மகா அவதார் பாபாஜி-1

கி.பி.208 ம்வருடத்தில்ஒருநாள்…

“அம்மா நான் போய்ட்டுவர்றேன்…” தன் பிஞ்சுக்குரலில் சொல்லிய ஐந்து வயது நாகராஜை வாரிஅணைத்தாள் ஞானம்மாள். அம்மாவின் கன்னத்தில் பட்டு இதழ்களால் ‘இச்’ ஒன்றை பதித்தான் பாலகன்.
“பத்திரமா போயிட்டுவாய்யா…” என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் வெளிவந்தன.
“கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குது. கூட்டம்வேற அதிகமாக இருக்கும். அங்கே இங்கே வேடிக்கை பார்க்காமல், நடராஜர் தரிசனம் முடிஞ்ச உடனே கிளம்பிடணும்…” அப்பா வேதாரண்யரின் அறிவுரைக்கு தலையாட்டினான்.
இருவரையும் வணங்கிவிட்டு சிதம்பரம் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தான் நாகராஜ்.
வாசலுக்கு வந்த பெற்றோர்கள், பிள்ளையின் ஆன்மீக நாட்டத்தை எண்ணி பூரிப்படைந்து அவன் செல்லும் அழகை ரசித்தபடி நின்றனர். அவர்களுக்கு தெரியாது – அதுதான் அவனை காணும் கடைசி தருணம் என்பது.
************************
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட நம்பூதிரி இனத்தில் பிறந்தவர் வேதாரண்யர். அவரது முன்னோர்கள் வெகு காலத்திற்கு முன்பே பரங்கிப்பேட்டையில் குடியேறினர். அவர்களது வழியிலேயே தானும் அர்ச்சகராக உள்ளூர் கோயிலில் பணியாற்றிவந்தார் அவர்.
கடவுள் பக்தி நிரம்பிய, அந்த குடும்பத்திற்கேற்ற குழந்தையாகவே நாகராஜும் இருந்தான். சிறுவயதிலேயே அபார ஆன்மிக நாட்டம் அவனிடம் தென்பட்டது.
அருகிலிருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றுவரும் வழக்கத்தை வைத்திருந்தார் வேதாரண்யர். அடிக்கடி நடராஜர் தரிசனம் கிடைத்ததால், சிறுவன் நாகராஜுக்குக் கடவுள் பக்தி அதிகமானது. இதன் காரணமாக அவனே தனியாகவும் செல்ல ஆரம்பித்தான்.
ஆரம்பகட்டத்தில்நாகராஜை தனியே அனுப்ப பெற்றோர் பயந்தனர்.அவன் பத்திரமாக வீடு திரும்பிய காரணத்தால், அடுத்தடுத்து அனுமதித்தனர். இன்றைக்கும் அப்படித்தான் கிளம்பியிருந்தான்.

வேதாரண்யர் சொல்லியது போலவே கோயிலில் கூட்டம் அதிகமிருந்தது. நடராஜரை மனம் குளிர தரிசித்துவிட்டு வெளியே வந்தான் நாகராஜ். திருவிழாவிற்காக குடும்பத்தோடு வந்திருந்த மக்கள்,பிரகாரம்முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள்.
அவர்களிடமிருந்து விலகி தனியே வந்தமர்ந்தான்.
‘அம்மாவும், அப்பாவும் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’- மனதிற்குள் எண்ணம் ஒன்று ஓடியது.
கண்களைமூடி அமர்ந்தான். இதயத்தில் இறைவனை நிறுத்தி தியானத்தில் மூழ்கினான். நேரம் தொலைந்துகொண்டிருந்த வேளையில், அவன் வாய் பொத்தப்பட்டது. நாகராஜ் திமிறினான். வலுவான கரத்தை மீறி குரல் வெளிவரமுடியாமல் தவித்தது. கை கால்களை உதறினான். கண்களில் கண்ணீர் பொங்கியது. மனம் தவித்து, நடராஜரை தேடி ஓடியது.
அவனது முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
நாகராஜை லாவகமாகக் கையாண்டு, யாருக்கும் தெரியாதவண்ணம் கடத்திக்கொண்டு கிளம்பினான் ஒரு திருடன்.
குழந்தைகளை கடத்துவதில் பலே கில்லாடி என்பதை அவன் நடந்துகொண்ட விதமே உணர்த்தியது.
அழுது போராடி இறுதியில் சோர்வுற்று மயங்கிப்போனான் நாகராஜ்.
தண்ணீர் துளிகள் முகத்தில் தெரித்து விழுந்தன. மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்தான், கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி ஒன்று அடைக்கப்பட்டிருந்தது.
‘எங்கே இருக்கிறோம் ?’
அவன் படுத்திருந்த நிலையில், எதிரே கருமை பரவியமேகங்கள் தெரிந்தன. அவற்றில் வைரக்கற்களாய் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. கடல் ஆர்பரிக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்பொழுது தண்ணீரை அவன்மேல் வாரி இறைத்து விளையாடியது அலை.
தலையை திருப்பிப் பார்த்தான்.
படகில் பயணம் செய்துகொண்டிருப்பது புரிந்தது. படகை செலுத்திக்கொண்டிருப்பவனே, தன்னை கடத்தியவனாக இருக்கவேண்டும் என்பதையும் யூகிக்க முடிந்தது.
எப்படி இங்கிருந்து தப்பிப்பது?
மனம் யோசித்து … வாய்ப்பே இல்லை என துவண்டுபோனது.
‘இந்நேரம் என்னைக் காணாமல் அம்மா அழுது புலம்புவாள். அப்பா அழுகையை அடக்கிக்கொண்டு தேட ஆரம்பித்திருப்பார்.’
நாகராஜுக்கு அழுகை பொங்கியது. வீட்டிற்கு சென்று அம்மாவையும் அப்பாவையும் கட்டிப்பிடித்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அது முடியாத காரியம் என்பது புரிந்ததும் கண்கள் ஓரம் கண்ணீர் வழிந்தோடியது.
அழுது ஓய்ந்துபோய் மீண்டும் மயக்கமானான் நாகராஜ்.
இரண்டு நாட்கள் சென்றநிலையில் படகு கல்கத்தாவை அடைந்தது.
நாகராஜின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக்கினான் கடத்திவந்தவன்.
“அழுது அடம்பிடிக்காமல் என்கூட வரணும்…” மிரட்டும் தோரணையில் சொன்னவன், நாகராஜின் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
நாகராஜின் மனம் ஓரளவு சமன்பட்டிருந்தது. நடப்பதெல்லாம் கடவுள் செயல் என்பதை அவன் ஆன்மீக அறிவு உணர்த்தியிருந்தது.
இதுநாள்வரையிலும் பெரிய நகரத்தை பார்த்திராததால் கல்கத்தாவை வியப்பாய் பார்த்தான்.
சிறிய பெரிய வீடுகளைக் கடந்து, அந்த பிரமாண்ட மாளிகைக்குள் இருவரும் நுழைந்தனர்.
ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்த பெரியவரிடம் நாகராஜை ஒப்படைத்துவிட்டு கை நிறைய காசுகளுடன் புறப்பட்டான் திருடன்.
பெரியவருக்கு குழந்தை இல்லை என்பதால் நாகராஜை அன்பாக நடத்தினார். விதம் விதமான ஆடைகள், உயர்தர உணவுகள் கொடுத்து பாசமாகப் பார்த்துக்கொண்டார். தங்குவதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டது. எந்த விதத்திலும் அவனைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டிருந்தார்.
நாகராஜிக்கு அந்த ஊர் பழகிப்போனது. பாஷையும் புரிய ஆரம்பித்திருந்தது. மெல்ல மெல்ல தன் பெற்றோர்களை மறக்க ஆரம்பித்திருந்தான். அவ்வப்பொழுது அவர்கள் நினைவு வரும் வேளையில்,‘எல்லாம் கடவுள் சித்தம்’ என இருந்துவிடுவான்.
பெரியவர் பாசமுடன் இருந்தாலும், அவரிடமும் அவ்வளவு ஒட்டுதல் இல்லாமலிருந்தான் நாகராஜ். அவனது சிந்தனை முழுவதும் கடவுளிடம் மட்டுமே இருந்தது. அவன் வளர்ந்த அதே நேரத்தில், ஆன்மீக சிந்தனைகளும் அவன் மனத்தில் வளர்ந்துகொண்டே இருந்தன.
தினமும் தவறாது கோயிலுக்கு சென்றுவிடுவான். அப்படி சென்று வருகையில் பல சாதுக்களின் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது. அவர்கள் வேதங்களை கற்றறிந்த பண்டிதர்களாக இருந்தார்கள். அவர்களிடமிருந்த அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டான் நாகராஜ்.
தற்போது நாகராஜ்,பதினோரு வயதில் இருந்தான்.
அன்றைய தினம் பெரியவரின் முன்னால் தயங்கியபடி வந்துநின்றான். அவர் நிமிர்ந்து ‘என்ன’ என்பதுபோல் தலையசைத்தார்.
“உங்க கிட்டே இருந்து ஒரு அனுமதியை எதிர்பார்க்கிறேன்…”
“அனுமதியா… எதுக்கு?”
“நான் இந்த வீட்டைவிட்டு கிளம்பணும்…”
பெரியவர் திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தார். அவர் முகத்தில் அதிர்ச்சி பரவியிருந்தது.
“நான் உனக்கு எந்த குறையும் வைக்கலையே. உன் விருப்பப்படிதானே விட்டிருந்தேன்” அவர் குரல் தழுதழுத்தது.
“மன்னிக்கணும்… உங்க சொந்த பிள்ளை மாதிரித்தான் கவனிச்சுக்கிட்டீங்க. ஆனால் எனக்குள்ளே இருக்கும் ஆன்மீக நாட்டம் என்னை துரத்துது. எனக்குஎல்லாம் சொல்லிக்கொடுத்த சாதுக்கள் கூட்டத்தோடு சேர்ந்து இலங்கை போகலாம்னு இருக்கேன். இதுக்கு உங்க அனுமதி வேணும்.”
“முடிவே பண்ணிட்டியா…”
“இதுவே சரியான பாதைன்னு என் மனசு சொல்லுது…”
பெரியவர் கண்களை மூடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு நாகராஜை அருகில் அழைத்து உச்சி முகர்ந்தார். அவரதுகண்கள் கலங்கின.
“எங்கே இருந்தாலும் நல்லாயிரு…”
நாகராஜ், பெரியவரின் பாதங்களில் விழுந்து வணங்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன