ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி.
யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் தனக்கு கிடைத்திருப்பதாக எண்ணி அக்கண்ணழகியை, தன் கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக்கொண்டான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக, பொன்னாச்சியின் உடலில் ‘பொன்’னை ஆட்சி செய்யவைத்தான்.
திருவெள்ளறை மக்கள், ‘ஒரு மல்லனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?’ என்றுவியந்துபோனார்கள்.
மற்றும் சிலரோ, ‘மனைவின் பின்னால் சுற்றும் இவனெல்லாம் ஒரு மல்லனா?’ என ஏளனம் பேசினார்கள்.
எந்த ஒரு சொற்களும் வில்லியை சற்றும் அசைத்துப் பார்க்கவில்லை. பொன்னச்சியை போற்றிப் பாதுகாப்பதிலும், அவள் அழகை ஆராதிப்பதிலும் மட்டுமே அவன் குறியாக இருந்தான்.
அச்சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் வசந்த விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்விழாவைக் காண விருப்பம் கொண்டாள் பொன்னாச்சி. வில்லியிடம் தன் ஆவலை வெளிப்படுத்தினாள்.
அவள் சொல்லி மறுத்துவிடுவானா வில்லி!
இருவரும் ஸ்ரீரங்கம் புறப்பட்டனர்.
அங்கே எள் விழுந்தால், எண்ணையாகிவிடும் அளவு கூட்டம். அரங்கனை சேவிக்க பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் போல் குவிந்திருந்தனர்.
ஊருக்குள் நுழைந்ததும், கூட்டத்தை பார்த்து பயந்துபோனாள் பொன்னாச்சி.
“நான் இருக்கிறேன். நீ ஏன் பயப்படுகிறாய்?” அவளது கைவிரல்களை ஆதரவாய் பற்றிக்கொண்டான் வில்லி.
ஒருகட்டத்திற்கு மேல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி நடக்க முடியாமல் போனது. சட்டென பொன்னாச்சியின் முன்னே சென்று கூட்டத்தை ஒதுக்கி, அவள் நடந்துவர வழி ஏற்படுத்திக் கொடுத்தான்.
அரசர்தான் வருகிறார்போல என்று நினைத்து ஒதுங்கிய மக்கள், யாரோ ஒரு பெண்ணை பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.
பொன்னாச்சியால் தற்போது சுலபமாய் நடக்க முடிந்தது. விறுவிறுவென முன்னேறி அரங்கனின் முன் நின்றாள்.
அவள் மனம் அரங்கனின்பால் ஒன்றி பக்தியில் நிலைகுத்தி நின்றது. ஆனால் வில்லியின் கண்களுக்கு அரங்கன் தெரியவில்லை. தன்னருகே நின்றிருந்த பேரழகி பொன்னாச்சி மட்டுமே தெரிந்தாள். அவளது சுண்டியிழுக்கும் விழிகளே பிரதானமாய் தெரிந்தன.
நெடுநேரம்வரையில் பெருமாளை அவள் தொழுது கொண்டிருக்க, வில்லியோ அவளை விழிகளால் விழுங்கிய வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.
பொன்னாச்சி தன்னிலைக்கு வந்து புறப்பட்டாள். மீண்டும் அவளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தான் வில்லி.
கோயிலுக்கு வெளியே வந்தவன், வெயில் சுட்டெரிப்பதை கண்டு திடுக்கிட்டான்.
‘பொன்னாச்சியின் உடலை வெயில் தீண்டினால் அவள் துடித்துப்போவாளே. அவளது பஞ்சுபோன்ற பாதங்கள் பொசுங்கிவிடுமே’ என ஒருகணம் அவனது மனம் நின்று துடித்தது.
இதுபோன்று நடக்கும் என்பது அவனுக்கு தெரியாதா!
தயாராய் இருந்த தரை விரிப்பை அவள் நடக்கும் பாதையில் விரித்தான். அடுத்ததாக, சூரியக்கதிர்கள் அவளது பட்டுமேனியை தொட்டுப்பார்க்கா வண்ணம், குடையையும் தலைக்கு மேலே பிடித்தான்.
சுற்றி இருந்தவர்கள், ‘யாரடா இந்த பைத்தியக்காரன்’ என்பதுபோல பார்க்க ஆரம்பித்தனர். சிலர் முகம் சுளித்தனர்.
“என்னதான் மனைவியாக இருந்தாலும், இப்படியா பொதுவெளியில் நடந்துகொள்வது?” வில்லியின் காதுபடவே பலர் பேசினர்.
பேச்சுகள் எதையும் காதில் வாங்கும் மனநிலையில் அவன் இல்லை. பொன்னாச்சியைப் பத்திரமாய் வீடு சேர்ப்பதில் குறியாய் இருந்தான். அப்படியும் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அதைக்கண்டு பதறியவனாய், தன் கையில் வைத்திருந்த துண்டால் அவளது முகத்தை ஒத்தி எடுத்தான். பின்னர் அத்துண்டையே விசிறியாக்கி அவளுக்கு விசிற ஆரம்பித்தான்.
ஒரு மல்லன், இப்படி பெண்டாட்டிதாசனாய் நடந்துகொண்ட விதம் ராமானுஜரின் காதுகளை உடனே அடைந்தது.
வில்லியைத் தன்னிடத்திற்கு அழைத்துவரச் செய்து, அவனைப் பற்றி விசாரித்தார்.
“நான், அரசர் அகளங்கனின் அரசவை மல்லன். என் பெயர் வில்லி. இவள் எனது மனைவி பொன்னாச்சி.”
“அரசவையில் மல்லானாக இருக்கிறாய். ஆனால் அதற்கு தகுந்தாற்போல உன் நடவடிக்கைகள் இல்லையே…”
“என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.”
“விளக்கமாகவே சொல்கிறேன் வீரனே. பொதுமக்கள் இத்தனை பேர் கூடியிருக்கும் இவ்விடத்தில், அனைவரும் பரிகசிக்கும் வகையில் நடந்துகொள்வது எவ்வகையில் நியாயம்? போரில் வீரத்தைக் காட்டும் ஒரு வீரனா, ஒரு பெண்ணிடத்தில் இப்படிச் செய்வது? சற்றேனும் கூச்சமின்றி இவ்வாறு நடந்துகொள்ளலாமா? இதை நீ இழிவென்று நினைக்கவில்லையா?”
“சுவாமி, நாகரிகம் தெரியாமல் இல்லை. ஆனால், அவளது கண்களுக்கு நான் அடிமையாகிவிட்டேனே என்ன செய்வது! அதிலிருந்து மீண்டு என்னால் வெளியே வரமுடியவில்லை. அவளுடைய அழகிய விழிகளுக்கு முன்பு மற்ற அனைத்து விஷயங்களும் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். அவ்விழிகளுக்கு நிகர் அது மட்டுமே. அதற்கு ஈடுஇணை வேறேதுமில்லை. அந்தக் கண்களை பார்த்துக்கொண்டிருப்பதைவிட வேறென்ன விஷயம் இவ்வுலகில் இருந்துவிட முடியும்!” நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லிய வில்லியை கூர்ந்து நோக்கினார் ராமானுஜர்.
“உனது மனைவியின் விழிகளைவிட மகிழ்வைத் தரும் விஷயம் வேறொன்றும் இல்லை என்கிறாயா?”
“நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் என் பதில் அதுதான் சுவாமி…”
“சரி… அதைவிட அழகிய விழிகளை நான் காட்டிவிட்டால், என்ன செய்வாய்?”
“வாய்ப்பே இல்லை என்கிறேன். என் மனைவியின் கண்களை காட்டிலும் அழகிய கண் இருக்கவே முடியாது. அதையும் தாண்டி இருக்குமானால், அவ்விழிகளோடு ஒன்று கலப்பேன். அதைக் காட்டியவருக்கு அடிமையாவேன்” வில்லியின் பேச்சு சபதம் போல் இருந்தது.
ராமானுஜர் சற்றும் தாமதிக்காமல், “என் பின்னால் வா. அந்த அழகிய கண்களை காட்டுகிறேன்” என்றவாரே நடக்க ஆரம்பித்தார்.
வில்லி சற்றே குழப்பத்துடன் அவரை பின்தொடர்ந்தான்.

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன