார் வள்ளிமலை சுவாமிகள்.
சில நாட்கள் சென்ற பின்பு அவரை காண வெட்டியான் ஒருவன் வந்திருந்தான். திருவண்ணாமலை மயானத்தில் சேஷாத்ரி சுவாமிகள் தியானம் செய்வது வழக்கம் என்றும், தன் மீது சுவாமிகளுக்கு மிகுந்த அன்பு உண்டு என்பதையும் கூறினான். அவர் பிரிந்தது குறித்து வருந்திவிட்டு, தன் கனவில் சுவாமிகள் வந்து இவ்விடத்தில் கீறி வடிவில் காட்சி கொடுப்பதாக சொன்னார் என்றான்.
அதன்படியே ஒருநாள் காட்சியும் கொடுத்தார் சேஷாத்ரி சுவாமிகள். அதை வள்ளிமலை சுவாமிகளும் கண்டு இன்புற்றார்.
சில வருடங்கள் கழித்து பெரும்பாலும் சென்னையிலேயே தங்க ஆரம்பித்தார் சுவாமிகள். அவ்வப்பொழுது வள்ளிமலை வந்து போவார். இந்நிலையில் ரமண மகரிஷி மகாசமாதி அடைந்தார் என்கிற தகவல் அவரை வந்தடைந்தது. தன்னுடைய குருநாதர்கள் இருவரும் தன்னைவிட்டு பிரிந்தது அவருக்கு வருத்தமளித்தது. 1950 நவம்பர் 22ம் தேதி, தானும் முக்தி அடைந்தார் வள்ளிமலை சுவாமிகள். அவரது திருமேனி வள்ளிமலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அவர் தவம் செய்த குகையிலேயே சமாதியில் வைக்கப்பட்டது.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன