மகான் ஷீரடி பாபா – 1

தெய்வத்தின் பரிசு

குல்பர்க்கா நகரின் பெரும் செல்வந்தரான எச்.வி சாத்தே அன்று தனது அரண்மனை போன்ற இல்லத் தாழ்வாரப் பகுதியில் ஆழ்ந்த யோசனையுடன் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்ததை, அவருடைய பணியாள் மேகா கவனித்துவிட்டு குழப்பமானார். சாய்பாபாவின் பக்தரான, எந்தவித கவலையுமே கொள்ளாத தனது முதலாளி இப்படி இருப்பதை இதற்கு முன் அவர் கண்டதில்லை.

சாத்தே குடும்பத்தில் மேகா சமையல் பணியை செய்து வந்தாலும், சாத்தே உள்ளிட்ட அனைவருமே பலகாலமாக அவரை குடும்ப உறுப்பினராகவே பாவித்து வந்தனர். அதனால் மேகா தேவைபட்ட நேரத்தில் தனது கருத்துக்களையும் வெளியிடுவார்.

எதற்கும் எஜமானரின் தற்போதைய நிலைபற்றி அறிய ஆவல் கொண்ட மேகா, உள்ளே சென்று தேநீர் தயாரித்து, கோப்பையை சாத்தேயிடம் நீட்டினார். “ எசமான்”, சூடா டீ சாப்பிட்டு யோசியுங்கள் “ என்று மேகா கூறவே, “ சரி “ எனத் தலையாட்டி டீயை குடித்தவாறே, மேகாவின் முகத்தைப் பார்த்தார் சாத்தே. “ எசமான்! உங்க பிரச்னை என்ன? முடிந்தால் எனக்கு தோன்றுவதை சொல்வேன்” என மேகா கூற, சாத்தே பெருமூச்சு விட்டார்.

“ மேகா! உனக்குத் தெரியும். நம்ம ஷீரடி மகான் கிட்டே போய் நான் இருந்து பலகாலம் சேவை செய்யவேண்டும் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருக்கிறதை”

”ஆமா !, மேலே சொல்லுங்க”

“ என் சூழ்நிலை, குடும்ப நிர்பந்தங்கள், இப்போதைக்கு என்னை ஷீரடிக்கு போக அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, கண்ட நபர்கள் யாரையும் என் சார்பாக அங்கு அனுப்பமுடியாது.உன்னைப் போல நல்லவன், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவன் வேண்டுமல்லவா, அதனால்…,”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ எஜமான்! தயங்காமல் சொல்லுங்கள் “

“ ஏன் உன்னையே என் சார்பாக ஷீரடிக்கு அனுப்பக்கூடாது என்ற யோசனைதான் நேற்று இரவிலிருந்து என் மனசிலே ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு குழப்பம், நீயோ தீவிர சிவபக்தன். அவரை தினம் பூஜை செய்பவன். மகான் மேல் எந்த அளவுக்கு உனக்கு ஈடுபாடு உண்டென்று தெரியவில்லை எனக்கு… “

“ எஜமான்! இவ்வளவு தானே! உங்கள் கவலை இனி என் கவலை. நிம்மதியாக இருங்கள் நீங்கள் சொல்கிற அன்றே நான் பூஜிக்கிற சிவனோடு, மூட்டையை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறேன் ஷீரடிக்கு. ஆனால்… உங்களையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிவதை நினைத்தால் அழுகைதான் வருகிறது”

இப்படி கண்கலங்கி பதில் சொன்ன மேகாவை அன்புடன் அணைத்துக்கொண்டே எச்.வி சாத்தேயின் கண்கள் நீர் உகுத்தன. பாசக்கார பயல் மேகாவை பிரிவது அவ்வளவு சுலபமா என்ன!

ஒரு நல்ல நாளில் , விரைவில் தான் தினமும் பூஜிக்கும் சிவத்திருவுருவுடன் மூட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டு ஷீரடி நோக்கி மேகா பயணமானார் பாபாவை முதன்முதல் அவர் தரிசிக்கையில், எந்த வித உணர்வும் அவரை பற்றவில்லை. சாத்தே ஒரு ஆள் மூலம் மேகாவை பற்றி மகானுக்கு முன்பே தகவல் அனுப்பியிருக்கவே , மேகா பணிவிடை புரிய ஷீரடி மகான் இசைவு தந்துவிட்டார்.

ஷீரடிக்கு மேகா வந்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அதிகாலையில், மேகா தினமும் எட்டு மைல் தூரத்தில் உள்ள கண்டகி ஆற்றுக்கு ஒரு குடத்துடன் நடந்து சென்று நீராடிவிட்டு , பாத்திரத்தில் நீர் சுமந்து தன் இருப்பிடம் வந்து சிவ பூஜை செய்து விட்டு பணிவிடை செய்ய மகானிடம் வந்து விடுவார்.

நாள் ஆக ஆக, மேகாவிற்கு பாபாவிடம் மதிப்பும், அன்பும் கூட ஆரம்பிக்க, அவர் சிவ பூஜை முடித்துவிட்டு கண்டகி ஆற்று நீர், வில்வதளத்துடன் மகானிடம் வந்து பாத பூஜை செய்வார். இந்த பூஜை தனக்கு வேண்டாமென மகான் தடுத்தும் மேகா பிடிவாதமாக அதனைத் தொடர்ந்தார். அதனால் இப்போதெல்லாம் மேகா முழு நேர, ஷீரடி மகானின் தீவிர பக்தராக பரிணமித்து விட்டார் எனலாம்.

அன்றைய தினம் மகர சங்கராந்தி புனித தினம். {நமக்கெல்லாம் தை பொங்கல் விழா நாள்) அன்றும் வழக்கம் போல அதிகாலை கண்டகி ஆற்றுக்கு குடத்துடன் சென்று, நீராடிவிட்டு, நீர் நிறைந்த குடத்துடன் மகான் பாபாவை அணுகிய மேகாவை புன்னகையுடன் நோக்கிய பாபா, “ மேகா! என்ன இவ்வளவு சீக்கிரத்தில் வந்து விட்டாய் “ என ஆவலுடன் கேட்டார்.

“ ஐயனே! எனது பணிவான வேண்டுகோள் இது. இன்று மகர சங்கராந்தி நாள்”

“ ஆமாம்! அதற்க்கென்ன?…

“ சந்தனம் கலந்த நீரால் தங்களை அபிஷேகம் செய்ய வேண்டும் இப்போது. அதற்கு என்னை அனுமதிக்கவேண்டும்.

“ மேகா! எனக்கு இதில் உடன்பாடில்லை. ஆனால் உன் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை…”

“ சொல்லுங்க பாபா”

“ நீ என் சிரசில் நீர் ஊற்றாமல் உடலில் மட்டும் ஊற்றலாம். சரிதானே “

“ அப்படியே ஐயனே”

மகிழ்ச்சி கொண்ட மேகா சந்தனம் கலந்த நீரை மகானின் உடல் முழுவதும் கொட்டிவருகையில், அவர் கண்களுக்கு பாபா சிவனாகத் தோன்றினார். உணர்ச்சிப் பெருக்கில் குடத்து நீரை மகானின் சிரசிலும் கொட்டி அபிஷேகம் செய்துவிட்டார். பிறகுதான், தான் பாபாவின் வாக்கை மீறி விட்டோமே என வருந்தி, மன்னிப்பு கோரினார் பாபாவிடம்.

மேகாவின் திடீர் செய்கையால் பாதிக்கப்படாத பாபா “ மேகா! நீ தவறு ஏதும் செய்யவில்லை. என் சிரசைப் பார்! தண்ணீர் பட்டுள்ளதா” என்று புன்னகையுடன் கூற, மேகா நிமிர்ந்து பார்க்க… அதிர்ச்சியானார்.

காரணம், நீர் பட்ட சுவடே சிரசில் காணப்படவில்லை. வழக்கம் போலத்தான் அது இருந்தது. எல்லாம் மகானின் திருவிளையாடல் என உணர்ந்த மேகா வியப்புடன் பாபாவின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, ” ஐயனே! தாங்கள் நான் வணங்கும் சிவன்தான்”! எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மேகாவின் தீவிர பக்தி, மகானுக்கு மிக நிறைவை தந்ததாலோ என்னவோ, பல ஆண்டுகள் கழித்து மேகா சிவ பதவியை அடைந்த நாளன்று, அவருடைய பூத உடலுக்கு மலர் போர்வை போர்த்தியதோடு, மகான் பாபா அவருடைய அந்திம சடங்குகளிலும் பங்கேற்றார். அது மட்டுமல்ல, அந்திம சடங்கு சாப்பாட்டுச் செலவையும் அந்த மகானே ஏற்றுக் கொண்டார்.

உண்மையான இறை பக்திக்கு இதைவிட சிறந்த தெய்வப்பரிசு உண்டா என்ன!!

ஜெய் சாய் ராம்!!

மகானின் மகிமை தொடரும்

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 25

எதிர்பாராதது தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன