ரமண மகரிஷி -1

சோர்வாக வீட்டினுள் நுழைந்தார் நெல்லையப்பர்.
அழகம்மையும், நாகசாமியும் ஆர்வமாய் அவரை சூழ்ந்துகொண்டனர்.
“சித்தப்பா, போன காரியம் என்னாச்சு? நம்ம வெங்கட்ராமனை பார்த்தீங்களா? வீட்டுக்கு வர அவன் சம்மதிச்சானா?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் நாகசாமி.
‘பொறு’ என்பதுபோல் சைகை காட்டியபடி அருகிலிருந்த ஒரு சொம்பு நீரையும் வயிற்றுக்கு கொடுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் நெல்லையப்பர்.
“நாம எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துபோச்சு. மூணு தலைமுறைக்கு முன்னால யாரோ ஒரு சந்நியாசி விட்ட சாபம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருத்தரை துறவியாக மாத்திட்டு வருது. இந்த தலைமுறையில நம்ம வெங்கட்ராமன் மூலமாக அது பலிச்சிடுச்சு. எல்லாம் அந்த ஈஸ்வரன் அனுக்கிரகம். மனசை தேத்திக்கோங்க… அவன் ஒரு சாமியாராக மாறி திருவண்ணாமலையில் இருக்கான்…நான் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்துட்டேன். அவன் பதிலேதும் சொல்லவேயில்லை…” நெல்லையப்பர் சொல்லி முடிக்க, தன் புடவைத் தலைப்பை வாயில் பொத்திக்கொண்டு அழுதார் அழகம்மை.
“அம்மா… நீ மனசொடிஞ்சு போயிடாதம்மா. நாம ரெண்டு பேரும் போய் அவனை கூப்பிடுவோம். அவன் நிச்சயமாக வருவான்” அழகம்மைக்கு ஆறுதல் சொன்னார் நாகசாமி.
திருமணம், பேரன், பேத்தி என எத்தனையோ கனவுகளை மனதிற்குள் அடைகாத்து வைத்திருந்த அழகம்மையால், தன் மகன் துறவியானதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
நெல்லையப்பரும், நாகசாமியும் சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் ஓரளவு மனம் தேறி திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டார்.
அழகம்மையின் கால்கள் முன்னோக்கி நடந்தாலும், மனம் பின்னோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

திருச்சுழி சுற்று வட்டாரத்தில் சுந்தரம் அய்யரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திறமையான வழக்கறிஞர். பெரிய பக்திமான். இதையெல்லாம் தாண்டி அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் இருந்தார் அவர். அவ்வூரில் ஒரு அன்னச்சத்திரம் கட்டி வைத்து வழிப்போக்கர்களுக்கு மூன்று வேளையும் உணவளித்து வந்தார். இதனாலேயே அவர் புகழ் சுற்றி உள்ள கிராமங்களில் பரவியது.

அவரது உள்ளம் புரிந்தவராகவே மனைவி அழகம்மையும் நடந்து கொண்டார். இவ்விருவருக்கும் பெண் பிள்ளை இல்லையே என்பதைத் தவிர வேறு குறை எதையும் வைக்கவில்லை இறைவன். மூன்று ஆண் பிள்ளைகளில் மூத்தவன் நாகசாமி. அடுத்ததாக வெங்கட்ராமன். மூன்றாவது நாகசுந்தரம்.

இம்மூவரில் வெங்கட்ராமனிடம் குறும்பும் வால்தனமும் அதிகமாகவே காணப்பட்டது. மற்றவர்களிடம் வலிய சென்று வம்பு செய்வது, தன்னைவிட வயதில் மூத்தவர்களை அடிப்பது, அவர்களை கேலி செய்து ரசிப்பது என அவனது தொந்தரவுகள் கூடிக்கொண்டே போனது. படிப்பில் படுசுட்டி என்கிற பெயர் எடுக்காமல் ‘வெங்கட்ராமனா? சரியான போக்கிரிப் பயலாயிற்றே?’ என்கிற பெயரையே எடுத்திருந்தான்.

அடிக்கடி குறும்புகள் செய்துவிட்டு சுந்தரம் அய்யர் அடிக்க வருவது தெரிந்ததும் திருச்சுழி சகாயவல்லி அம்பிகை கர்ப்பகிரகத்தினுள் ஒளிந்து கொள்வதே வெங்கட்ராமனின் வழக்கம். மாலை வந்ததும் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு தன் அப்பா முன்பு நல்ல பிள்ளையாய் வந்து நிற்பான். அக்கோலத்தில் அவனைப் பார்க்கும் சுந்தரம் அய்யரின் கோபம் காணாமல் போய் பாசம் மேலோங்கும். அவனை வாரி அணைத்துக்கொள்வார்.

வெங்கட்ராமனின் சேட்டைகள் ஒரு புறம் இருந்தாலும், அவன் கைபட்ட காரியம் துலங்கும் என்கிற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது. அதனால் எச்செயலாக இருந்தாலும் முதலில் அழைக்கப்படுபவனாக அவன் இருந்தான்.
இப்படி குதூகலமாய் போய்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சுந்தரம் அய்யர் சிவனடி சேர்ந்தார்.
அவரது காரியங்கள் முடிந்ததும் சகோதரர்கள் மூவரும் சித்தப்பா சுப்பையருடன் மதுரை பயணமானார்கள். விட்டுப்போன பள்ளிப்படிப்பை அங்கு தொடர ஆரம்பித்தார்கள்.

நாட்கள் செல்லச்செல்ல வெங்கட்ராமனின் குறும்புகள் குறைய ஆரம்பித்தன. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே மாறியிருந்தான். அடிக்கடி கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த பெரியபுராண சொற்பொழிவைக் கேட்டான் வெங்கட்ராமன். அவன் மனம் அதிலேயே லயித்து சிவசிந்தனை அவனை ஆட்டுவித்தது. அதுமட்டுமில்லாமல் சுப்பய்யரை தேடி வந்த பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையையும், அருணாச்சலேஸ்வரர் மகிமையையும் வெங்கட்ராமனுக்கு எடுத்துரைத்தார். அதிலிருந்து பெரியபுராணமும் அருணாச்சலமும் அவன் உடலினுள் ஒன்று கலந்து இனம் புரியாத மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

அன்றைய தினம் வீட்டுப் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த வெங்கட்ராமனுக்கு பாடத்தின்மேல் சலிப்பு தட்ட, ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து போனான். இதை கவனித்த நாகசாமிக்கு கோபம் வந்தது. தம்பி படிக்கவில்லையே என்கிற ஆத்திரத்தில் அவரிடமிருந்து வார்த்தைகள் தாறுமாறாய் வந்து விழுந்தன. ஒவ்வொரு சொல்லும் அமிலத் துளியாய் வெங்கட்ராமனை பொசுக்கியது. மனம் நொந்துபோனவன், நாகசாமி கொடுத்திருந்த கல்விக்கட்டணத்தில் மூன்று ரூபாயை எடுத்துக்கொண்டான். தன்னை யாரும் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

அழகம்மையும் நாகசாமியும் திருவண்ணாமலை வந்து சேர்ந்த பொழுது வெங்கட்ராமன் பவழக்குன்றில் தங்கியிருந்தார். இருபது வயது இளம் துறவியான அவரைக் காண மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒற்றைக் கோவணத்துடன் பாறை மேல் படுத்திருந்த தன் மகனைப் பார்த்த அழகம்மை கதறினார். விதம் விதமாய் உடை உடுத்தி ஓடி விளையாடிய சிறு வயது வெங்கட்ராமன் அவர் கண் முன் வந்துபோக அழகம்மையின் அழுகை இன்னும் அதிகரித்தது.

“வெங்கட்ராமா…எங்களையெல்லாம் பிரிய உனக்கு எப்படியப்பா மனசுவந்தது? திரும்பி வந்து விடய்யா…” தன் மகனை நோக்கி கைகூப்பினார் அழகம்மை.

“அண்ணன் உன்னை எதுக்காகவும் திட்டமாட்டேன்யா. நாம எல்லோரும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமாக வாழலாம்யா” நாகசாமி கண்களில் வழியும் நீரை பொருட்படுத்தாமல் வெங்கட்ராமனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.

ஆனால் வெங்கட்ராமனோ அவர்கள் இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை. நெடுநேரம் கால்கடுக்க நின்று அழைத்தும் அவர் பதில் ஏதும் கூறாதது அவர்கள் இருவரையும் மட்டுமல்லாது வந்து சென்ற பக்தர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
“சாமி… அவங்ககூட பேசலைன்னாலும் பரவாயில்லை உங்க பதிலை எழுதியாவது காட்டக்கூடாதா?” பக்தர்கள் வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.

‘இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மைகள்தான் நாம். அவன் நினைப்புக்கு ஏற்றபடி நாம் ஆடுகிறோம். எது நடக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ அது நடக்காது. நடக்க வேண்டாம் என்று நினைப்பது நடந்து விடும் எல்லாம் அவரவர் விதிப்பயன்’ என்றெழுதி பக்தர்களிடம் கொடுத்தார் வெங்கட்ராமன்.

அதைப் படித்த அழகம்மையும் நாகசாமியும், இனியும் வற்புறுத்தி பயனில்லை என எண்ணி ஊருக்கு கிளம்பினார்கள். அழுதுகொண்டே செல்லும் அவ்விருவரையும் பக்தர்கள் கூட்டம் பரிதாபமாய் பார்த்தது. ஆளுக்கொரு தினுசாய் பேசிக்கொண்டார்கள்.
“என்னதான் இருந்தாலும் பெத்த மனசில்லையா…வருத்தம் இருக்கத்தானே செய்யும்.”
“மூணு வருஷமாக சாமியை தேடிக்கிட்டே இருந்தாங்களாம். இப்போதான் கண்டுபிடிச்சி வந்திருக்காங்க.”

“சாமி நம்ம ஊருக்கு வந்தபோது எப்படி இருந்தாரு தெரியுமா?” ஒருவர் சொல்ல ஆரம்பித்தார்.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன