முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / பாம்பன் சுவாமிகள் / பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 2

பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 2

பாம்பன் சுவாமிகள் - 2

“ஆன்ம லாபம் கருதியே பொய் உரைத்தேன்” என்றார். “உனக்கு எப்பொழுது ஆன்ம லாபம் தருவது என்பது எனக்குத் தெரியும். இனிநான் அழைக்கும்வரை பழனிமலை வாசலை நீ மிதிக்கக் கூடாது. இது என் கட்டளை” என தனது சுட்டுவிரலை உயர்த்தி பற்களை நறநறவென கடித்தபடி மறைந்து போனார்.
அப்பொழுது பாம்பன் சுவாமிகளுக்கு தெரியாது, இறுதிவரை பாலகுமாரன் தன்னை பழனிமலைக்கு அழைக்கவே போவதில்லை என்பது.
அவரிடம் கடுமை காட்டிய கந்தன், அவரை ஒருமுறை அடிக்கவும் செய்தார். அது அன்பான அடி.

‘கோத்தயிர்வெண்ணெய்த் திருடன் கோலமருகா, நறிய பூத்திருடன்தன்மதலாய், பொங்குகுறக் – கோத்திரத்து, ஓர் பெண்திருடிச் சென்ற பெருந்திருடா என்போதம்
உண்டு திருடத் தெரியாயோ’

‘தாய்மாமன் திருமால் ஒரு வெண்ணெய் திருடன், தந்தை சிவபெருமானோ ஒரு பூத்திருடன். இப்படி, தாய் தந்தை மரபில் வந்த முருகனும் சாதாரண திருடன் அல்ல. பெரும் திருடன்’ என பொருள்படும் இப்பாடலை எழுதி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு ஒருக்களித்தபடி படுத்திருந்த அவரதுமுதுகில் மெத்தென ஒரு அடி விழுந்தது. திரும்பிப்பார்த்தார். யாருமில்லை.பதறிப்போனவர், ‘முருகா நான் ஒரு நயத்துக்காகவே இவ்வாறு பாடினேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்’ என்று வேண்டிக்கொண்டார்.
இப்படி பலமுறை அவரின் கனவில் வந்தும், காட்சி கொடுத்தும், அருகிலிருந்தும் கவனித்து வந்தான் கந்தன்.

பாம்பன் சுவாமிகளுக்கு முருகனிடம் உபதேசம் பெறவேண்டும் என்கிற அருள்தாகம் நிறைவே இருந்துவந்தது. இதற்காக பிரப்பன்வலசை என்கிற ஊரை அடைந்தார். அங்குள்ள மயானத்தில், ஒரு ஆள் அமரும் அளவிற்கு சதுர குழி வெட்டச்செய்து சுற்றிலும் முள்வேலி அமைத்தார். அதன் மேலே கூரை எழுப்பினார். அங்கேயே கடும் தியானத்தில் அமர்ந்தார். 35 நாட்கள் நீடித்தது தியானம். இந்நாட்களில் மெய்சிலிர்க்கும் ஆன்மீக அனுபவங்கள் பல அவருக்கு கிடைத்தன. இறுதியாக, ‘போதும் உன் தவத்தை முடித்துக்கொள்’ என்கிறகுரல் அவர் மனத்தில் ஒலிக்க, தன் தியானத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். முருகன் அவருக்கு அரூபமாக காட்சி தந்தார்.

இதையடுத்து, பல்வேறு திருத்தலங்களை தரிசித்தபடியே காசி சென்றடைந்தார். அங்கு குமரகுருபர ஸ்வாமிகள் மடத்தில் தங்கி அவரை வணங்கிவந்தார். அப்பொழுது அவர் வைத்திருந்த ஒரு வேட்டியும் காணாமல் போக, உடுத்த ஆடையில்லாமல் தவித்துப்போனார். உடன் ஒரு பெரியவர் சுவாமிகளிடம் வந்து, இரு காவி வேட்டிகளைதந்து “இது கந்தன் கட்டளை” என்றார். அதுவரை வெள்ளை வேட்டி உடுத்திவந்த சுவாமிகள் அன்றுமுதல் காவிக்கு மாறி முழு துறவியானார்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பல ஊர்கள் பயணப்பட்டவருக்கு, சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பின்னத்தூர் செல்லுமாறு முருகனிடமிருந்து கட்டளை வந்தது. அங்கே சென்று சில காலம் தங்கியிருந்த சுவாமிகளை காண பெரும் மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அனைவருக்கும் அருளாசி வழங்கி அற்புதங்கள் நிகழ்த்தினார். அவ்வூரில் தனக்கு தொல்லை கொடுத்த பல தீயவர்களையும் முருகனின் அருளால் அடக்கி ஒடுக்கினார்.
தன்னுடைய இறுதிக்காலம் சென்னையில் தான் என்பதை உணர்ந்தவர்,அங்கு கிளம்பினார். தனது அன்பரின் வேண்டுகோளின்படி தற்போதைய பாரிஸ் கார்னரில் உள்ள வைத்தியநாத முதலி தெருவில் தங்கினார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஒருமுறை தன் இல்லத்திலிருந்து தம்புச்செட்டித் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார் சுவாமிகள். அப்பொழுது குதிரை வண்டி ஒன்று அவரின் இடது காலில் ஏறி இறங்கியது. இதில், அவரின் கணுக்கால் முறிந்து ரத்தம் கொட்டியது. அருகிலிருந்தோர் அவரை பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயதை கருத்தில் கொண்டும், அவர் உணவில் உப்பு, புளி, காரம் சேர்ப்பதை விட்டுவிட்டதாலும் இனி கால் எலும்புகள் ஒன்று சேராது என உறுதிபடக் கூறினார்.

பாம்பன் சுவாமிகளின் முதன்மை சீடரான ஜோதிடர் சின்னசாமிப்பிள்ளை அவரின் அருகிலேயே அமர்ந்து, சுவாமிகள் இயற்றிய ‘சண்முக கவச’த்தை தொடர்ந்து பாராயணம் செய்தபடியே இருந்தார். சரியாக 11ம் நாள் நள்ளிரவு, முறிந்த கால் எலும்புகளை இரண்டு வேல்முனைகள் இணைத்து, அடியில் ஒரு வேல் தாங்கி நிற்பதும், எதிரே இருமயில்கள் தோகை விரித்தாடுவதும் சுவாமிகளுக்கு தெரிந்தது. மேலும் அவரருகில் ஒரு செந்நிறக் குழந்தை படுத்திருப்பதும் தெரிந்தது.

அடுத்தநாள் இச்செய்தியை மருத்துவர்களிடம் அவர் தெரிவிக்க,அவரின் கால் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. முறிந்த எலும்புகள் முருகன் அருளால் ஒன்றுகூடி இருந்தன. மருத்துவர்கள் இந்த அதிசயத்தை நம்ப முடியாமல் மிரண்டு போனார்கள்.
தனக்கு முருகன் காட்சி கொடுத்ததை ‘அசோகா சாலவாசம்’ எனும் நூலில் சொல்லியிருக்கிறார் பாம்பன் சுவாமிகள். மயில் தரிசனம் தந்த நாள் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை திதி. இந்நாள் ‘மயூர வாகன சேவை’ என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சுவாமிகள் இதை துவக்கி வைக்க, இன்றும் இவ்விழா சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பாம்பன் சுவாமிகளுக்கு, தான் இறையுடன் ஒன்று கலக்கும் நாள் தெரிந்தது. தன் சீடர்களை அழைத்தார். திருவான்மியூரில் ஒரு இடம் வாங்குமாறு சொல்லி தன் சுயசம்பாத்திய பணத்தை கொடுத்தார். உடனே இடம் வாங்கப்பட்டது.
1850 முதல்79ஆண்டுகள்உயிர் வாழ்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி மக்களின் துயரங்களை நீக்கிய பாம்பன் சுவாமிகள், 1929 மே மாதம் 30ம் நாள் காலை முருகனின் பாதகமலங்களை அடைந்தார். அவரது விருப்பப்படி திருவான்மியூரில் உடல் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.

இன்றைக்கும் சுவாமிகள், தங்களை கஷ்டங்களிலிருந்து காப்பதாக அவரது பக்தர்கள் தீவிரமாக நம்புகின்றனர். முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த நோயாளிகள்கூட,அவரை வணங்கி வந்தால் அந்நோய் நீங்கி பரிபூரண குணமடைவதாகச் சொல்கின்றனர். தன் பக்தர்கள் பலரின் கனவுகளில் தோன்றி அவகளது துயர் துடைக்கிறார் சுவாமிகள் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

ஒவ்வொரு பவுர்ணமியிலும் சுவாமிகளின் சமாதியில் விசேஷ பூஜைகள் நள்ளிரவு வரை நடைபெறுகிறது. அன்று வரும் பக்தர்களின் கூட்டம் எண்ணிலடங்காதது.
கந்தப்பெருமானை நேரில் காணும் பாக்கியம் பெற்ற பாம்பன் சுவாமிகளை நாமும் வணங்குவோம். அவரருள் பெறுவோம்.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …