முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / பாம்பன் சுவாமிகள் / பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 1

பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 1

பாம்பன் சுவாமிகள்

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்களின் இஷ்ட தெய்வமாகிய திருமாலையும், சிவனையும் போற்றிப் புகழ்ந்து பல பதிகங்களை பாடியுள்ளனர். ஆலயத்தின் கருவறை வரை சென்று அக்கடவுள்களை வணங்கியும் வந்தனர். ஹரியும், ஹரனும் தன்னை காணவந்த அவர்களுக்கு அருள் வழங்கி அகம் மகிழவும் செய்தார்கள். ஆனால் பழநிப்பதிவாழ் பாலகுமாரனோ, தன்மேல் தீராத காதல் கொண்ட, தன்னைக் குறித்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் இயற்றிய பக்தர் ஒருவரிடம் கடும் சினம் கொண்டார். தன் கோயிலுக்குள் நுழையாதே என்று கட்டளையும் போட்டார். கந்தனின் கடுமையான கோபத்திற்கு காரணம் என்ன? அந்த பக்தர் யார்?

நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார் அப்பாவு. அவரைக் கடந்து சென்ற அந்த கைரேகை நிபுணர், அப்படியே ஸ்தம்பித்து நின்றார். அப்பாவு முகத்தில் தெரிந்த தேஜஸ்,அந்நிபுணரை நிற்கவைத்திருந்தது.
அப்பாவுவை அருகில் அழைத்து அவரைப்பற்றி விசாரித்தார்.அச்சிறுவனும், தனது பெயரையும், தனது பெற்றோர் சாத்தப்ப பிள்ளை – செங்கமல அம்மையார் என்பதையும், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் தனது சொந்த ஊர் என்றும் தெரிவித்தார். உடன் அந்த நிபுணர், அப்பாவுவின் கையைப் பற்றி அவரது ரேகைகளை ஆராய்ந்தார். நிபுணர் முகத்தில் ஆச்சர்யம் மேலிட்டது.

“அப்பாவு… நீ எதிர்காலத்தில் இறையருள் பெற்ற பெரிய ஞானியாக வருவாய்…” வாழ்த்திவிட்டு அவ்விடம்விட்டு அகன்றார்.

பின்னாட்களில் அக்கைரேகை நிபுணர் வாக்கு அப்படியே பலித்தது. ஆம்… அப்பாவு என்கிற அச்சிறுவனே எதிர்காலத்தில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.

சிறுவயது முதலே சுவாமிகள் இறை பக்தியில் அதிக நாட்டமுடன் இருந்தார். ஆரம்பத்தில் சிவ நாமத்தை உச்சரித்துவந்தவர், கந்தனுடைய பெருமைகள் கேட்டு கந்தர் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். தெய்வீக உணர்வு அவரது உள்ளத்தில் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.

தினமும் 36 முறை கவசத்தை பாராயணம் செய்வார். இது கந்தனின் மேலிருந்த காதலை அதிகப்படுத்தியது. அத்துடன் அவன் குறித்து பாடல்கள் புனையும் ஆர்வமும் வளர்ந்து வந்தது. அருணகிரிநாதரை தன் மானசீக குருவாகக் கொண்டு, தினமும் உணவு உண்ணும் முன்பாக ஒரு பாடல் இயற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டார் சுவாமிகள்.
ஒருநாள் அவருக்கு அற்புதமான கனவு ஒன்று வந்தது.அதில் சைவப்பெரியவர் ஒருவர் அவரின் கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார். ஓரிடத்தில் அவரை அமரச்செய்து வாழை இலை விரித்து பால்பாயசம் வைத்து சாப்பிடச் சொல்கிறார். அவருக்கு எதிரில் அமர்ந்து தானும் அதை உண்கிறார். சாப்பிட்டுமுடித்து சுவாமிகள் நிமிர்ந்து பார்த்தபொழுது, அப்பெரியவர் மாயமாய் மறைந்திருந்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இக்கனவு வந்த நாளிலிருந்து அவரது பாடல் புனையும் திறன் அதிகரித்தது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த பண்டிதர் சேதுமாதவ அய்யரிடம் சடாட்சர மந்திர உபதேசம் பெற்றுக்கொண்டார் பாம்பன் சுவாமிகள். அய்யரின் அறிவுரைப்படி வேதம், ஆகமம், நிகண்டு, உபநிஷதம், இதிகாசம், புராணம் முதலியவைகளை பயின்று, அதில் புலமையும் பெற்றார்.
நாட்கள் நகர்ந்தன. சுவாமிகள் திருமணப்பருவத்தை அடைந்திருந்தார். ஆனால் இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாததைக் கண்ட அவரது பெற்றோர் கவலையுற்றனர். இதுகுறித்து சேதுமாதவ அய்யரிடம் முறையிட்டனர். அவரின் வற்புறுத்தலின் பேரில் காளிமுத்தம்மாளை மணந்தார் சுவாமிகள். சிலவருட இடைவெளியில் மூன்று குழந்தைகள் பிறந்தன. முருகையன், சிவஞானாம்பாள், குமரகுருதாசர் என அக்குழந்தைகளுக்கு பெயரிட்டார்.

ஒருசமயம் குழந்தை சிவஞானாம்பாள் விடாமல் அழுதது. பால் குடிக்க மறுத்தது. காளிமுத்தம்மாளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பெற்ற பிள்ளை அழுதால் எந்த தாய்தான் பொறுப்பாள்.தியானத்தில் இருந்த சுவாமிகளிடம் சென்று விஷயத்தைக்கூறி விபூதி கேட்டார். அதற்கு அவரோ, “இப்பொழுது யாருக்கும் நான் திருநீறு தருவதில்லை. இறைவனிடம் கேட்டு வாங்கிக்கொள்” என்று சொல்லிவிட்டு தனது தியானத்தை தொடர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து, வீட்டினுள் நுழைந்த ஒரு பெரியவர் அக்குழந்தையை எடுத்து விபூதி பூசிவிட்டு வெளியே சென்று மறைந்தார். குழந்தையும் உடன் அழுகையை நிறுத்தியது. தியானம் முடித்துவந்த சுவாமிகள் இதைக்கேள்வியுற்றார். வந்தது யாரென அவருக்கு புரிந்துபோனது. எதிரே இருந்த முருகனின் படத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்.

வெகுநாட்களாகவே பாம்பன் சுவாமிகளுக்கு பழநி முருகனை தரிசிக்கும் ஆவல் இருந்துவந்தது. தன் நண்பர் அங்கமுத்துப்பிள்ளையிடம் தான் நாளை பழனிமலை செல்வதாக தெரிவித்தார். அதற்கு அவரோ, “இது குமரனின் கட்டளையா?” எனக்கேட்டார். சுவாமிகளும்“ஆம்” என்று பதில் கூறினார்.

அடுத்த நாள் சுவாமிகளின் கண்களுக்கு மட்டும் புலப்படுமாறு முருகப்பெருமான் தோன்றினார். முகத்தில் கடுமை தெரிந்தது. “நான் உன்னை அழைக்காதபோது எதற்காக பொய் கூறினாய்?” என்றார் கோபத்துடன். சுவாமிகள் நடுநடுங்கிப் போனார்.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன