ஷீரடி பாபா 25

எதிர்பாராதது

தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறும் வழக்கமுள்ளவர். இந்த முறை அவருக்கு மிகவும் வேண்டியவரான படேல் என்பவர் முதன்முறையாக பாபாவை வணங்க வந்திருந்தார்.

தெய்வ பக்தி அதிகம் கொண்ட படேல் அன்று ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெற வந்த காரணம் , அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். அது கிட்டதட்ட முடியும் தருவாயில் அப்போது இருந்தது.

அவ்வூரில் கிராமத்தாரால் வணங்கப்ப்பட்ட ஒரு கோயில்,. பல ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதால் , யாராலும் அதிகம் கவனிக்கப்படவில்லை. இதனால், கோயில் இடிந்துவிட்டது. அங்கு புதிய கோயிலை கட்ட ஆரம்பித்தார் படேல். இடிந்த கோயிலில் வைத்து பூஜிக்கப் பட்ட திரு உருவையே புதிய கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று படேல் விரும்பினார்.

“புதிய கோயிலில், இடிந்த கோயிலின் திரு உருவை வைத்து ஆராதிக்கலாமா?” என்ற சந்தேகத்தை அவ்வூரார் கிளப்பினர். இதனால் மனம் குழம்பிப் போன படேல், தன் நண்பர் தேவ்விடம் இது பற்றி சொல்லி தீர்வு கோரினார். அவரின் ஆலோசனைப்படிதான் படேல் இப்போது பாபாவை காண வந்தது.

அப்போது தேவ், ஷீரடி மசூதியில் தனக்கு அறிமுகமானவரை கண்டு பேசப் போகவே, படேல் அங்கு தனித்து அமர்ந்திருந்தார். அப்போது தற்செயலாக அங்கு வந்த பாபாவின் அணுக்கத் தொண்டரான ஷாமா, படேலை பார்த்து , “ ஐயா!, என்ன விஷயமாக பாபாவைப் பார்க்க வந்துள்ளீர்கள்? நான் அறிந்து கொள்ளலாமா?” என்று அக்கறையுடன் கேட்டார். படேல், தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு , சிலை விவகாரத்தை எடுத்துச் சொன்னார்.

ஷாமா உடனே , படேலை மகானிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, சிலை குறித்த அவரது சந்தேகத்தையும் தெரிவித்தார்.
அதைக் கேட்டுக்கொண்ட மகான், “ ஷாமா, படேல் கிராமத்தார் இது வரை வணங்கி வந்த பழைய கோயிலின் திரு உருவையே பெயர்த்து புதிய கோயிலில் வைத்து வணங்கலாம் அதுதான் சரியான தீர்வும் கூட” என சிலை பிரச்னைக்கு உடனடி தீர்வை கூறினார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பாபா கூறிய தீர்வு ஷாமாவிற்கு திருப்தி அளிக்கவில்லையோ என்னவோ, பட்டென்று , “ பகவானே!, புதிய ஆலயம் எனில், அதில் புதிய தெய்வச் சிலையை நிறுவுவதில் என்ன தவறு இருக்க முடியும்”? “ என தயக்கமுடன் கேட்டார்.

இதைக் கேட்ட ஷீரடி நாதன், சற்று கோபமாக, “ யார் எந்த சிலையை பிரதிஷ்டை செய்தால் எனக்கென்ன ஆகப்போகிறது. இங்கே பார்! இதோ இந்த படேலிடம் சொல்லிவிடு! புதிதாக செய்த தெய்வச் சிலையின் கை , கால்களை உடைத்துவிட்டு, அந்த புதிய கோயிலில் வைத்து பூஜிக்கச் சொல்” என்று கூறினார். ஷாமா, படேல் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

சில வினாடிகள் அங்கே ஏற்பட்ட நிசபதத்தை போக்கும் வகையில், பாபா கோபம் தணிந்து, , கருணை அளிக்கும் பழைய தோற்றத்திற்கு வந்து , ”ஷாமா, படேல் , நான் சொல்லப்போகும் இவ்விஷயத்தை கவனித்துக் கேளுங்கள்” என்றார்.

ஒரு சமயம் நானும் மற்றொருவரும் ஒரு பசுவை விலைக்கு வாங்க கிராமம் கிராமமாக போய்க்கொண்டிருந்தோம். பசு கிடைக்கவில்லை. கடைசியாக போன ஊரிலே ஒருவன் ஒரு கொழுத்த பசு ஒன்றைக் காட்டி , என்னுடன் வந்தவரிடம் கேட்டான். அந்த பசுவை பார்த்த ஆனந்தத்திலேயே என்னிடம் கருத்து கேட்காமலேயே , “அதை நான் விலைக்கு வாங்கப்போகிறேன்“ என சொல்லிக்கொண்டு , மாட்டுக்காரனிடம் பேரமும் பேச ஆரம்பித்து விட்டான். நான் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு, “ ”வேண்டாமப்பா!, இந்த பிராணி வில்லங்கமானது. என்று எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அந்த பசுவை விலைக்கு வாங்கிவந்தார்.” என கூறி முடித்தார்.

ஷாமா மிகுந்த ஆவலோடு, ”பகவானே!, அதனால் என்ன நடந்தது?“ என்று கேட்டார்.. “என்னவாச்சா? அந்த பசுவுடன் அந்த ஆள் தன் ஊர் மண்ணில் காலடி எடுத்துவைத்த கணமே , அவூராருக்கு காலரா நோய் வந்து பரவ ஆரம்பித்துவிட்டது. இரண்டு மூன்று நாளில் பலர் இறந்தனர்“ என பதிலளித்தார் பாபா.

அன்று ஷாமாவிற்கு சந்திராஷ்டம வேளையோ என்னவோ. “ பகவானே!, அது வாயில்லா பிராணி, இது சிலைதானே. இதனால் என்ன வரப்போகிறது?’ என்று கேட்டார்.

அப்போது ஷாமாவை கூர்ந்து பார்த்த மகான், “அப்பனே ! என் கோபத்தை தூண்டாதே, நான் இப்போது பேசுவது என் வாயால்தானே? அல்லது வேறு ஏதேனும் உறுப்பு வழியாக பேசுகிறேனா? ”என்று சற்று காட்டமாக கேட்கவே, ஷாமா கப்சிப்பென அமைதியாகிவிட்டார்.

பிறகு படேல், பாபாவிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பியவுடன், “படேல்!, மகான் சொன்னபடி புதிய ஆலயத்தில் பழைய சிலையையே வைத்து விழா நடத்துங்கள்“ என்று ஷாமா ஆலோசனை கூறினார். அதற்கு பலமாக தலையை ஆட்டிவிட்டு படேல் அங்கிருந்து புறப்பட்டார்.

படேல் ஊர் சென்றதும் முதல் வேலையாக , அவ்வூரில் வசிக்கும் தன் குருநாதரை சந்தித்து சிலை குறித்து மகான் பாபா சொன்னதைச் சொன்னார். அந்த கருத்தை குருநாதர் ஏற்கவில்லை. தனது காணிக்கையாக நானூறு ரூபாயை அவரிடன் செலுத்திவிட்டு திரும்பிய படேலின் மனதில் புதிய கோயிலில் புதிய சிலைதான் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்ற திடமான எண்ணம் பற்றிக்கொண்டது.

புதிய கோயிலின் கும்பாபிஷேகத் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. அன்றுதான் புதிய ஆலய விழா தொடக்க தினம். புதிதாக உருவாக்கிய தெய்வத் திரு வுருவை அவூரில் ஊர்வலமாக தூக்கி வந்தனர். அவர்களை திடீரென காலரா நோய் தாக்கத் தொடங்கியது. ஓரிரு மணி நேரத்திலேயே பலர் இறந்து விட்டனர்.

இதனால். கவலையும் அச்சமும் அடைந்த படேல், தான் அங்கிருந்து கிளம்ப முடியாத நிலையில், தனது பணியாளர் ஒருவரை தனது குருநாதரிடம் அனுப்பி, இப்போது என்ன செய்வது? என கேட்டு வரச் சொன்னார். தன்னிடம் வந்தவனிடம் குருநாதர், அலட்சியப் போக்குடன், “ ஏய்!, போய் படேலிடம் சொல்லு. எனக்கு கணிசமான அளவு நிலம் காணிக்கை தந்தால்தான் காலரா நோய் இந்த ஊரை விட்டு விலகும் , போ! போ!!” என்று விரட்டினார்.

அந்த பணியாளன் தன் எஜமானனிடம் குருநாதரின் விருப்பத்தை தெரிவித்தார். படேல் மனதில் சுரீர் என பட்டது. ஆஹா இம்மாதிரி நடக்கும் என்று தெரிந்தே மகான் பாபாவை சந்திக்கும்போது அவர் பசு கதையை பூடகமாக கூறி தன்னை எச்சரித்து இருக்கிறார் என அப்போது அவர் உணர்ந்து கொண்டார். தனது புதிய ஆலயத்தில் பழைய கோயிலின் பூஜிக்கப்பட்ட பழைய திரு உருவையே பிரதிஷ்டை செய்து விழா நடத்த வேண்டுமென முடிவெடுத்தார்.

-” விதி வர மதி கெடல்” இயற்கைதானே.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 21

ருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன