ஆதிசேஷனின் அவதாரம் – 29

என்ன ஆச்சர்யம்! ராமானுஜரின் உடலுக்குள் புகுந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை.
அப்பொழுதுதான் ராமானுஜரின் சக்தி அந்த அர்ச்சகருக்கு புரிந்தது.
எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அழுதார். ராமானுஜரின் திருவடிகளை பற்றிக்கொண்டு, மன்னிக்கும்படி கதறினார். தரையில் விழுந்து புலம்பினார்.
‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணிய ராமானுஜர், அர்ச்சகரை மன்னித்துவிட்டு புறப்பட்டார்.
நாட்கள் ஓடின. அன்றைக்கு யக்ஞமூர்த்தி என்கிற அத்வைத சன்யாசி ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் பல மாயாவாதங்களை கற்று பல்வேறு நகரங்களில் அறிஞர் பெருமக்களை வென்று தனக்கு அடிமையாக்கி இருந்தார்.
ராமானுஜரையும் வெற்றி பெற்றால் தனக்கு மிகப்பெரிய புகழ் கிட்டும் என்ற நினைப்போடு நகருக்குள் நுழைந்திருந்தார்.
“நான் தோற்று விட்டால் உமது பாதுகைகளை சுமந்து உமது பெயரை வைத்துக்கொண்டு உம்முடைய சித்தாந்தத்திலேயே புகுவோம்.” என்று ஆணவமாகக் கூறினார்.
ராமானுஜர் ஒப்புக்கொண்டார். வாதம் துவங்கி 16 நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி தொடர்ந்தது. 17ம் நாள் யக்ஞமூர்த்தியின் கை ஓங்கியது. இதைக்கண்டு குதூகலித்த அவரும் அவரது சீடர்களும் “இன்னும் ஒருநாள் தான் இருக்கிறது. இன்று போய் நாளை வாரும்” என ராமனுஜரிடம் ஏளனமாய் கூறினர்.
வாடிய முகத்தோடு மடம் திரும்பினார் ராமானுஜர்.
தினமும் தான் ஆராதிக்கும் பெருமாளான பேரருளாளன் முன் வந்து நின்றார். அவர் கண்கள் கலங்கின.
‘ஆழ்வார்கள் காலத்திலிருந்து முந்தைய ஆளவந்தார் காலம் வரைக் கட்டிக்காத்துவந்த வைணவத்தை எனது காலத்தில் அழித்துவிடுவேனோ? இது என்ன விளையாட்டு? கேவலம்… ஒரு மாயாவாதியிடம் வைணவம் தோற்றுப் போவதா?’ என்று மனமுருக பேரருளாளனிடம் கேட்டார். அப்படியே அன்றைக்கு இரவு உணவு கூட உண்ணாமல் உறங்கிப்போனார்.
அதிகாலை ஒரு கனவு. அதில் பெருமாள் தோன்றினார். வாதத்தில் வெற்றி பெறத் தேவையான உத்திகளை வாரி வழங்கி மறைந்தார்.
விடிந்தது. கண் விழித்த ராமானுஜரின் முகம் பளிச்சிட்டது. காலை பூஜைகளை முடித்துவிட்டு கம்பீரமாய் வாத மண்டபம் நோக்கி நடந்தார்.
முதல் நாள் மாலை வாடிய முகத்துடன் சென்ற ராமானுஜர், அடுத்த நாள் தெளிந்த நீரோடையாய் பளிச்சென வருவது கண்டார் யக்ஞமூர்த்தி.
அவரது மனதிற்குள் குழப்பம் அலையடித்தது.
‘எப்படி அவரால் தெளிவாக இருக்க முடிகிறது.?’ அடுக்கடுக்காக யோசித்த யக்ஞமூர்த்தியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.நீண்ட நெடுநேர யோசனைக்கு பிறகு தீர்மானமாய் எழுந்தார்.
“சுவாமி… நேற்றைக்கு இருந்த இருள், இன்றைக்கு உங்களிடத்தில் காணப்படவில்லை. அப்படியெனில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. எப்படி இருந்தாலும் நீர்தான் இறுதி நாளான இன்றைக்கு வெற்றி பெறுவீர் என என் மனது சொல்கிறது. இனி உங்கள் முன்னால் நின்று ஒரு வார்த்தையும் பேச எனக்கு அருகதை இல்லை. நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.”
ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார் யக்ஞமூர்த்தி. பின்னர் அவரது திருவடிகளை தனது தலைமேல் வைத்துக்கொண்டு “இதற்காக நான் என்ன புண்ணியம் செய்தேனோ” என மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்.
ராமானுஜரும், யக்ஞமூர்த்தியின் முந்தைய நாட்களுக்கான கேள்விக்கு விளக்கம் கூறினார். அதைக்கேட்டதும் “நீங்கள் பெரிய மகான் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. தயவு செய்து என்னையும் தங்களது சீடர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்” பணிவோடு வேண்டுகோள் வைத்தார் யக்ஞமூர்த்தி.
அன்றைக்கே‘ “அருளாளப் பெருமான் எம்பெருமானார்’ என்கிற புதிய திருநாமம் சூட்டப்பட்டது. உரிய சடங்குகள் செய்யப்பட்டு ராமானுஜரின் சீடரானார் யக்ஞமூர்த்தி.
அவருக்கென தனிமடத்தையும் கட்டிக்கொடுத்தார் ராமானுஜர். மேலும், தன்னிடம் சீடர்களாக வந்து சேர்ந்த அனந்தன், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி ஆகியவர்களையும் அருளாளப்பெருமான் எம்பெருமானாரிடம் சீடர்களாக அனுப்பிவைத்தார்.
சிறிது தினம் கழித்து தொலைதூரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வந்து சேர்ந்தார்கள் சில பாகவதர்கள்.
“ஐயா… இங்கே எம்பெருமானார் மடம் எங்கே இருக்கிறது…”
“எந்த எம்பெருமானார் மடத்தை கேட்கிறீர்கள்?” ஊர்க்காரர் கேள்வி கேட்டார்.
“என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? எம்பெருமானார் என்பவர் ஒருவர் மட்டும் இருக்க முடியுமே தவிர, நீங்கள் கேட்பதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்டவராக இருக்க வாய்ப்பில்லையே”
“அப்படியில்லை. இங்கே இரண்டு எம்பெருமானார்கள் உள்ளனர். நீங்கள் யாரை கேட்கிறீர்கள் என்பது புரியவில்லையே”
“நாங்கள் ராமானுஜரின் மடத்தையே கேட்கிறோம்.”
ஊர்க்காரர் புரிந்துகொண்டு மடத்திற்கு வழி சொல்லி அனுப்பினார்.
இச்செய்தி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் காதில் விழுந்தது. துடிதுடித்துப்போனார்.
‘தான் தனித்திருக்க ஒப்புக்கொண்டதால்தானே இவ்வளவு குழப்பமும்’ என்றெண்ணியவர், தன் சீடர்களோடு சேர்ந்து தங்கியிருந்த மடத்தை உடைத்து தரைமட்டமாக்கிவிட்டு ராமானுஜரின் மடத்திற்கே வந்து சேர்ந்தார். அங்கே அவருடைய திருவடிகளை பற்றிக்கொண்டு கதறினார். ராமானுஜரும் அவரை அரவணைத்து தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்.
நித்தமும் சீடர்களுக்கு பாடம் நடத்தும் ஒரு வேளையில், திருவாய்மொழி பாசுரங்களுக்கு அன்றைய தினத்தில் விளக்கவுரை சொல்லிக்கொண்டிருந்தார் ராமானுஜர்.
அதில்‘சிந்துப்பூ மகிழும் திருவேங்கடத்து’ என்கிற வரிகளை படித்ததும் ராமானுஜரின் கண்கள் கலங்கின. கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சீடர்கள் பதறிப்போனார்கள். கண்ணீருக்கான காரணத்தை கேட்டார்கள்.
“திருமலையில் பூத்துக்குலுங்கும் மலர்கள், திருவேங்கடமலையானுக்கு மாலையாகப் பயன்படாமல், தரையில் சிந்தி பயனற்று போகின்றனவே. இதை எண்ணியே என் மனம் கலங்கியது” ராமானுஜரின் குரல் உடைந்து போய் வார்த்தைகள் கலங்கி வந்து விழுந்தன.
அவர் தொடர்ந்தார்.
“திருவேங்கட மலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், தங்களுடைய ஆவலை தெரிவிக்கலாம்.”
சீடர்கள் கூட்டம் அமைதி காத்தது.
ராமானுஜரை விட்டுப் பிரிய மனமில்லாததால் பலரும், திருமலையில் வீசும் குளிர் காற்று, கொடிய காட்டுமிருகங்கள் முதலியவைகளுக்காக மற்றவர்களும் பயந்துபோய் அமைதி காத்தனர்.
“இவ்வளவு சீடர்கள் இருந்தும், திருமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய ஒருவரும் இல்லையா?” ராமானுஜரின் குரலில் கவலை கலந்து வந்தது.
“நானிருக்கிறேன்…”
குரல் வந்த திசையை நோக்கினார் ராமானுஜர்.
இரு கைகளையும் கூப்பி பவ்வியமாய் எழுந்து நின்றபடி இருந்தார் அந்த சீடர்.
மகிழ்ந்து போன ராமானுஜர், அவரை அருகில் அழைத்து, அணைத்துக்கொண்டார்.
“நீர்தான் ஆண்பிள்ளை” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
அன்றிலிருந்து அச்சீடரின் பெயர் ‘அனந்தாண்பிள்ளை’ என்றும் ‘அனந்தாழ்வான்’ எனவும் அழைக்கப்படலாயிற்று.
குருவின் கட்டளையை சிரமேற்று ஒருநாள் கூட தாமதிக்காமல், திருமலையை நோக்கி புறப்பட்டார் அனந்தாழ்வான். உடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவியும் இணைந்துகொண்டார்.
இருவரும் திருமலையை அடைந்தனர்.
காடுபோல் மண்டிக்கிடந்த செடிகளை திருத்தி நந்தவனம் ஆக்கினர். அதற்கு, ‘ராமானுஜ நந்தவனம்’ என்கிற பெயரும் சூட்டினர். அதில் பூக்கும் விதவிதமான அழகிய மலர்களை மாலையாக்கி திருமலையானுக்கு அர்ப்பணித்தனர்.
இவ்வளவு பணிகளுக்கு இடையே அனந்தாழ்வானின் மனதில், ஒரு அழகிய தடாகமும், ஏரியும் அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதை தன் மனைவியிடம் தெரிவித்தார். இருவரும் அதற்கான வேலைகளில் இறங்கினர்.
மண்ணை வெட்டி கூடையில் போட்டு அனந்தாழ்வான் கொடுக்க, அவரது மனைவியோ, அதை எடுத்துக்கொண்டுபோய் உரிய இடத்தில் கொட்டி வருவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், இறை கைங்கர்யம் என்பதால் தன் வலியை பொருட்படுத்தாமல் செய்துவந்தார் அவர்.
பலர் சேர்ந்து செய்தாலே நாட்கள் பிடிக்கும் அக்காரியம், இருவர் மட்டுமே செய்தால் நீண்ட தினங்கள் ஆகச்செய்யும்தானே!
தினமும் பணிகள் நடந்து வந்தன. அன்றைக்கும் அப்படியே உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் தலையில் மண் கூடையை எடுத்துக்கொண்டு கொட்டுவதற்கு புறப்பட்டார் அனந்தாழ்வான் மனைவி.
அச்சிறுவன், எங்கிருந்து வந்தானோ தெரியவில்லை. அவரின் முன் வந்து நின்றான்.
“ஒரு கர்ப்பிணியாக இருந்துகொண்டு இந்த காரியத்தில் ஈடுபடலாமா? அந்த மண் கூடையை கொடுங்கள் நான் கொட்டி வருகிறேன்” வற்புறுத்தினான்.
அனந்தாழ்வானின் மனைவி எவ்வளவோ மறுத்தும் அச்சிறுவன் விடுவதாயில்லை. வேறு வழியில்லாமல், அவன் கைகளில் அந்த கூடையை ஒப்படைத்தார். அவனும் உரிய இடத்தில் மண்ணை கொட்டிவந்து கூடையை கொடுத்தான்.
மனைவி சீக்கிரத்திலேயே மண்ணை கொட்டிவருவதை கவனித்தார் அனந்தாழ்வான். நடந்தவற்றை விசாரித்தார். இதற்கு காரணமான சிறுவனை அவ்விடத்திற்கு அழைத்தார்.
“எங்கள் ஆச்சாரியர் இட்டிருந்த கட்டளையை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளோம். இதில் நீ பங்கெடுக்காதே…” கோபமாய் வெளிப்பட்டது வார்த்தைகள்.
“கர்ப்பிணிப் பெண் இத்தகைய கடினமான பணியை செய்கிறாரே என்கிற நோக்கத்தில்தான் நான் அவருக்கு உதவினேன்.”
“இந்த பரிதாபமெல்லாம் இங்கு தேவையில்லை. உன் வேலை என்னவோ அதை கவனித்துக்கொண்டு போய்விடு” எச்சரிக்கும் தொனியில் கூறினார் அனந்தாழ்வான்.
“இறை பணிக்கு உதவினால் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே…”
“அப்படியென்றால் தனியே போய் அப்பணியை செய். இதில் தலையிடாதே…”
சிறுவனை அடிக்காத குறையாக அவ்விடம்விட்டு விரட்டினார்.
சிறிது நேரம் சென்றதும், மீண்டும் அனந்தாழ்வானின் மனைவி கையில் இருந்த மண்கூடையை வாங்க வந்தான் சிறுவன். இதைக்கண்டு கோபமடைந்த அனந்தாழ்வான், அவனை பிடித்து கீழே தள்ளினார்.
சிறுவனை மிரட்ட கடப்பாரையை ஓங்கினார். அவனோ எழுந்து தப்பிக்க முற்பட்டான். அந்த நேரத்தில் அவனது தாடையை கடப்பாரை கிழித்தது. ரத்தம் கொட்டும் நிலையிலும் அவன் ஓட ஆரம்பித்தான். அனந்தாழ்வான் துரத்த ஆரம்பித்தார்.
அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன