ஆதிசேஷனின் அவதாரம் – 27

அரங்கனின் கருவறைக்குள் நுழைந்த ராமானுஜரை பின்தொடர்ந்தான் வில்லி.
“இதோ பார்… பாம்பையே பஞ்சுமெத்தையாய் பாவித்துப் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனின் அழகிய விழிகளைப் பார். இதைவிட கவர்ச்சி மிகுந்ததா உன் மனைவியின் கண்கள்..?”
வில்லி திகைத்துப்போய் நின்றான். அக்கரிய விழிகள் அவனைக் கட்டி இழுத்தன. பதிலேதும் சொல்லாமல், பார்வையை திருப்பாமல் தன்நிலை மறந்து நிற்க ஆரம்பித்தான். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட ஆரம்பித்தது.
அரங்கனின் மாயவிழிகளுக்கு முன் அவன் மனது மண்டியிட்டுக் கிடந்தது.
மணித்துளிகள் கரைந்து ஓடியிருக்க, அப்படியே நின்றிருந்த வில்லி, சட்டென தன்நிலைக்கு வந்தான்.
அரங்கனை விழுந்து சேவித்துமுடித்து, கருவறையைவிட்டு வெளியே வந்தான். இரவு வெகுநேரம் கடந்திருந்ததற்கு அடையாளமாக வானில் பல்வேறு நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.
கோயிலின் வாயிலருகே வந்தவன், அங்கிருந்தவர்களிடம் “இப்போது நாழி என்ன?” என்றான். இதனால் இன்றைக்கும் இவ்வாசல் ‘நாழி கேட்டான் வாசல்’ என்றழைக்கப்படுகிறது.
மெய்மறந்து, தன் மனத்தை அரங்கனின் விழிகளில் பறிகொடுக்கக் காரணமாயிருந்த ராமானுஜரை தேடி அந்த நடுநிசியில் புறப்பட்டான்.
வீதி வெறிச்சோடிக்கிடந்தது. எதிரே தென்பட்ட ஓரிருவரிடம் விசாரித்துக்கொண்டு மடத்தை அடைந்தான். ராமானுஜருடைய கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான்.
“எனக்குள்ள இருந்த மாயையை நீக்கிட்டிங்க. இன்னையிலிருந்து நான் உங்களுக்கு அடிமை…”
கதறினான்.
ராமானுஜர், வில்லியை எழுப்பி வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து கருணை பொங்க நோக்கினார்.
ஒரு சுபதினத்தில் வில்லிக்கும் அவனது மனைவி பொன்னாச்சிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, வில்லிதாசன், ஹேமாம்பாள் என்கிற திருநாமம் சூட்டப்பட்டது.
அப்போதிருந்தே, அரசன் அகளங்கனிடம் பணிபுரிந்து பெறும் ஊதியத்தை மடத்திற்கே கொடுக்க ஆரம்பித்தார் வில்லிதாசர். நித்தமும் ராமானுஜர் இடும் பணிகளை பணிவுடன், தம்பதிகள் செய்துவர ஆரம்பித்தனர்.
இதை கேள்விப்பட்ட அரசன் அகளங்கன், வில்லிதாசரை ‘அரண்மனை பணிக்கு வரவேண்டாம், மடத்து பணிகளை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்’ என்று கேட்டுக்கொண்டார்.
அரண்மனையில் பணிபுரியாவிட்டாலும், வில்லிதாசரின் ஊதியம் மடத்துக்கு வந்தடைந்தது.
வேலைக்கு வராமல் ஊதியம் வாங்குவது முற்றிலும் தவறு என ராமானுஜர் அதை மறுத்து, அரசனுக்கே திருப்பி அனுப்பினார்.
அகளங்கன் திகைத்தார். ராமானுஜரின் குண மேன்மை புரிய ஆரம்பித்தது. அன்றே தன்னுடைய பதவியை தூக்கி எறிந்துவிட்டு, அவரை தஞ்சமடைந்தார்.
அகளங்கனுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, ‘அகளங்க நாட்டாழ்வான்’ என்ற திருநாமம் சூட்டினார் ராமானுஜர். அவரின் நிர்வாகத் திறமை காரணமாக, கோயில் பணிகளை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர் பணி ஒதுக்கப்பட்டது.

கொங்கு நாட்டில் ஒரு சமயம் கடும் வறட்சி நிலவியது. இதனால் அங்கு வாழ்ந்துவந்த சுந்தரராஜரும், அவரது மனைவி சைல அசலாம்பாளும் அவ்விடம்விட்டு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்தனர்.
ராமானுஜரை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்துகொள்ள ஆரம்பித்த சைல அசலாம்பாள், அவரை காணவேண்டும் என ஆவல் கொண்டார். ஆனாலும் ஒரு விஷயம் அவர் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
‘எவ்வளவோ பெரிய செல்வந்தர்களும், அரசர்களும் ராமானுஜரின் பாதங்களில் விழுந்துகிடக்க, அவரோ யாசகம் பெற்றே உணவு உண்கிறாராமே? ஏன் இவ்வாறு செய்ய வேண்டும். கை தட்டினால் பணி செய்ய ஆயிரக்கணக்கில் ஆட்கள் இருக்கும்போது இது எதற்காக? அதேசமயம், பிச்சை எடுத்து உண்ணும் ஒருவருக்கு இவ்வளவு நபர்கள் சேவகம் செய்ய காத்துக்கிடக்கிறார்களா? இதுவும் எதற்காக?’
நெருஞ்சி முள்ளாய் நெருடிய இவ்விஷயத்தை ராமானுஜரை கண்டபொழுது கேட்டுவிட்டார் சைல அசலாம்பாள்.
“சுவாமி… தாங்கள் யாசகம் பெற்றே தினமும் உணவு உண்கிறீர்கள். ஆனாலும்கூட, கல்விமான்களும், வேதவிற்பன்னர்களும், பெரும் செல்வந்தர்களும், அரசர்களும் தங்களின் காலடியில் விழுந்து கிடக்கிறார்களே இது எதனால்?”
“அம்மா… சத்தியத்தை மனதில் வைத்திருப்பதாலும், பகவத் விஷயத்தில் கொஞ்சமாய் நல்வார்த்தைகள் சொல்வதாலும் மட்டுமே இது சாத்தியம்…”
“எனக்கும் அப்பாக்கியம் கிட்டுமோ?”
“நிச்சயமாய் தருகிறோம்…”
சைல அசலாம்பாள் அம்மையாருக்கு ‘கொங்கு பிராட்டி’ என்ற திருநாமம் சூட்டி, பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார்.
அன்றிலிருந்து ராமானுஜரின் சிஷ்யை ஆனார் கொங்கு பிராட்டி. நித்தமும் அவரின் வார்த்தைகளுக்கு பணிந்து கைங்கர்யம் செய்துவர ஆரம்பித்தார்.
கொங்கு நாட்டில் சுபிட்சமாய் மழை பொழிந்து வறட்சி நீங்கியதாக தகவல் வந்தது.
சுந்தரராஜர், கொங்கு நாடு திரும்பவேண்டும் என வற்புறுத்த ஆரம்பித்தார்.
ஆனால் அப்பிராட்டிக்கோ, ராமானுஜரை பிரிய மனமில்லாமல் இருந்தது. கணவரின் வற்புறுத்தலால், மடத்துக்கு சென்று சொல்லிக்கொண்டு புறப்படலாம் என அவ்விடத்தை அடைந்தார்.
மடத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாத அளவு கூட்டம் நிரம்பி வழிந்தது.
வெகுநேரம் வரையிலும் உள்ளே நுழைய முயற்சித்து முடியாமல் போகவே, கணவர் கோபித்துக்கொள்வாரே என்கிற நினைப்பில் வீடு திரும்ப முடிவெடுத்தார் பிராட்டி.
அந்நேரத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியே வந்தார் ராமானுஜர்.
“என்னம்மா… இவ்வளவு தூரம் வந்துவிட்டு உள்ளே வராமல் செல்லலாமா?”
செல்லமாய் கோபித்துக்கொண்டார்.
“சுவாமி… கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இவ்வளவு மக்களையும் தாண்டி தொலைவில் இருக்கும் நான் தெரிந்தது எப்படி?”
“நமது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் வலிமை இருக்கிறதல்லவா? உங்களுடைய மனம் என்னை காண எண்ணியது. அந்த உணர்வுகளை என்னுடைய உணர்வுகளால் புரிந்துகொண்டேன்.” சாந்தமான முகத்திலிருந்து சரளமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.
கொங்கு பிராட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“உங்களைவிட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை எனக்கு…” பெருங்குரலெடுத்து விம்மினார் பிராட்டி..
கொங்கு பிராட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“உங்களைவிட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை எனக்கு…” பெருங்குரலெடுத்து விம்மினார் பிராட்டி..
அவரை தேற்றி ஆறுதல் படுத்தினார் ராமானுஜர்.
“சுவாமி… உங்களிடம் கோரிக்கை ஒன்றை வைப்பேன். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்…”
புன்னகைத்தவாறே கொங்கு பிராட்டியை நோக்கினார் ராமானுஜர்.
“நான் வழிபட உங்களுடைய திவ்ய பாதுகைகள் வேண்டும். தருவீர்களா?” கேட்ட பிராட்டியின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
“அப்படியே ஆகட்டும் அம்மா…” மகிழ்ச்சியோடு தன் காலில் அணிந்திருந்த திவ்ய பாதுகைகளை கழற்றி கொங்கு பிராட்டியின் கைகளில் கொடுத்தார் ராமானுஜர்.
அதை பணிவன்போடு ஏற்றுக்கொண்ட பிராட்டி, கண்களில் ஒற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை திறம்பட செய்துவந்தார். யாரேனும் தவறு செய்தால் அவர்களை திருத்தவும், சில சமயம் தண்டிக்கவும் செய்தார்.
கோயில் பணிகளை ‘திருப்பதியார், திருப்பணி செய்வார், பாகவத நம்பிமார், உள்ளூரார், விண்ணப்பம் செய்வார், திருக்கரகக் கையார், ஸ்தானத்தார், பட்டால் கொத்து, ஆரிய பட்டாள், தாச நம்பி கொத்து என பத்து குழுக்களாக்கி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பணிகளை ஒதுக்கினார்.
நிர்வாகம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பது பிடிக்காதவர்களும், ராமானுஜரால் தண்டிக்கப்பட்டவர்களும் கைகோத்தனர்.
ராமானுஜருக்கு முடிவுகட்ட திட்டம் ஒன்று நேர்த்தியாய் தீட்டப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.
ராமானுஜர் தப்பினாரா?
அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன