ஸ்ரீ அன்னை -1

ணவு இடைவேளையின் பொழுது வகுப்பறைக்குள் நுழைந்தான் அந்த மாணவன். பதிமூன்றை ஒட்டிய வயதிருக்கும் என உருவமும், உயரமும் சொன்னது. கண்களில் அந்த வயதிற்குரிய குறும்பு கொப்பளித்தது.

“ஏய் குண்டுப் பொண்ணு… இப்படியே சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன்னா வெடிச்சிடுவ…” உணவருந்திக் கொண்டிருந்த சிறுமியை பார்த்து கமெண்ட் ஒன்றை உதிர்த்தான்.

அடுத்ததாக அமர்ந்திருந்த சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்தான்.

மற்றொருத்தியை பார்த்து “ஏன்…இவ்வளவு அழுக்கா தெரியிற… குளிக்கவே மாட்டியா?” என்றான்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் கேலியும், கிண்டலும் செய்துவர சிலர் அழ ஆரம்பித்தனர்.

எத்தனை நாட்கள்தான் இவனது தொல்லையை அவர்களும் தாங்கிக்கொள்வார்கள். ஓய்வு நேரத்தில் தன் வகுப்பைவிட்டு இங்கே வந்து கைவரிசை காட்டுவதில் அலாதியான சுகம் அவனுக்கு.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சாப்பிட்டுமுடித்து கை அலம்பிவிட்டு உள்ளே வந்த மிர்ராவின் பாதையை மறித்து நின்றான்.

“நகரு…” என்றாள் மிர்ரா.

“நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு, நகர்றேன்.”

மிர்ரா அவனை முறைத்தாள்.

“நகருன்னு சொன்னேன்…”

“எப்போ பார்த்தாலும் தனியாவே இருக்கியே… மத்தவங்களுக்கும் உனக்கும் சண்டையா?” கேலியாய் வார்த்தைகள் விழுந்தன.

“நகருன்னு சொன்னா கேட்கமாட்டியா?” மிர்ரா கோபத்தில் கத்தினாள்.

எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததோ! தன்னைவிட வயதில் பெரியவன் என்கிற நினைப்பே இல்லாமல், அலேக்காக தலைக்கு மேலே தூக்கினாள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அவன் “காப்பாத்துங்க… காப்பாத்துங்க” என்று அலறினான்.

வார்த்தையை முடிக்கும் முன் திருஷ்டி பூசணிக்காயை உடைப்பதுபோல் அவனை தொப்பென கீழே வீசினாள். அலறியடித்துக் கொண்டு, வலியையும் பொருட்படுத்தாமல் வெளியே ஓடினான் அக்குறும்பு மாணவன்.

இதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்தது.

சக மாணவ, மாணவிகளுக்குள் கருத்து வேறுபாடு தோன்றி, அது சண்டையாய் மாறியது.

மாணவர்கள் அடித்துவிடுவார்களோ என பயந்த மாணவிகள் வகுப்பறைக் கதவை மூடிவிட்டு உள்பக்கம் தாழிட்டுக்கொண்டார்கள்.

மாணவர்கள் வகுப்பறையை மறித்தபடி கும்பலாய் வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

வெளியே செல்ல வழி தெரியாமல் மாணவிகள் பலரும் அழ ஆரம்பித்தனர்.

“ஏன் இப்போ அழறீங்க? எல்லோரும் தைரியமாக இருங்க. நான் கதவை திறந்து வெளியே போகப் போறேன்.” மிர்ரா அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்.

“மிர்ரா வேண்டாம்…” பயந்துபோய் ஆளாளுக்கு அவளை தடுத்தனர்.

“யாரும் பயப்படாதீங்க… அவங்களால நம்மை ஒன்னும் பண்ணிட முடியாது.” தைரியமாய் சொல்லிய மிர்ரா, வகுப்பறைக் கதவை திறந்தாள்.

வெளியே கூச்சலிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்து “வழியை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்” என்றாள்.

அது வெறும் வார்த்தைகளா! அல்லது மந்திரச் சொற்களா!! தெரியவில்லை.

அனைவரும் புன்னகவராளி இசைக்கு கட்டுப்பட்ட நாகங்களாய் நின்றிருந்தனர். மிர்ரா கம்பீரமாய் அவர்களை விலக்கிவிட்டு நடந்து சென்றாள்.

மாணவிகள் அவளை அதிசயப் பிறவியாக மீண்டும் பார்த்தனர்.

பல சமயங்களில் ‘பூ’வாக இருக்கும் மிர்ரா, அநியாயங்களைக் கண்டால் புயலாகிவிடுவாள்.

இந்த இரண்டு சம்பவங்களும் சக மாணவிகள் மத்தியில் கதாநாயகி அந்தஸ்தை அவளுக்கு ஏற்படுத்தி இருந்தன.

அவளிடம் இருந்த மற்றொரு குணம் எளிமை.

பாரிஸின் மிகப்பெரிய வங்கி அதிபராக அப்பா ‘மோரிஸ் அல்ஃபஸா’ விளங்கினாலும் அதற்காக அவள் ஆடம்பரமாய் இருந்ததில்லை. எளிமையையே விரும்பினாள்.

மிர்ராவுக்கு இயற்கைமேல் காதல் இருந்தது. அதிலும் பூக்கள் என்றால் கொள்ளைப் பிரியம். இது அவள் அம்மா ‘மதில்தா’விடமிருந்து வந்த பழக்கம்.

சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவளின் பல பொழுதுகள் தோட்டத்திலே கழிந்தன. செடிகளை உயிருள்ளவையாக பாவித்து அவற்றுடன் பேசுவாள். ஒரு குழந்தையை கொஞ்சுவதுபோல் கொஞ்சுவாள்.

தன் வயதிற்குரிய விளையாட்டுத்தனம் அவளிடம் அவ்வளவாக இருந்ததில்லை. அண்ணன் ‘மத்தயோ’ விளையாட அழைக்கும்பொழுது, வர மறுத்துவிடுவாள்.

தோட்டம், படிப்பு என செலவிட்ட நேரம்போக மீதி நேரங்களில் கண்களை மூடி ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துகொள்வாள். எவ்வளவு மணித்துளிகள் கரைந்தாலும் அந்நிலையில் மாற்றம் இருக்காது. பெற்றவர்கள், மிர்ரா தூங்குவதாக நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் ஆழ்நிலை தியானம் அவளை ஆட்கொண்டிருக்கும். அதுவும் நான்கு வயதிலேயே இந்த அறிய சக்தியை அவள் அடைந்திருந்தாள்.

அன்றைக்குப் பள்ளி விடுமுறை. மிர்ராவை காண தோழிகள் வந்திருந்தனர். விடுமுறையை எப்படி இனிமையாய் கழிக்கலாம் என ஆளாளுக்கு ஐடியா கொடுத்தனர். இறுதியாய் அருகிலிருந்த சிறு வனத்திற்கு செல்லலாம் என்கிற மிர்ராவின் யோசனை ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. உணவுப் பொருட்கள், தேவையான தண்ணீர் என அனைத்தும் எடுத்துக்கொண்டனர்.

அந்த சிறிய காடு ஐஸ் பெட்டியாய் மாறி குளுமையை தந்துகொண்டிருந்தது. மரங்கள் வெளிச்சத்தை மட்டும் உள்ளே விட்டு, வெயிலுக்கு 144 பிறப்பித்திருந்தது.

இயற்கையை காதலிக்கும் மிர்ராவின் மனது மகிழ்ச்சியில் குதிக்க, மரங்களிடமும் செடிகளிடமும் பேசுகிற பாவனையில் தலையாட்டிக் கொண்டே வந்தாள்.

நடந்துகொண்டிருந்தவள், கிளை உடைந்து தொங்கிய நிலையில் இருந்த அந்த மரத்தின் முன்னால் நின்றாள்.

இயற்கையை காதலிக்கும் மிர்ராவின் மனது மகிழ்ச்சியில் குதிக்க, மரங்களிடமும் செடிகளிடமும் பேசுகிற பாவனையில் தலையாட்டிக் கொண்டே வந்தாள்.

நடந்துகொண்டிருந்தவள், கிளை உடைந்து தொங்கிய நிலையில் இருந்த அந்த மரத்தின் முன்னால் நின்றாள்

“ஏன் அழற..?” மரத்தைப் பார்த்து சோகமாய் கேட்டாள்.

“………”

“அச்சச்சோ… வலிக்குதா?”

“……….”

“சரி…சரி… நீ ஒன்னும் கவலைப்படாதே. கூடிய சீக்கிரம் குணமாயிடுவ…”சொல்லிக்கொண்டேஉடைந்து தொங்கிய மரக்கிளையை பலம்கொண்டு இழுத்து உடைத்து கீழே வீசினாள். பின்னர் மரத்தை தடவிக்கொடுத்துவிட்டு நடக்கத்தொடங்கினாள்.

ஒன்றும் புரியாத தோழிகள் அவளை விநோதமாக பார்த்தனர்.

“ஏய்… என்னடி இது? லூசு மாதிரி மரத்தோட பேசுற..?” ஒருத்தி கேட்டாள்.

மிர்ராவின் இதழோரத்தில் புன்னகை ஒன்று வெளிப்பட்டது.

“பக்கத்தில நின்னு பார்க்கிறவுங்களுக்கு இது பைத்தியக்காரத்தனமா தெரியலாம். ஆனால் மரம் செடி கொடின்னு ஒவ்வொன்னும் நம்மளை மாதிரி உயிருள்ளவைகள்தான். அவைகளுக்கும் மகிழ்ச்சி வேதனைன்னு ஒவ்வொரு உணர்ச்சியும் உண்டு. அந்த மரத்தோட கிளையை யாரோ உடைச்சிட்டாங்க. அரைகுறையா உடைச்சிருந்ததால, அது வலியில் துடிச்சிது. முழுசா முறிச்சுப்போடச் சொல்லி என்கிட்டே அழுததால் மரத்துக்கு உதவிசெஞ்சேன்.” மிர்ரா சொல்லச்சொல்ல தோழிகள் அவளை நம்புவதா வேண்டாமா என பார்த்தனர்.

“நீ சொல்றதெல்லாம் உண்மையா மிர்ரா?

“மரம் செடி கொடி மட்டுமில்லை, மிருகங்கள் பறவைகள் பேசுறதுகூட எனக்குக் கேட்கும். இது எப்படின்னு எனக்கு தெரியாது. எனக்குள்ளே ஒரு சக்தி இறங்குவதை நான் உணர்றேன். அப்போ மனசுக்குள்ளே ஒரு பேரமைதி நிலவுது. அந்த சக்தி வழிகாட்றபடி நான் நடக்கிறேன். அதனால் மட்டுமே இதுமாதிரியான விஷயங்கள் எனக்கு சாத்தியமாகுது.” என்றாள் மிர்ரா.

தோழிகள் வியப்பின் விளிம்புவரை சென்றிருக்கவேண்டும். அவர்களின் அகலத் திறந்த கண்களும் வாய்களும் அதை காட்டிக்கொடுத்தன.

“வாங்க மேலே போவோம்” சொல்லிவிட்டு மிர்ரா முன்னே நடக்க, அனைவரும் பின்தொடர்ந்தனர்.

மலை உச்சியை தொட்டு மூச்சு வாங்க அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். மிர்ரா மட்டும் மலையின் விளிம்பிற்கு சென்று எட்டிப்பார்த்தாள். கீழே விளையாட்டு பொம்மையாய் உருவங்கள் தெரிந்தன.

“மிர்ரா… காத்து பலமா அடிக்குது. இந்த பக்கம் வந்துடு…” தோழிகள் கத்தினர்.

அதற்குள் அந்த பலத்த காற்று மீராவை நிலைகுலையச் செய்து மலையிலிருந்து தள்ளியது.கீழே….அதலபாதாளத்தை நேக்கி பயணிக்க ஆரம்பித்தாள் மிர்ரா.

தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

பட்டினத்தார் -1

திருவொற்றியூர்… வடிவுடையம்மன்ஆட்சிபுரியும் திருத்தலம். நடராஜர் தியாகராஜராக காட்சிதரும் திருத்தலம். கலிய நாயனார் அவதாரம் நிகழ்ந்த தலம். கம்ப ராமாயணம் பிறந்த …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன