ஷீரடி பாபா – 16

பாபா காட்டிய அற்புதம்!

“ஷியாமா !. என்ன செய்தாய்? இங்கே வா!” என பாபா ஆக்ஞையிட, ஒரு சில வினாடிகளில் மசூதி சுவரில் சாய்ந்து தரையில் தனது கால்களை நீட்டியவாறு அமர்ந்திருந்த பாபாவிடம் அவர் வந்து சேர்ந்தார்.

“என்ன அப்பனே , கையில்?”

“பாபா , தங்கள் கால்களைக் கழுவி பிடித்து விடலாம் என்பதற்காக வெந்நீரை இந்த குவளையில் கொண்டுவந்துள்ளேன்” என ஷியாமா சொல்ல, “சும்மா தான் அழைத்தேன்“ என்றார் அவர்.

பிறகு ஷியாமா , பாபாவின் முழங்காலில் இருந்து பாதம் வரை இரண்டு மூன்று முறை வெந்நீரை விட்டு கழுவி, மெல்ல அவருடைய பாதங்களை பிடித்துவிட்டார். அப்போது ஒரு கணம் பாபாவின் பாதங்களையே உற்று பார்த்துவிட்டு, அந்த அத்தியந்த சீடர் “மகானே!, தங்கள் பாதங்கள் காண்பதற்கு தாமரை மலர் போல காட்சி தர, கைகளால் அவற்றைப் பிடித்து விடுகையில் , அந்த மலர் மாதிரியே மென்மையாகவும் இருக்கிறதே!” என ஆச்சரியத்துடன் சொன்னார். உடனே கடகடவென சிரித்த மகானைக் கண்டு திகைத்தவாறே ஷியாமா “ஐயனே! நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா?” என வினவ, அவர், “செல்வமே! இதில் தவறு ஏதுமில்லை. திடீரென்று எனக்கு அந்தக் கால சம்பவமொன்று நினைவுக்கு வந்தது. அதான்… ” என்று கூறிவிட்டு அதைச் சொல்லவும் ஆரம்பித்தார்.

” ஒரு சமயம் பகவான் கண்ணனையே தனது வழிகாட்டியாகவும், தோழனாகவும் பெற்ற பாக்கியசாலி அர்ஜுனனுக்கு , பகவான் அவன் மீது கொண்ட அளப்பரிய கருணை, வாத்சல்யத்தால் எவரும் காண்பதற்கு அரிய தனது விசுவரூப தரிசனத்தைக் காட்டினார். அதில் அண்ட சராசரமான உலகத்தையேக் கண்டு வாய் பிளந்து வியப்புற்ற அந்த அருமைத்தோழன் மெய்சிலிர்ப்புற்றான்.

அப்போது குறுக்கிட்ட ஷியாமா, வினயமுடன் “பகவானே! கண்ணன் திருமேனியில் எதனைக் கண்டு ஆச்சர்யப்பட்டான் அர்ஜுனன்?” என்று கேட்க, மகான் சுவாரசியமாக அந்த சம்பவத்தை தொடர்ந்து கூறலானார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ஷியாமா! கிருஷ்ணனின் அழகிய மேனிக்குள் அர்ஜுனன் , அத்தனை தேவர்கள், பல தெய்வ வடிவங்கள், பித்ருக்ள், மானிடர்கள், லட்சக் கணக்கான மிருக, தாவர இனங்கள் என பல உருக்களைக் கண்டான். இவை அர்ஜுனனை மயக்கமுறும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட ஷியாமா, சற்று ஐயத்துடன் “மகாகுருவே! உண்மையாகவா” என்று கேட்க, “ஆமாம்” என்று புன்சிரிப்போடு பாபா பதிலுரைத்தார்.

“சரி பாபா. என் மனதை நீண்ட நாளாக ஒரு விசயம் அரித்துக் கொண்டே யிருக்கிறது. அது என்னவென்றால் , பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்து வந்த துவாரகாபுரியில் ஒரு கோடி யாதவர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறதே… எப்படி?” என ஷியாமா கேட்டவுடன் , பாபா அன்போடு அவரின் தலையில் செல்லமாக தட்டி இவ்வாறு கூறினார்.

“அன்பானவனே! அவையெல்லாம் நிச்சயம் கட்டுக்கதைகள் அல்ல. அக்காலத்தில் அவதரித்த புண்ணிய புருஷர்களான தசரத ராமரும், கிருஷ்ணரும் அவரவர் காலத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தங்களுடைய உயர்ந்த நிலையில் இருந்து தாழ இறங்கிவந்து சாதாரண மனிதர்களோடு மனிதராக ஒன்றுபட்டு இருந்தது முக்காறும் உண்மைதான். சேதனம், அசேதனம் என்ற இரண்டில் முழுமையும் நமது எஜமானனான அந்த இறைவன் வசமே உள்ளன. புரிந்ததா? “என்றார்.

“என்ன, உன் கண்களைக் காண்கையில் அடுத்து ஏதோ கேட்க விழைவது போல் உள்ளனவே? தயங்காது கேள் ஷியாமா” என மகான் ஊக்குவித்தார்.

“என் அன்பான குருவே! வேறொன்றுமில்லை. ராம, ராவண யுத்தம் ஒரு காலத்தில் நடைபெற்றபோது ஒரு கோடிக்கும் மேல் வானரப் படை வீரர்கள் அதில் பங்கு கொண்டு உதவி புரிந்ததாக புராணங்களில் எழுதப்பட்டுள்ளனவே? அது குறித்து தான்.” என ஷியாமா தயஙுகியவாறே தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

“ஷியாமா! அறிவாகிய ஆலயத்தில் உட்புகுமுன்பாக கடந்து செல்ல வேண்டிய புறப்பகுதியே சந்தேகம் என்பது. அதனை தெளிவாக்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.”

“அப்பனே! நீ இங்கோ, வெளியிலோ தரையிலும் சுவரிலும் எண்ணிக்கையற்ற எறும்புக் கூட்டங்கள் சாரிசாரியாக அணிவகுத்து செல்வதை பல முறை கண்டிருப்பாய். ஆயிரக்கணக்கில் அந்த ஜந்துக்கள் உள்ளன என்று நம்புகிற உனக்கு, அக்காலத்தில் வானரக் கூட்டங்களின் எண்ணிக்கை கோடியளவில் இருந்ததாக கூறப்படுவதையும் நீ ஏற்றுதானே ஆகவேண்டும்” என பாபா கூறினார்.

அப்போது ஷியாமா “தாங்கள் இவைகளைக் கூறுகையில் , இதனை எவரால் மறுக்க முடியும்” என்று சொல்லிவிட்டு , “மகானே! தயவு செய்து கோபப்படாமல் கூறுங்கள்! கோடிக்கு மேல் வானரப் படைகள் இருந்தன என்பதை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் ஏதேனும்…” என பயந்தவாறே இழுத்தார்.

“ஓ! நீ அங்கு வருகிறாயா. உன் மீது எனக்கு கோபம் வருமா அன்பனே” என புன்முறுவலோடு பதில் கூறலானார்.

“தர்மத்தின் காவலன் ராமபிரானுக்கும் கொடிய அரக்கன் ராவணனுக்கும் நடைபெற்ற பெரும் போருக்குப் பின்பு நானும் நீயும் கணக்கற்ற ஜென்மங்கள் எடுத்துவிட்டோம். ராமாயண காலத்தில் நானும் ஒரு பிறப்பெடுத்து வாழ்ந்திருந்ததால் நான் எண்ணற்ற வானரப் படைகளை காணும் வாய்ப்பினைக் பெற்றேன். விளக்கம் போதுமா?” எனறார்.

பதற்றத்துடன் தன் தலையை ஆட்டிய ஷியாமா “இப்போது ரொம்ப தெளிவு பெற்றேன் பகவானே! இது சந்தேகமல்ல. வேறொன்று என சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஷீரடி நாதன் “நீ என்னிடம் கேட்க நினைத்ததை நானே கூறுகிறேன். எப்போதும் பேசப்படும் சிவலோகம், விஷ்ணுலோகம், பிரம்மலோகம் என்பவை இன்னும் உள்ளனவா என்பதுதானே?” என்று சொல்ல, வியப்பில் மூழ்கினார் ஷியாமா.

” வா! என் அருகில் “என ஷியாமாவை தன்னருகே அழைத்த மகான் ” அன்பா! உனது இரு கண்களையும் இப்போது மூடிக்கொள். நான் திற என்று சொன்ன பிறகே அவற்றை திறக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

கண்களை நன்கு மூடிக்கொண்ட ஷியாமாவுக்கு முதலில் காட்சியானது சிவலோகம்.

அங்கே தோற்றமான நிலவொளியில் , ஈசன், அன்னை உமா, அவர்களுடைய அன்பு புதல்வர்கள் இருவர் அனைவரையும் தரிசிக்க முடிந்தது அவரால்.

அந்தக் காட்சி சட்டென மறைய, அங்கே தோன்றியது விஷ்ணுலோகம்.
பேரொளி சூழ பரந்தாமன் தனது தேவியர் ஸ்ரீ தேவி , பூதேவியுடன் திவ்ய தரிசனமானார் அங்கே.

கண்கள் விரிய, கூப்பிய கரங்களோடு அந்தக் காட்சியை கண்ணுற்றதும் அக்காட்சி மறைந்து அங்கே தோன்றியது பிரம்மலோகம்.

அங்கே ஒளிமயமாக தென்பட்ட படைக்கும் கடவுள் பிரம்மன், வித்தைகளின் நாயகி சரஸவதியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தார்.

“அடடா! என்ன பாக்கியம் செய்துள்ளேன் நான்” என களிப்புடன் ஷியாமா நினைக்கையிலேயே, “ஷியாமா, பார்த்தது போதும். கண்களைத் திற” என பாபா கட்டளையிட்டார்.

அரைமனதுடன் தன் கண்களை திறந்த ஷியாமாவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“பகவானே! தாங்கள் என் மீது கருணை காட்டி, அனைத்து லோகங்களையும் காணச் செய்ததற்காக என் நன்றிகளை எப்படிக் காட்டுவேன்?” என பரவசத்துடன் கூறியபடியே பாபாவின் கால்களில் விழுந்து வணங்கினார் ஷியாமா என்ற அந்த பெரும் பாக்கியவான்.

” அன்பனே! நம் அனைவருக்கும் எஜமானனான அந்த இறைவனின் அன்புக்கு நீ உரியவனாக இருக்கவே , நான் அவரது ஒரு கருவியாகவே இருந்து தேவலோக காட்சிகளைக் காட்டினேன்.

“விண்டவர் கண்டதில்லை
கண்டவர் விண்டதில்லை”

எனவே நீ பார்த்த அனைத்தையும் உன் இதயச் சுரங்கத்தில் புதைத்துவிடு. என்றும் அது உன் மூலம் வெளிப்படக் கூடாது. இதுவே நீ எனக்கு செய்யக் கூடிய நன்றிக்கடன்” என்று பாபா உறுதியாக ஆக்ஞையிட , “அப்படியே பகவானே” என ஷியாமா கூறிவிட்டு, மறுபடியும் பாபாவின் பாதங்களை மென்மையாக பிடித்துவிடத் தொடங்கினார்.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன