ஷீரடி பாபா- 20

கயா தரிசனம்
===============
ஷீரடி மசூதியில் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. மகானின் அணுக்கத் தொண்டர் காகா சாகேப் தீட்சித், பாபாவின் அருகில் நின்று காத்திருந்தார். பக்தர்கள் தரிசனம் பெற்று முடிந்ததும், தனது கோரிக்கையை பகவானிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றம் அவர் முகத்தில் காணப்பட்டது.

கூட்டம் சற்று குறைந்ததும், “என்ன விஷயம் சொல்லலாமே” என்று தீட்சித்திடம் கனிவுடன் சொன்னார் பாபா.
“பகவானே தங்களிடம் முன்பே தெரிவித்திருந்த தேதி, முகூர்த்த வேளையில், நாக்பூரில் எனது இல்லத்தில் நடைபெற உள்ள என் மகனின் உபநயன விழாவில் தாங்கள் கலந்துகொண்டு ஆசிர்வதிக்க வேண்டும்” என்று பணிவுடன் கூறினார் தீட்சித் சில விநாடிகள் மவுனமாக இருந்த பாபா, ”தீட்சித் அந்த முகூர்த்த தேதிக்குப் பிறகு இரண்டு நாள் கழித்து, நமது தொண்டர் நானா சாகேப் சந்தோர்க்கரின் மகள் கல்யாணம் நடக்க உள்ளது. உன்னைப் போலவே என் வருகையை அவரும் எதிர்பார்க்கிறார். கவலை வேண்டாம். இந்த இரு நிகழ்ச்சிக்கும் என் சார்பில் நமது ஷாமாவை அனுப்பி வைக்கிறேன்” என்று உறுதிபடச் சொன்னார். அதைக்கேட்ட தீட்சித், மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

இரண்டு நாட்கள் கழித்து, பாபாவின் தொண்டர் ஷாமா, வந்து மகானை வணங்கி நின்றார். அவர் கையில், காகா சாகேப் தீட்சித், நானா சாகேப் சந்தோர்க்கர் ஆகியோரின் இல்ல விழா அழைப்பிதழ்கள் இருந்தன. அப்போது ஷாமா, “பகவானே! தங்கள் ஆணைப்படி, இரண்டு நிகழ்ச்சிகளிலும் தங்கள் சார்பாக கலந்துகொள்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, காசி, கயா, அயோத்தி தல ஷேத்ராடம் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

“ஷாமா, உன் விருப்பப்படியே அங்கெல்லாம் சென்று வா. ஆனால், உனக்கு முன்பே கயா தலத்தில் காத்திருப்பேன் நான்” என பூடகச் சிரிப்புடன் சொல்லி ஷாமாவுக்கு விடை கொடுத்தார் ஷீரடி நாதன்.

மகான் ஏன் இப்படி சொன்னார் என்ற கேள்வி, ஷாமாவின் மனதைக் குடைந்தது.
நானா, தீட்சித் ஆகிய இரண்டு பாபா பக்தர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஷாமா. பின்னர், திட்டமிட்டபடி காசி, கயா, அயோத்தி பயணத்தைத் தொடங்கினார். அயோத்தி சென்று 21 நாட்கள் தங்கினார். அங்குள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு, காசிக்குச் சென்றார். அங்கு இரண்டு மாதங்கள் தங்கி, வைதீக கர்மாக்களை முடித்துவிட்டு, பல கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

அடுத்து கயா செல்லத் தயாரானார் ஷாமா. இதை அறிந்துகொண்ட, காசியில் அவருக்கு அறிமுகமான சிலரும் அவருடன் கயா புறப்பட்டனர். காசியில் உள்ள ஷாமாவின் நண்பர் ஒருவர், “கயாவில் எங்கே தங்குவது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். அங்குள்ள பிரபலமான பூசாரி ஒருவரின் முகவரி தருகிறேன். அவர் மிகவும் நல்லவர். உங்களை நன்கு கவனித்துக்கொள்வார்” என்று சொல்லி, முகவரியைக் கொடுத்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அடுத்த நாள், கயா சென்றடைந்த ஷாமா, பூசாரியின் வீட்டுக்குச் சென்றார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற பூசாரி, “ஐயா, தாங்கள் இந்த வீட்டை உங்கள் சொந்த வீடு போல நினைத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம்” என அன்புடன் கூறினார்.

மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு, பூசாரியுடன் வீட்டுக்குள் சென்றார் ஷாமா. அந்தப் பெரிய வீட்டின் கூடத்தில் கால் வைத்தவுடன் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார் ஷாமா. காரணம், வீட்டின் சுவரில் சீரடி நாதனின் பெரிய படம் மாலைகள் அணிவிக்கப்பட்டுத் திருக்காட்சி தந்தது. மகானின் படம் அருகே சென்ற ஷாமா, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். “மகானே! ஷீரடியில் தாங்கள் என்னிடம் சொன்னவாறே எனக்கும் முன்பாகவே கயாவுக்கு வந்து தரிசனம் தந்துவிட்டீர்களே” என வியப்புடன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

பிறகு இந்தத் தகவலை, பூசாரியிடமும், அங்கு இருந்தவர்களிடமும் ஷாமா சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஷாமாவிடம், “ஐயா பல ஆண்டுகளுக்கு முன்னால், மகானை தரிசிக்க ஷீரடிக்கு நான் போனேன். அப்போது, தினமும் நான் பூஜிக்க பாபாவின் படம் வேண்டுமென்று அவரிடம் யாசித்தேன். அப்போது, பாபாவின் ஆணையை ஏற்று, அவரது தொண்டர் ஷாமா என்பவர், இந்தப் பெரிய படத்தை எனக்கு வழங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அந்த மகானுக்கு பூஜை செய்து வருகின்றேன்” என உணர்ச்சி ததும்ப கூறி முடித்தார். பூசாரியும் ஷாமாவும் முன்பே அறிமுகமாகியிருந்தும், சந்தித்து பலகாலம் ஆகிவிட்டதால், ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன