ஷீரடி பாபா 23

ஒரு தவறு செய்தால்…

பல பக்தர்கள் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார். அந்த பக்தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா? பயமின்றி சொல்.” என்று அன்பொழுக கேட்டார். சற்று தயங்கிய பக்தர், : நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும் : என்ற தன் ஆசையை வெளியிட்டார். “ அப்படியா!, “ என உற்சாகமாக சொன்ன பாபா ” ம் ! நடக்கட்டும் ” என தன் இசைவை தெரிவித்த அடுத்த நொடியே , பக்தர் ஒரு பக்திப் பாடலை பாடத் தொடங்கினார். அப்பாடல் கேட்க இனிமையாக இருந்தாலும் ராகம், தாளம் போன்றவற்றில் பல குறைகள் இருப்பதை பாபா உணர்ந்துவிட்டார்.

பக்தர் பாடி முடித்ததும் அவரை கனிவுடன் பார்த்த பாபா, “அப்பனே, உன் பாடல் அருமையானதுதான். முறைப்படி இசையை பயிலவில்லை என்பதை அப்பாடல் உணர்த்திவிட்டது என்று உரைத்து, பாடலில் உள்ள குறைகளைசுட்டிக்காட்டினார். “அதற்காக கவலை பட வேண்டாம். நாளாக நாளாக நீ சிறந்த பாடகனாகிவிடுவாய் “என்று உற்சாகப்படுத்தி உதி பிரசாதம் வழங்கி ஆசி கூறினார் ஷீரடிநாதன்.

சிறிது நேரத்தில், தானே அந்த பாடலை இனிமையாக பாடி அங்குள்ள பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார் மகான். அனைவரும் கை தட்டி ஆரவாரித்தனர்.

யாரும் அறிந்திராத ஒரு விஷபம் என்னவென்றால், ஷீரடி பூமியில் கால் பதித்த நாளில் இருந்து , இரவு நேரங்களில் பாபா தனியாக அமர்ந்து பாடிக்கொண்டிருப்பார் என்பதே.

மறுநாள் தரிசன வேளையில் மசூதிக்கு வந்த பக்தரான அப்துல் ரகீமிடம் மகான் புன்சிரிப்புடன் ” என்ன ரகீம், நேற்று நீங்கள் இல்லாது போய்விட்டீர்களே! இங்கே ஒரே சங்கீத மயம்தான். ஆனால் அன்றிரவு நான் அழுதேன் தெரியுமா?” என்று மென்னகையுடன் கூறினார். அது கேட்டு திடுக்கிட்ட அப்துல் ” ஏன் பாபா அப்படி ? “என கேட்டார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

” நேற்று என் பாடலை கேட்ட அஙுகிருந்த அனைவரும் திட்டித் தீர்த்துவிட்டனர் ” என பாபா புதிர் வைத்து கூறினார். பக்தர்கள் கைதட்டலையே திட்டியதாகக் கூறுவதை அறியாத அப்துல் அதிர்ச்சியுடன் ” தங்களையா? ஏன் ?” எனக் கேட்டார்.

” திட்டுதலெனில் அவர்கள் சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை என்பதையே அப்படிச் சொன்னேன். ஆனால் புத்திசாலியான நீர் அதை புரிந்துகொள்வீர் என்பது எனக்குத் தெரியும்.

” ஆமாம் ஐயனே! இறைவனை நேசிக்கும் எவரும் சிரிப்பதையும் அழுவதையும் இயல்பாக எடுத்துக்கொண்டு ஆடவும் செய்வார்களே “

” சரியாகச் சொன்னாய் அப்துல். உன் குருநாதர் யார் ? “

“ஐயனே! வணக்கத்திற்குரிய பாபி பலிஷா சிஷ்டி நிஜாமி என்பவரே என் குருநாதர் “

“உமது குருவிடமிருந்து சரியான முறையில் போதனை பெற்றுள்ளதால்தான் நீர் இறைவன் குறித்த தெளிவான ஞானம் பெற்றுள்ளீர் ” என ஆனந்தத்துடன் கூறி பிரசாதம் வழங்கி அனுப்பினார்.

எச். வி சாத்தே என்பவர் ஒரு மாவட்டத்தின் துணை கலெக்டராக பணிபுரிந்து வந்தார். பாபாவின் தீவிர பக்தரான அவர் அடிக்கடி பாபாவின் தரிசனம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். அப்படி ஒருமுறை அவர் பாபாவை தரிசித்து பல விஷயங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருக்கையில் , திடீரென பாபா ” சாத்தே , நீர் பள்ளிக்கூடம் சென்றதுண்டா? ” என்ற கேள்வியை எழுப்பினார்.

திகைப்புற்ற சாதே ” என்ன பகவானே , இப்படி கேட்டுவிட்டீர்கள். நான் பள்ளி செல்லாமலா துணை கலக்டர் பதவிக்கு போக முடிந்தது?” என்ற சாதேவின் கேள்விக்கு புன்சிரிப்பை பதிலாக்கினார் பாபா.

பின்னர் பகவானிடம் விடைபெற்று குழப்பமான மனநிலையுடன் தன் ஊருக்குத் திரும்பினார் சாத்தே.

இல்லம் திரும்பிய சாத்தே பகவானுடன் உரையாடிய விஷயங்களை மெல்ல அசைபோடுகையில் பள்ளிக்கூட விஷயம் பற்றி ஒரு பொறி உணர்வு தோன்றியது. “அடடா ! அதைப்பற்றித்தான் பகவான் தமக்கு குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை அறிந்து சற்று தலைகவிழ்ந்தார் சாத்தே.

முன்பு நடந்த பழைய நிகழ்ச்சி ஒன்று இதுதான். ஒரு சமயம் ஏதோ ஒரு அலுவலக விஷயமாக ஒரு பெண்ணை சந்திக்க அவளுடைய வீட்டிற்கு சென்றிருந்தார் சாத்தே. அவள் நடத்தையில் ஒழுங்கீனமானவள் என்றும் தன் உடலை விற்று அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறாள் என்பதும் அவர் அறியாத தகவல். அத்தகைய தொழில் புரிவோர் பலர் வசிக்கும் அப்பகுதியை பள்ளி என்று ஊரார் அழைப்பது வழக்கம்.

அழகான அப்பெண்ணிடம், வந்த பணி குறித்து சகஜமாக சாத்தே உரையாடுகையில் , அவரை அறியாமலேயே அவள் மீது ஓர் ஈர்ப்பு உணர்வு வந்தது. மோக வேட்கையில் அவள் கையைத் தொட அவர் முயற்சிக்கையில் , மூடப்பட்டிருந்த அவ்வழகியின் வீட்டின் கதவை யாரோ படபடவென தட்டும் சத்தம் கேட்டது.

திடுக்கிட்டுப் போன சாத்தே, தானே வெளியில் சென்று கதவை திறந்தபோது , அவர் கண்களுக்கு மட்டும் .பாபா காட்சியளித்து “அப்பனே ! என்ன விபரீதமான செயல் இது ? நரகம் நோக்கிய இப்பயணம் உமக்கு தேவை தானா?” என்ற கேள்வியை எழுப்பியதோடு மறைந்து போனார்.

இதனால் மெய்விதிர்த்துப் போன சாத்தே, குற்ற உணர்வுக்கு ஆளாகிப்போய் அவ்வீட்டுப் பெண்ணிடம் ஏதும் சொல்லாமலேயே தலை குனிந்தவாறே தன் இருப்பிடம் திரும்பினார். அப்போது அவர் நெஞ்சம், மோகச் சேற்றிலிருந்து தன்னை மீட்ட மகானிடம் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தது.

” என் பக்தன் உலகின் எந்தப் பக்கம் இருந்தாலும் , என் கண் அவன் பால் இருக்கும் ” என்பது மகானின் வாக்குகளில் ஒன்று

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 21

ருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன