ஆதிசேஷனின் அவதாரம் – 28

அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றார் ராமானுஜர்.
“அம்மா…”
குரல் கேட்டு அன்னத்துடன் வெளியே வந்தாள் அப்பெண்மணி. கலங்கி இருந்த அவளது கண்களில் கவலை நிரம்பி வழிந்தது.
ராமானுஜரின் வஸ்திரத்தில் அன்னத்தைப் போட்டவள், சட்டென அவரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து மறைந்தாள்.
ஏழு வீடுகளில் மட்டுமே யாசகம் பெறுவது ராமானுஜரின் வாடிக்கை. அப்படித்தான் இப்பொழுதும் நடந்தது. ஆனால் அப்பெண்மணியின் நடவடிக்கைகள் இன்றைக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
யாசகம் பெற்றதும் சேவிக்கப்பட்டால், அன்றைக்கு உபவாசம் இருக்கவேண்டும் என்பதால், நேரே காவிரிக்குச் சென்றார் ராமானுஜர்.
வழி முழுவதும் அப்பெண்மணியின் கலங்கிய கண்களும், சோகம் கவ்விய முகமும் நெஞ்சில் நிழலாடியது.
துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருந்த காவிரியில் அன்னத்தைக் கொட்டினார். தன் வஸ்திரத்தில் ஒட்டியிருந்த பருக்கைகளை உதறிவிட்டு, கைகளை கழுவிக்கொண்டு திரும்பியவர் திடுக்கிட்டார்.
கீழே விழுந்து கிடந்த பருக்கைகளை தின்றுவிட்டு இரண்டு காக்கைகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன.
‘பெருமாளே… என்னப்பா இது சோதனை…’
நெஞ்சம் கனத்து கலங்கினார்.
‘என்னைக் கொலை செய்வதால் யாருக்கு என்ன ஆதாயம் கிடைக்குமோ தெரியவில்லையே…’
மனம் வருத்தத்தில் துடித்தது.
ராமானுஜரால் தண்டிக்கப்பட்டோரும், அவர் மீது பொறாமை கொண்டவர்களும் இணைந்து செய்த சதியே இது.
இன்றைக்கு இவ்வீட்டில்தான் யாசகம் பெறுவார் என்பதை அறிந்துகொண்டு, அவ்வீட்டுப் பெண்மணியை மிரட்டி, உணவில் நஞ்சை கலக்க வைத்திருந்தனர். வேறு வழியே இல்லாமல் இப்பாதகத்தை செய்திருந்தார் அப்பெண்மணி. ஆனாலும் குறிப்பால் ராமானுஜருக்கு உணர்த்தியதுதான் அவரது புத்திசாலித்தனம்.
மடத்துக்குள் நுழைந்தவர் ஒரு முடிவோடு இருந்தார்.
‘என்னை கொலை செய்து அந்தப் பாவத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டாம். நானே உபவாசம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்கிறேன்’
தனது விரதத்தை துவங்கினார்.
விஷயம் சீடர்கள் மூலம் ஊர் மக்களுக்கும் பரவியது. அனைவரும் கலங்கினார்கள். பல்வேறு நபர்களும், உபவாசத்தை கைவிடுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர். ராமானுஜர் ஒப்புக்கொள்ளவில்லை. நாட்கள் செல்லச்செல்ல உடல் தளர ஆரம்பித்தது, எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையானார்.
இச்செய்தி திருகோஷ்டியூருக்கு பறந்தது. நம்பிகள் துடித்துப்போனார். அடுத்த நொடியே அங்கிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டார். துரித நடை.
அதேசமயம், திருக்கோஷ்டியூர் நம்பிகள் தன்னைக் காண வரும் செய்தியை அறிந்துகொண்டார் ராமானுஜர்.
தன்னுடைய உடல் நலனையும் பொருட்படுத்தாமல் நம்பிகளை எதிர்கொள்ளப் புறப்பட்டார்.
“சுவாமி… ஏறத்தாழ ஒரு மாத காலமாய் உபவாசம் இருந்து தங்கள் உடம்பு சக்தி இழந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஆச்சார்யரை அழைத்துவர தாங்களே செல்வது உசிதமல்ல…”
சீடர்களின்கனிவான கவலைக்கு தன்னுடைய புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
எழுந்து அமரக்கூட முடியாத நிலையில் இருந்தவர் ஆச்சார்யர் வருகிறார் என்றதும் நடக்கவே ஆரம்பித்துவிட்டாரே!
அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
கோடைகால சூரியன் கோபம் கொண்டவனாய் தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தான்.
அனல் தகிதகித்தது.
பாத அணிகள் இல்லாத வெற்றுக் கால்களோடு, காவிரி மணலில் நடந்துகொண்டிருந்தார் ராமானுஜர். அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது சீடர் குழாம்.
குருவும், சிஷ்யனும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டனர்.
வெயிலையும் பொருட்படுத்தாமல்,கொதிக்கும் மணலில் விழுந்து நம்பிகளை வணங்கினார் ராமானுஜர்.
நேரம் சென்றுகொண்டே இருந்தது. ‘எழுந்திரு’ என்கிற சொல்லை சொல்லாமல் நின்றிருந்தார் நம்பிகள்.
உபவாச களைப்போடு சேர்ந்து, மணலில் வெந்துகொண்டிருக்கும் தனது குருவை பார்த்து துடிதுடித்துப்போனார் கிடாம்பியாச்சான் என்கிற சீடர். அவரது முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது. அழுகையும் ஆத்திரமும் முகத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாத நிலையில், சட்டென கீழே விழுந்து தன் உடல்மேல் ராமானுஜரை வாரி போட்டுக்கொண்டார்.
“உங்களுக்கு கல் மனமோ? ஏற்கனவே உபவாசம் இருந்து இளைத்துப் போயிருக்கும் எம்பெருமானாரிடம் இப்படியா நடந்துகொள்வது? அனலை அணைத்துக்கொண்டிருக்கும் இம்மணலில் வெகுநேரம் கிடக்கவைப்பது, அவருக்கு நஞ்சு கொடுத்ததைவிட கொடுமையானது” கிடாம்பியாச்சானிடமிருந்த கோபம் வார்த்தைகள் வடிவில் வெளிப்பட்டு, படபடவென பொரிந்துபோய் விழுந்தன.
மற்ற சீடர்கள் விக்கித்து நின்றார்கள். ஆச்சார்யரை எதிர்த்துப் பேசும் ஆச்சானை பயம் கலந்து பார்த்தனர்.
திருக்கோஷ்டியூர் நம்பிகள் முகத்தில் புன்னகை அரும்பியது. தனக்கு எதிராகப் பேசிய கிடம்பியாச்சானையும், ராமானுஜரையும் தொட்டு எழுப்பினார்.
“நான் வைத்த பரிட்சையில் தேறியவர் நீர் மட்டுமே! எம்பெருமானாரினிடத்தில் யாருக்கு அன்பு அதிகம் இருக்கிறது என்பதற்காகவே அவரை எழுப்பாமல் இருந்தேன். அவரின் மீது வைத்த அபரிமிதமான அன்பு காரணாமாகவே என்னை நிந்தனை செய்தீர். அவருடைய திருமேனியில் இருக்கும் அக்கறை உமக்கே அதிகம் என்பதை கண்டுகொண்டேன். இனி அவர் யாசகம் பெறத் தேவையில்லை. இன்றிலிருந்து நீரே அவருக்கு திருவமுது சமைத்து பரிமாறவேண்டும். அதற்கான முழு தகுதியும் உமக்கு இருக்கிறது.” சொல்லிவிட்டு இருவரையும் வாரி அணைத்துகொண்டார் நம்பிகள்.
‘நான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி…’ நினைத்த கிடாம்பியாச்சானின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் கொட்ட ஆரம்பித்தது.
அன்றுமுதல் ராமானுஜருக்கு உணவு சமைத்து பரிமாறுவதை மகிழ்வோடு செய்யத் துவங்கினார் கிடாம்பியாச்சான்.
சிறிது நாட்கள் சென்றன.
நடந்தவைகளை மறந்துவிட்டு தனது பணிகளை கவனிக்க ஆரம்பித்தார் ராமானுஜர். வழக்கம்போல் கோயில் நிர்வாகத்தில் ஒழுங்குமுறையும் கண்டிப்பும் கடைப்பிடிக்கப்பட்டது.
இது அவரது எதிரிகளுக்கு மேலும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின.
முதல் திட்டம் தோல்வியில் முடிந்துபோனால் என்ன! அடுத்த திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே!!
ஒன்றுகூடி யோசித்தார்கள்.
திட்டம் தயார்.
அன்றைக்கு எப்பொழுதும்போல் பெரிய பெருமாளை சேவிக்க சன்னதிக்குள் நுழைந்தார் ராமானுஜர்.
வழக்கமான புன்னகையுடன் அரங்கன் பள்ளிகொண்டிருந்தான்.
இரு கரங்களையும் உயர்த்தி நெடுநேரம் சேவித்தார். மனதிற்குள் அரங்கனைத் துதித்தார்.
அரங்கனுடனான அன்றைய உரையாடல் முடிந்தது.
புறப்பட ஆயத்தமான வேளையில் அர்ச்சகர், தீர்த்தம் எடுத்துவர, தனது வஸ்திரத்தின் மீது வலக்கையை குவித்து மூன்று முறை வாங்கி அருந்தினார்.
‘ஒட்டுமொத்தமாய் முடிந்தது. இதோ இன்னும் சில நொடிகளில் ராமானுஜர் மாண்டு போகப்போகிறார்’
அர்ச்சகரின் மனம் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தது. ஆவலோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
நஞ்சு கலந்த தீர்த்தம் ராமானுஜரின் தொண்டைக்குள் ஓடி, இரைப்பையில் இறங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன