வள்ளிமலை சுவாமிகள் – 1

குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் நிரம்பிய அந்த திருமண வீடு களைகட்டி இருந்தது. அனைவரிடமும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிரம்பி வழிந்தது.
“பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” புரோகிதர் கூறிய அடுத்த சில நிமிடங்களில், மணப்பெண் நஞ்சம்மா முகத்தில் பூசிய வெட்கத்தோடு வெளியே வந்தாள்.
அதேநேரம் மணமேடையில் சலசலப்பு.
“சீக்கிரம்… அந்த சாவிக்கொத்தை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுங்க…” யாரோ ஒருவர் பெருங்குரலில் கத்தினார்.
வலிப்பின் காரணமாக நுரை தள்ளிய வாயுடன் மணமேடையில் சரிந்து விழுந்து வெட்டிவெட்டி இழுத்தபடி இருந்தது மாப்பிள்ளையின் உடல். சாவிக்கொத்து அவருடைய கைகளில் திணிக்கப்பட்ட சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் வலிப்பு அடங்க ஆரம்பித்தது.
திருமணத்திற்கு வந்திருந்த கூட்டம் அக்காட்சியை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, மணப்பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் கோபமாய் கத்தினார்.
“வலிப்பு நோயை மறைச்சு கல்யாணம் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?”
அப்பேச்சின் துவக்கம் தீயாய் திகுதிகுவெனபற்றி கொழுந்துவிட்டு எரிந்து திருமணம் நிறுத்தப்பட்டது. நஞ்சம்மாவின் பெற்றோருக்கு இதில் துளியும் விருப்பமில்லை. மணமேடை வரை வந்தபின்பு கல்யாணம் நின்றுபோனால் ஊர் என்ன பேசும்? நாளை தன் பெண்ணை யார்தான் மணம்முடிக்க முன் வருவார்கள்?
உடனே மண்டபத்தில் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது. அத்திருமணத்திற்கு வந்திருந்த அர்த்தநாரி சூழ்நிலைக் கைதியானார். அவரையே மணமகனாக்கி, கழுத்தில் மாங்கல்யம் வாங்கிகொண்டாள் நஞ்சம்மா.
ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
அர்த்தநாரி ஏற்கனவே திருமணமானவர்.
அப்புறம் எப்படி அடுத்த திருமணத்திற்கு அவர் சம்மதித்தார்? என்கிற கேள்வி எளிதில் நம் மனதில் தோன்றும்.
இறைவனின் திருவுள்ளத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது இருந்தால், அதை தடுக்க அர்த்தநாரி யார்? என்பதே இதன் பதில்.

கோயம்புத்தூருக்கு அருகே உள்ள பூநாச்சி புதூரில் வசித்துவந்தனர் சிதம்பரம் ஐயர், மகாலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு வெகுகாலம் புத்திரபாக்கியம் இல்லை. இதன் காரணமாக வேண்டாத தெய்வங்களும் இல்லை.
அன்றைக்கு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மகாலட்சுமி அருகில் வந்த நாகம் ஒன்று படமெடுத்து ஆட ஆரம்பித்தது. திடுக்கிட்டு போனார் அவர்.
“திருச்செங்கோட்டுக்கு வந்து பனிரெண்டு அமாவாசைகள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறேன். நாகராஜா… நல்லபடி இங்கிருந்து போய்விடு…” மனமுருக வேண்டி கற்பூரம் காட்டினார் மகாலட்சுமி.
நாகப்பாம்பு வந்த சுவடு தெரியாமல் போயிருந்தது.
நாகாச்சலம் என்னும் பெயர் பெற்ற திருச்செங்கோடு திருத்தலத்திற்கு, கணவர் சகிதமாய் சென்று தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்.
அதன் விளைவு இறைவன் அருளால் நாகம்மாள் என்கிற பெண் குழந்தையும், அடுத்த சில வருடங்களில் அர்த்தநாரி என்ற ஆண் குழந்தையும் பிறந்தன.
அர்த்தநாரிக்கு ஐந்து வயது ஆகும்பொழுது சிதம்பரம் ஐயர் காலமானார்.
தனக்கு ஆதரவு தேடிய சூழலில், தன்னுடைய தமையன் வீட்டில் தஞ்சம் புகுந்தார் மகாலட்சுமி. குழந்தைகள் வளர ஆரம்பித்தன. அர்த்தநாரிக்கு சுத்தமாக படிப்பு ஏறவில்லை. மல்யுத்தமும் சிலம்பமும் விரும்பி கற்றுக்கொண்டார். நல்ல குரல்வளம் இருந்ததால், ஒரு நாடக குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு நடிக்கவும் ஆரம்பித்தார்.
அவருடைய ஒன்பதாவது வயதில், மாமன் மகளையே மணம் முடித்து வைக்கப்பட்டார். நாட்கள் நகர்ந்தன. மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார் அர்த்தநாரி. அனைவரையும் காப்பாற்ற வேலை ஒன்று வேண்டுமே. தேட ஆரம்பித்தார்.
தனது உறவினர் ஒருவரின் உதவியால் மைசூர் மகாராஜா அரண்மனையில் சமையல்காரர் வேலை கிடைத்தது. மனைவி, குழந்தைகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, தான் மட்டும் புறப்பட்டார்.
அங்குதான், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த சுபநாளில் மீண்டும் மணமகன் ஆனார்.
சில ஆண்டுகள் கழிந்த நிலையில், அர்த்தநாரியை வந்தடைந்தது அந்த அமங்கலச் செய்தி…
மூத்த தாரமும் அவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டனர். இத்துக்கம் தாங்காமல் தாய் மகாலட்சுமியும் மாண்டுபோனார்.
இந்நிகழ்வை ஜீரணிப்பதற்கு முன்பாகவே, இரண்டாம் தாரத்திற்கு பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்து போயின.
ஒன்றன்பின் ஒன்றாக விழுந்த அடியால் அர்த்தநாரி நிலைகுலைந்து போனார். உள்ளம் விரக்தியில் விழுந்து, வாழ்கையே சூனியமாய் தெரிந்தது. மற்றுமொரு பேரிடியாய் வயிற்று வலி வேறு வந்திருந்தது.
வலி வரும்பொழுதெல்லாம் துடித்துப்போனார் அர்த்தநாரி. பல்வேறு வைத்தியர்களிடமும் காட்டியாயிற்று, குணம் ஒன்றும் தெரியவில்லை.
“இந்தாப்பா… உனக்கு கடவுள் பக்தி கடுகளவும் இல்லைங்கிறது எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை. நான் சொல்றதை கேட்டு நடந்தால் நிச்சயமாய் உன் வலி காணாமல் போயிடும். என்ன சொல்றே?” அந்த அரண்மனை ஊழியன் கேட்டான்.
“இந்த கடுமையான வயிற்று வலி போயிடும்னா, நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்.” முகத்தில் பரவியிருந்த வேதனை ரேகைகள் தெரிய சம்மதித்தார்.
“பழனிமலைக்கு போயி, அங்கே இருக்கிற தண்டாயுதபாணி சுவாமிகிட்டே மனமுருக வேண்டிக்க. அப்புறம் இந்த வலி எங்கே போயிடுச்சுன்னு உனக்கே தெரியாது”.
அர்த்தநாரி தனது மனைவி நஞ்சம்மாவையும், மகன் நரசிம்மனையும் அழைத்துக்கொண்டு பழனி மலையை அடைந்து அங்கேயே தங்கினார்.
நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து அபிஷேக பாலையும், முருகனுக்குப் படைத்த பழத்தையும் உண்டுவந்தவரின் வயிற்று வலி மாயமாய் மறைந்திருந்தது.
கோயில் சந்நிதியில் யாரோ பாடிய திருப்புகழ் பாடலை ஒரு தினம் கேட்டவர் உள்ளம் நெகிழ்ந்தார். மனதில் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. முருகன் அவர் மனதை முற்றிலும் ஆட்கொண்டிருந்தான். சதா, அவனை பற்றிய நினைவிலேயே இருக்க ஆரம்பித்தார் அர்த்தநாரி.
நித்தமும் திருப்புகழைப் பாடிக்கொண்டு கோயிலே கதி என்பது அவரது வாடிக்கையானது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவரை மைசூர் சாமி, திருப்புகழ் சாமி என்றெல்லாம் அழைக்க ஆரம்பித்தனர்.
பொதிகை மலை, திருக்குற்றாலம் பாபநாசம் போன்ற திருத்தலங்களுக்கெல்லாம் தீர்த்தயாத்திரை சென்றுவந்தார் அர்த்தநாரி. அங்கு ஏற்பட்ட பல சித்தர்களின் தொடர்பால் மூலிகை வைத்தியம் அறிந்துகொண்டு, பலரின் நோய்களை தீர்க்க ஆரம்பித்தார்.
ரமண மகரிஷியை பற்றி அறிந்துகொண்டு, அவரைக் காண திருவண்ணாமலை வந்துசேர்ந்தார்.
ஆசிரம வாசலில் சிறு கூட்டம் ரமணரை தரிசிக்க நின்றுகொண்டிருந்தது. அவர்களோடு இணைந்துகொண்டார் அர்த்தநாரி.
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் வந்தார் ரமணர். கூட்டத்தினரை கண்டவர், தனது பார்வையை அர்த்தநாரியிடம் நிறுத்தினார். இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டன.
கோவணமும் கையில் சிறு கம்புமாய் காணப்பட்ட ரமணரை கண்ட அர்த்தநாரிக்கு வேறு ரூபத்தில் தெரிந்தார் ரமணர்.

தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன