ஷீரடி பாபா – 17

வாமன் எடுத்த விஸ்வரூபம்

மணி கௌரி என்ற அந்தப் பெண், வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார் அன்று. காரணம் ஐந்து வயது கொண்ட அவளுடைய பிள்ளை வாமன் கடும் வயிற்றுப் போக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடும் வயிற்று வலி. ஏதேதோ சிகிச்சை அளித்து சமாளித்து வந்தார். அன்று நிலைமை கை மீறிப் போய்விட்டது.

மணி கௌரியின் கணவர் பிராண் கோவிந்த் லால் பாய் படேல். பிரிட்டிஷ் அரசுத் துறையில் ஆயத்தீர்வை அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருந்தார். வேலை காரணமாக அடிக்கடி கிராமம் கிராமமாகச் சென்று, அங்கு கூடாரம் அமைத்துத் தங்க வேண்டிய சூழ்நிலை. எனவே, லால் பாய் படேல் எந்த ஊருக்குச் சென்றாலும் மனைவி, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்.

அன்று அவர் முகாமிட்டிருந்த இடம், தர்சனா என்ற கிராமத்தின் புறச்சாலை. அங்கு கடைகளோ மருத்துவர்களோ கிடையாது. சில மைல் தூரம் நடந்து அருகில் உள்ள நகருக்குச் சென்றால்தான் கடைகளோ, மருத்துவ வசதியோ கிடைக்கும்.

அன்று, அதிகாலையிலேயே புறப்பட்டு கிராமத்தின் மையப்பகுதிக்குச் சென்றுவிட்டார் படேல். மகன் வாமனுக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. வலியால் துடித்துக்கொண்டிருக்கிறான். அதைக் கண்டு, பொறுக்க முடியாமல் தவிக்கிறார் கௌரி. வேதனையில் துடிக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்துடன் கூடாரத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த காலைப் பொழுதில், அங்கு ஒரு பக்கீர் திடீரென வந்தார். அவரைத் திகைப்புடன் பார்த்த கௌரியிடம், “தாயே! அதோ கூடாரத்தில் படுத்திருக்கிறானே உன் மகன், அவன் சிறந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா?” என்று வாஞ்சையுடன் சொன்னார். அதைக் கேட்ட அவள், “ஐயா, மிக்க மகிழ்ச்சி. ஆனால், வாமன் இப்போது வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறான். என் கணவர், கிராமத்தின் உட்பகுதிக்குப் போயுள்ளார். வேறு துணை யாரும் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை”. என கண்ணீர் விட்டபடி கூறினார்.

“அம்மா! நான் ஒன்று கேட்கிறேன். சொல்லுங்கள். அந்தப் பையனின் வலது அக்குளில் ஒரு மச்சம் இருக்குமே. உண்டா? இல்லையா?” என்று பக்கீர் கேட்டார். கௌரிக்கு ஆச்சரியம். “ஆமாம் ஐயா ஆமாம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார்.

“ தாயே! இறைவன் அருளால் அதை நான் அறிவேன். எதிர்காலத்தில் மிக உன்னதமான நிலைக்கு வரப்போகிறான் உன் செல்லப் பிள்ளை” என்று கூறியவாறே, தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பையை எடுத்தார். அதிலிருந்து கொஞ்சம் உதி பிரசாதம் எடுத்து, கௌரியிடம் கொடுத்தார். “இதை அவன் நெற்றியிலும் வயிற்றிலும் பூசு. அவன் வாயிலும் கொஞ்சம் போடு” என்றார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ரொம்ப நன்றி ஐயா” எனக் கூறிவிட்டு, கூடாரத்தின் உள்ளே சென்று, பக்கீர் சொன்னபடியே வாமனின் நெற்றியிலும் வயிற்றிலும் உதியைப் பூசினார். அவன் வாயிலும் கொஞ்சம் போட்டார். என்ன அதிசயம்! சிறுவன் உடனே படுக்கையில் இருந்து எழுந்து, “அம்மா” என்று அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான். மகிழ்ச்சியடைந்த கௌரி, மகனை அழைத்துக்கொண்டு, கூடாரத்துக்கு வெளியே வந்தார். பக்கீர் மாயமாகியிருந்தார். திகைத்துப் போனாள். அப்போது முதல், வாழ்நாள் வரை, வயிற்றுப் போக்கும் வயிற்று வலியும் வாமனை அண்டவே இல்லை.

நாட்கள் உருண்டோடின. ஏழு வயதை எட்டினான் வாமன். படேலுக்கு, கேதா என்ற நகரத்துக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. அவ்வூரில் சோமநாத் மகாதேவர் குடிகொண்ட சிவாலயம் இருந்தது. வாமன் தன் பெற்றோர்களுடனோ நண்பர்களுடனோ அடிக்கடி அந்தக் கோயிலுக்குச் செல்வான். அங்கு அவனை சந்திக்கும் பக்கீர் ஒருவர் ( வயிற்று வலியின்போது உதிப் பிரசாதம் கொடுத்தவர்) வயது வித்தியாசமின்றி, வாமனுடன் அவனுக்குச் சமமாக விளையாடுவார்.

வாமன் வளர வளர, அவனுடைய புத்திசாலித்தனமும் கூடவே வளர்ந்தது. இளைஞனாகிவிட்ட அவன் ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் துறவு மேற்கொண்டு, தெய்வத்தை அடைய வேண்டும் என்ற லட்சியம் அவனைப் பற்றியது. மகனின் வளர்ச்சியால் பூரிப்படைந்த அவன் தந்தை படேல் ஒருநாள் அவனிடம், “நீ ஷீரடிக்குப் போய், நடமாடும் தெய்வமாக உள்ள பாபாவை தரிசித்து வா. அது உன்னுடைய ஆன்மீக லட்சியம் நிறைவேற உதவலாம்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஷீரடிக்கு வாமன் வந்து சேர்ந்தது, 1911ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி. மகான் பாபாவை முதன்முதலாக தரிசித்தவுடனேயே அவனை பரவசம் பற்றிக்கொண்டது. “அடடே, இவர்தானே கேதா சிவாலயத்தில் தன்னுடன் அடிக்கடி விளையாடுபவர்” என்று ஆச்சரியப்பட்டான். அப்போது, ஷீரடி நாதர், “வாமனா! உன் மனம் ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புவதை நான் அறிவேன். மேன்மேலும் அதில் வளர்ச்சி பெற, காயத்ரிபுரய் சரணம் பாராயணத்தைத் தொடங்கி, தொடர்ந்து செய்” என ஆக்ஞையிட்டு பிரசாதம் அளித்தார்.

மகான் பாபாவை அடிக்கடி தரிசிக்க விரும்பினான் வாமன். அதற்கு வசதியாக, அவருடைய தந்தைக்கு மும்பைக்கு மாற்றலானது. நல்ல வேலையில் சேர்ந்தார் வாமன். அவனுக்குத் திருமணம் செய்ய கௌரி முடிவு செய்தார். வாமன் ஷீரடிக்கு வரும்போது, சில சமயங்களில் தன் சார்பாக அவரை பிட்சை பெறவும் ஆணையிடுவார் பாபா. நாளடைவில், வாமனை பாபு என அன்புடன் அழைக்க ஆரம்பித்தார் பாபா. வாமனைத் தன் மகன் போல பாவித்தார். பாபா ஆக்ஞையின்படி ஷீரடியில் சுமார் 11 மாதம் வாமன் இருந்தார். அதனால், மனத்தளவிலும் முழு ஆன்மீகவாதியாக உயர்ந்த நிலையைப் பெற்றார் வாமன்.

ஷீரடியில் வாமன் தங்கியிருந்த காலத்தில், மசூதி அருகே கட்டடத் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அங்கு, மேலேயிருந்து ஒரு கல் பெயர்ந்து விழுந்தது. அது வாமனின் தலையில் விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டியது. “ஐயோ பாபா” என அலறியபடி சாய்ந்தார் வாமன். பலத்த காயம் என்பதால், வாமன் பிழைப்பாரா என்று அங்குள்ளவர்கள் பயந்தனர்.

தகவல் தெரிந்த பாபா, தன் சக்தியால் ஒரு களிம்பை வரவழைத்துக் கொடுத்து, வாமனின் தலையில் பூச உத்தரவிட்டார். களிம்பைப் பூசினர். வலி நீங்கி, இருந்த சுவடு தெரியாமல் காயம் உடனே ஆறியது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

நன்றி தெரிவிப்பதற்காக தன்னை தரிசிக்க வந்த வாமனை, பாபா அன்புடன் அணைத்துக்கொண்டார். வாமன் அறியாதபடி, அவருடைய தலையில் பிரம்ம மந்திரம் என்னும் ஏழாவது சக்கரத்தைத் திறந்துவிட்டார். இதன் மூலம் பிரபஞ்ச பிராண சக்தியுடன் வாமனை ஐக்கியப்படுத்தினார். பிறகு, “நீ உன்னத நிலை அடைவாய்” என்று ஆசிர்வதித்து மும்பை செல்ல வாமனுக்கு உத்தரவிட்டார்.

மும்பை திரும்பிய சிலநாட்களில் கலாவதி என்ற பெண்ணை வாமனுக்கு மணமுடித்தார் கௌரி. தனது தொழிலில் வாமன் கொடி கட்டிப் பறந்தார். ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். வாமன் அடிக்கடி ஷீரடி சென்று மகானை வணங்கி வர, அவர் மனம் ஆன்மீக வளர்ச்சியில் முழுமை பெற்றது. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த அபூர்வ தொழிலாளி அல்லவா அந்த பாபு.

செய்து வந்த தொழிலுக்குப் பிறகு, தர்க்க சாஸ்திரப் பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். வாமன் பிராண் கோவிந்த் படேல் என்ற முழுப் பெயர் கொண்ட “பாபாவின் பாபு” பேராசிரியராகவும் புகழ் பெற்று விளங்கினார். சுமார் 89 ஆண்டுகள் வாழ்ந்த அவர், இறைவனை அடைய துறவறமே சிறந்தது எனத் தீர்மானித்து, துறவியானார். அவரை பூஜ்யஸ்ரீ சுவாமி சரண் ஆனந்த் என மக்கள் போற்றிக் கொண்டாடினர். இதுவே வாமனின் ஆன்மீக விஸ்வரூப வளர்ச்சி.

மகான் ஷீரடி சாய் பாபா, மகான் ஸ்ரீ ஆதிசங்கரர், போன்றவர்களின் வரலாற்று நூல்களோடு, 14 ஆன்மீக நூல்களைப் படைத்த பூஜ்யஸ்ரீ சுவாமி சரண் ஆனந்த், அவருடைய தொண்டர்களின் மனத்தில் இன்றும் நிலைத்திருக்கிறார். மகான் ஒருவரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவரல்லவா அவர்!.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன