மகா அவதார் பாபாஜி-2

சாதுக்கள்கூட்டத்துடன் இணைந்துகொண்டுஇலங்கைக்கு பயணமானான். அங்கு தங்கியிருந்தபொழுது, கதிர்காமம் திருத்தலத்தில் போகர் சித்தரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
போகரை கண்டதும், ‘இவரே நமது குரு’ என்கிற எண்ணம் அவன் மனதில் சட்டென ஒட்டிக்கொண்டது. நாகராஜின் வேண்டுகோளை ஏற்று, தனது சீடராக்கிக்கொண்டார் போகர்.
இடைவிடாத ஆறுமாத போதனையின்மூலம் கிரியா யோகத்தை நாகராஜுக்கு சொல்லிக்கொடுத்திருந்தார் போகர். கடுமையான பயிற்சியின் மூலம் யோகம் கைகூடியது. முதலில் சிலமணி நேரங்கள் தியானத்தில் அமர்ந்திருந்த நாகராஜ், ஒரு கட்டத்தில் 48 நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் ஈடுபட்டார். (ஞானியாக மாறிவிட்ட ஒருவரை மரியாதையாக அழைப்பதே முறை. அதேசமயம் நாகராஜை, பாபாஜி என்றே இனி அழைப்போம். வடஇந்தியாவில் மகான்களை குறிக்கும் சொல்லே பாபா)
“சுவாமி…கிரியா யோகத்தை முழுமையாக கற்றுக்கொடுத்ததற்கு நன்றி…” போகரிடம் தலைவணங்கி நின்றார் பாபாஜி.
“நீ சொல்வது தவறு… கிரியா யோகம் முற்றுப்பெறவில்லை. இதற்கான கடைசி தீட்சையை உனக்கு மற்றொருவர் கற்றுத்தருவார்…”
பாபாஜி ஆச்சர்யப்பட்டார்.
“அப்படியா…! யார் அவர்..?”
“சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தரும், எனது குருவுமாகிய அகத்தியர்தான் அவர். புண்ணிய பூமியாகிய தமிழகம் சென்று பொதிகை மலையில் அவரது தரிசனம் பெறு. அவர் உன்னை வழிநடத்துவார்.”
போகரின் ஆசிகளோடு பொதிகை மலைவந்தடைந்தார் பாபாஜி. அகத்தியரை பல இடங்களில் தேடியவர், இறுதியில் தவத்தில் அமர்ந்தார்.
கடுமையான தவத்தின்பலனாகபாபாஜி முன் தோன்றினார் அகத்தியர். அவரது தவத்தை பாராட்டி, கிரியா யோகத்தின் கடைசி நிலையையும் கற்றுக்கொடுத்தார். பத்ரிநாத் சென்று தவத்தில் ஈடுபடுமாறும் வழிகாட்டினார்.
பாபாஜிஇப்பொழுது முழு சித்தராக மாறி இருந்தார்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அகத்தியரிடமிருந்துவிடைபெற்றுஇமயமலை புறப்பட்டார்.
இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படும் இமயமலை அவரை வரவேற்றது.
பத்ரிநாத்திற்கு அருகிலுள்ள தோணகிரி மலையில் தன் தவத்தை தொடங்கினார். பதினெட்டு மாதங்கள் அவரது தீவிர தவம் தொடர்ந்தது. அதன் விளைவு பாபாஜி சொரூப சமாதி என்கிற நிலையை அடைந்தார். அதாவது இறைவனுக்கு சமமான நிலைக்கு சென்றார். மேலும் அட்டமா சித்திகள் உட்பட அனைத்து சக்திகளும் கைவரப்பெற்றார். பாபாஜியின் உடல் பொன்னிறத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது.
சொரூப சமாதியில் இருந்த பாபாஜி, கிரியா யோகத்தை மக்கள் அனைவரிடமும் கொண்டுசேர்க்க விரும்பினார். இதன்மூலம் அனைவரும் பலனடைவார்கள் என்கிற என்கிற எண்ணம் அவரது திருவுள்ளத்தில் உதித்தது. இதற்காக தன் சீடர்களை பயன்படுத்தி பல அற்புதங்களை நிகழ்த்தினார். தற்போதுகூடதன்னை முழுமையாக நம்பியவர்களுக்கு நேரில் தோன்றி அருள் வழங்கிக்கொண்டிருக்கிறார் பாபாஜி.
—————————————————————————————————————————————–
பாக்ஸ் நியூஸ் :
கிரியா யோகத்தில் ஐந்து கிளைகள் உள்ளன. கிரியா ஹத யோகம், கிரியா குண்டலினி பிரணாயாமம், கிரியாதியான யோகம், கிரியா மந்திர யோகம், கிரியா பக்தி யோகம். இவற்றுள்பதினெட்டு முக்கிய ஆசனங்கள் அடங்கியுள்ளன. சக்தி வாய்ந்த சுவாசப்பயிற்சியும், தியானப்பயிற்சி பற்றியும் இதில் விளக்கப்பட்டுள்ளது. கடவுள் வழிபாடும், பீஜ மந்திரங்களை உச்சரிப்பது பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளன. தகுந்த குருவின் மூலமாகவே இவற்றை பயிற்சி செய்யவேண்டும்.
—————————————————————————————————————————————–
“கங்காதர்…” குரல் கேட்டு திரும்பினார் லாஹிரி மகாசாயர்.
தூரத்தில் அந்த இளைஞர் நின்றுகொண்டு அழைப்பது தெரிந்தது. வேறு யாரையோ அழைக்கிறார் என்று நினைத்து நகர்ந்தார் மகாசாயர். மீண்டும் அதே குரல் நகர விடாமல் தடுத்து நிறுத்தியது.தனக்கு பின்னால் யாரேனும் வருகிறார்களோ? திரும்பிப் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஆள் நடமாட்டமே தென்படவில்லை.
“உன்னைத்தான் அழைக்கிறேன் கங்காதர். இங்கே வா…” தன்னைநோக்கி விரல் சுட்டப்படுவதை உணர்ந்த மகாசாயர்,மந்திரத்திற்கு கட்டுப்பட்டவராய் இளைஞரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இந்திய ராணுவத்தின் பொறியியல்துறையில் பொறுப்பான பதவியில் இருந்தார் லாஹிரிமகாசாயர். பீகார் மாநிலத்தின் தனப்பூரில் பணிபுரிந்து வந்தவருக்கு,பத்ரிநாத் அருகிலுள்ள ராணிகேத்துக்கு திடீரென இடமாற்றம் கிடைத்தது.அங்குமலைப்பகுதியில் உலாவிக்கொண்டிருந்த ஒரு வேளையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தற்போது அந்த இளைஞரை மிக அருகில் காணமுடிந்தது. இருபத்தைந்து வயது இருக்கலாம். ஒளி பொருந்திய முகம். இடை வரை தொங்கும் நீண்ட கூந்தல். அழகான உடற்கட்டு. இடுப்பில் ஒற்றை ஆடை.
“வந்துவிட்டாயா கங்காதர்…” சொல்லும் பொழுதே அந்த இளைஞரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
“நீங்கள் தவறாக என்னை அடையாளம் கண்டுகொண்டுள்ளீர்கள். என் பெயர் லாஹிரி மகாசாயர்.”
“நீ சொல்வதும் உண்மை. நான் சொல்வதும் உண்மை. முற்பிறவியில் கங்காதராகநீஇருந்திருக்கிறாய்.”
இளைஞரை குழப்பமாய் பார்த்தார் மகாசாயர்.
குகையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர், அவரின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே சில கம்பளிப் போர்வைகளும் கமண்டலமும் இருந்தது.
“இதை பார்த்துவிட்டுமுற்பிறவி ஞாபகம் வருகிறதா என்று சொல்.” மகாசாயரை புன்னகையுடன் நோக்கினார் இளைஞர்.
‘யார் இவர்? முற்பிறவி… இப்பிறவி என்று ஏதேதோ பிதற்றுகிறாரே… இங்கிருந்து எப்படி வெளியேறுவது?’ அவர் மனதுக்குள் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின.
“மன்னிக்கவும். எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. நான் புறப்படுகிறேன்.” வெளியேற முயற்சித்தார் லாஹிரி மகாசாயர்.
“நில் கங்காதர்… உன்னை பணி இடமாற்றம் செய்ததே நான்தான்.இந்த நேரத்தில் இங்கே வரவேண்டும் என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டது. இப்பொழுது உனது பழைய ஞாபகங்கள்திரும்பும் பார்…” என்றவாறே மகாசாயரின் புருவ மத்தியில் ஒற்றை விரலால் லேசாக தட்டினார்.
அவரது நினைவுகளில் சடாரெனமின்னல் ஒன்று வெட்டியது. மனதிற்குள்காட்சிகள் மாறின.
முப்பது வருடங்களுக்கு முன்னால் இருந்த பூர்வ ஜென்ம ஞாபகங்கள் திரைப்படம் போல் கண்களுக்குள் ஓடின.
‘கங்காதரர் என்கிற பெயரில் நான் வசித்துவந்த குகைஇது.இங்கே இருந்தவையெல்லாம் முன்பு பயன்படுத்திய பொருட்கள். அப்புறம்… யாரிடமோ ஆசி பெறுகிறேனே… அவர்… அவர்… ஆம் அவரே தான்… என் குருநாதர் பாபாஜி.’
தன்னிலைக்கு வந்த மகாசாயர் கண்களில் நீர் பெருக்கெடுக்க எதிரே நின்றிருந்த பாபாஜியின் கால்களில் விழுந்தார்.
“குருவே… அனைத்தும் என் நினைவுகளில் மீண்டும் குடியேறிவிட்டன. உங்களை மறந்துபோன மகாபாவி ஆகிவிட்டேனே…” கதறினார்.
பாபாஜி அவரை எழுப்பி, எண்ணை நிரம்பிய கிண்ணம் ஒன்றை கொடுத்தார்.
“இதை குடி. மீண்டும் உன்னை ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்கிறேன்.”
குடித்து முடித்தார் மகாசாயர்.
“அருகிலுள்ள நதிக்கு சென்று குளித்துவிட்டு படுத்துக்கொள்.” கட்டளையிட்டார் பாபாஜி.
உடலின் ஒவ்வொரு செல்களையும்குளிர்காற்று குண்டூசி வைத்து குத்திக்கொண்டிருந்த அகாலவேளை அது. அந்நேரத்தில் உடலின் உதறலை பொருட்படுத்தாமல் நதியில் விழுந்து எழுந்தார் மகாசாயர். அருகிலிருந்த பாறையின்மேல் படுத்துக்கொண்டார்.
நேரம் நகர்ந்துபோனது. சில மணித்துளிகள் கழித்து பாபாஜியின் சீடர் ஒருவர் அவரை எழுப்பினார்.
“என் பின்னே நடந்து வா…”
எங்கோ தூரத்தில் தெரிந்த பிரகாசமான ஒளியை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர். அருகில் நெருங்க நெருங்க கண்களை கூச வைக்கும்அளவிற்கு வெளிச்சம் கூடிக்கொண்டே போனது.

தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன