ஸ்ரீ அன்னை-2

“மிர்ரா… காத்து பலமா அடிக்குது. இந்த பக்கம் வந்துடு…” தோழிகள் கத்தினர்.

அதற்குள் அந்த பலத்த காற்று மீராவை நிலைகுலையச் செய்து மலையிலிருந்து தள்ளியது. கீழே….அதல பாதாளத்தை நேக்கி பயணிக்க ஆரம்பித்தாள் மிர்ரா.

“மிர்ரா… மிர்ரா… ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்…” கத்திகொண்டே மலையிலிருந்து தபதபவென இறங்க ஆரம்பித்தனர் தோழிகள்.

அலறியடித்துக்கொண்டு மலையடிவாரம் வந்துசேர்ந்த பொழுது, மிர்ரா ஒன்றுமே நடக்காததுபோல் நின்றுகொண்டிருந்தாள். உடலில் சிறு சிராய்ப்பும் இல்லை.

‘எப்படி இது சாத்தியம்? யாரிவள்?’ கேள்விகள் ஓவ்வொருவரின் மனதிலும் உதித்தது.

மிர்ராவுக்கு அப்பொழுது வயது பதிமூன்று.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இதை ஒட்டிய வயதில் சுமார் ஒரு வருடங்களுக்கு ஆச்சர்யமான அனுபவங்கள் அவளுக்கு நிகழ்ந்தன.

இரவுப்பொழுதுகளில் மிர்ரா படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் உடலைவிட்டு தான் வெளியே வருவதை உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உயரே கிளம்பி வான்வெளிக்கு வந்துவிடுவாள். அவளின் ஆடை தங்கமயமாய் ஜொலிக்கும். அது அவளைவிட மிகப்பெரியதாய் அந்நகரம் முழுவதும் மூடுவதுபோல் இருக்கும். அதன் கீழே ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகள், நோயாளிகள் என பலரும் இருப்பார்கள்.

அனைவரும் மிர்ராவிடம் தங்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் நீக்குமாறு கெஞ்சுவார்கள். அப்பொழுது அந்த ஆடை அவர்களை நோக்கி நீளும். அதை தொட்டதும் அவர்கள் விரும்பியது கிடைக்கப்பெற்றவர்களாக மகிழ்ச்சியுடன் திரும்பிப் போவார்கள்.

ஓவ்வொரு இரவுப்பொழுதும் மிர்ராவுக்கு இதே அனுபவம் தொடர்ந்தது.

மிர்ரா வளர வளர அவள் மனதினுள் சித்து கலை பயிலும் ஆர்வமும் சிறிதாக துளிர்விட்டு பெரிய மரமாக வளர ஆரம்பித்தது. இக்கலையில் வல்லுநர் யார் என்பதை விசாரித்தபொழுது, அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த மாக்ஸ் தியோன் மற்றும் அவரது மனைவி ஆல்மா தியோன் பற்றி தெரியவந்தது.

அவர்களிடம் மாணவியாகச் சேர்ந்து சித்து கலை பயில ஆரம்பித்தாள். இயற்கையாகவே மிர்ராவுக்கு அளப்பறிய சக்திகள் இருந்ததனால், அக்கலை அவளுக்கு எளிதில் கைகூடியது.

அங்கு தங்கியிருந்த காலத்தில் அவளுக்கு புதுப்புது அனுபவங்கள் ஏற்பட்டன. அதன்மூலம் தன் ஆன்ம பலத்தை பெருக்கிக்கொண்டாள்.

சில மாதங்களில் பயிற்சி முடிந்தது. மிர்ரா சொந்த ஊருக்கு கிளம்பினாள். சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்த தியோனும் அவளுடன் இணைந்துகொண்டார்.

கப்பல் கிளம்பிய சிறிது நேரத்தில் கடும்புயல் வீசஆரம்பித்தது. கடலின் கொந்தளிப்பால் கப்பல் தள்ளாடியது. பயணிகள் அலறி, அங்குமிங்கும் ஓடினர். மாலுமிகள் கப்பலை செலுத்த மிகவும் சிரமப்பட்டனர்.

தியோன் மிர்ராவைப் பார்த்தார். அப்பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட மிர்ரா, தன்னுடைய அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தாள். சொற்ப நொடிகளில் தன் உடலைவிட்டு ஆன்ம ரூபத்தில் கப்பலுக்கு வெளியே வந்தாள். அங்கே பல கோரமான ஜீவன்கள் கொட்டமடித்துக் கொண்டிருந்தன.

மிர்ரா அவைகளிடம் சென்று “இக்கப்பலில் பல மனிதர்கள் பயணிக்கிறார்கள். உங்களின் ஆர்ப்பாட்டத்தால் அவர்கள் கலங்கி தவிக்கின்றனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தயவுசெய்து அமைதியாக இருங்கள்.” என்று வேண்டினாள்.

அத்தீயசக்திகள் சாந்தமாயின. புயலும் நின்றுபோய் கடல் அமைதியானது. மிர்ரா மீண்டும் தன் உடலுக்குள் திரும்பினாள். தியோன் அவளை மிகவும் பாராட்டினார்.

தாய்நாடு வந்துசேர்ந்த மிர்ராவுக்கு ஓவியப் பயிற்சியில் அதீத ஆர்வம் ஏற்பட்டது. ஓவியப்பள்ளி ஒன்றில் இணைந்து அக்கலையையும் கற்க ஆரம்பித்தாள்.

தொட்ட அனைத்திலும் வெற்றிவாகை சூடுவதுபோல, குறுகிய காலத்தில் ஓவியம் வரைவதில் புகழ்பெற்றாள். ஹென்றி மோரீஸ் என்கிற பிரபல ஓவியருடன் அப்பொழுது ஏற்பட்ட நட்பு இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்தது.

மணவாழ்க்கையின் பரிசாக ஆந்த்ரே மோரீஸ் என்கிற அழகிய ஆண் குழந்தைக்கு தாயானாள் மிர்ரா.

ஈசலின் ஒரு நாள் வாழ்கையை போல, வெகுவிரைவில் இருவரும் பிரிந்தனர்.

எதையும் பக்குவப்பட்ட மனதுடன் எதிர்கொள்ளும் மிர்ரா, அதற்காக கலங்கவில்லை. தனது தெய்வீக தேடலை தீவிரப்படுத்தினாள். ஆன்மிக எண்ணம் உடையோரிடம் அடிக்கடி உரையாடுவதை வழக்கமாக்கினாள். அந்த சமயத்தில் கிடைத்த இரண்டு புத்தகங்கள் அவளை ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத்கீதையும், சுவாமி விவேகானந்தரின் ராஜ யோகமும் தான் அவை.

அப்புத்தகங்களை படித்துமுடித்தவள் மனதில் கிருஷ்ணரும் விவேகானந்தரும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். இந்தியாவைப்பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த மிர்ராவுக்கு வந்துசேர்ந்த செய்திகள் பலத்த வியப்பை ஏற்படுத்தி இருந்தன.

இந்தியா இவ்வளவு ஆன்மிக வளம் கொழிக்கும் நாடா ! பல ஞானிகள், மகான்கள் தோன்றிய புண்ணிய பூமியா !! கடவுள் நேரில் வந்திறங்கிய புனித தேசமா !!!

மிர்ராவின் எண்ணம் முழுவதும் இந்தியாவை சுற்றிவர ஆரம்பித்தன. இந்தியா செல்லவேண்டும் என்கிற ஆர்வம் தீவிரமாய் தலைதூக்கியது.

அந்நேரத்தில் அவளின் எண்ண அலைகளுடன் ஒத்துப்போனவர் பால் ரிச்சர்ட்.

ஆன்மிக சிந்தனைகளால் இருவரும் ஒருவர்மீது ஒருவர் பெரும் மதிப்பு வைத்திருந்தனர். இது நாளடைவில் அன்பாக மாற, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

சில மாதங்கள் கழித்து பணி நிமித்தமாக இந்தியா கிளம்பினார் ரிச்சர்ட். அப்போது மிர்ரா இலச்சினை ஒன்றை அவரிடம் கொடுத்தாள்.

“ஆறு முனைகளுடன் கூடிய இந்த இலச்சினை, சித்து கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வடிவத்தின் உண்மையான பொருளை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். இதைப்பற்றி எந்த இந்திய மகான்களிடமாவது கேட்டுவாருங்கள்” என்றாள்.

ரிச்சர்ட் பாண்டிச்சேரி வந்திறங்கினார். தனது பணிகளை முடித்துவிட்டு மிர்ராவின் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தார்.

விசாரித்தவரையில், அருகில் ஒரு மகான் இருப்பதாக அனைவரும் ஒருமித்துக் கூறினர்.

ரிச்சர்ட், அவர்கள் சுட்டிக்காட்டிய வீட்டினுள் நுழைந்தார். பேரமைதி தன்னை தழுவுவதை உணர்ந்தார்.

அங்கே பலரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் மெல்லிய வெள்ளை உடையில் மெலிந்த தேகத்தோடு போதனை செய்துகொண்டிருந்தார் அவர்.

அரவிந்தர்.

ரிச்சர்ட் மக்களோடு மக்களாய் அமர்ந்து உரையை கேட்க ஆரம்பித்தார். அரவிந்தரின் பேச்சில் அவர் மயங்கிப்போயிருந்தார்.

உரை முடிந்து கூட்டம் கலைந்தது.

ரிச்சர்ட், அரவிந்தரின் அருகில் சென்று வணங்கினார். தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு மிர்ராவின் சந்தேகத்திற்கான விளக்கத்தைக் கேட்டார்.

அந்த இலச்சினையை கண்ட அரவிந்தரின் முகத்தில் பரவசம் ஒளிர்ந்தது. உதடுகள் மர்ம புன்னகை ஒன்றை சிந்தின.

‘யாரைக் காண காத்திருந்தேனோ, அவரைக்காணும் வேளை நெருங்கிவிட்டது’ தனக்குள் சொல்லிக்கொண்டார்.

(தொடரும் )

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

பட்டினத்தார் -1

திருவொற்றியூர்… வடிவுடையம்மன்ஆட்சிபுரியும் திருத்தலம். நடராஜர் தியாகராஜராக காட்சிதரும் திருத்தலம். கலிய நாயனார் அவதாரம் நிகழ்ந்த தலம். கம்ப ராமாயணம் பிறந்த …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன