முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம் – 21

ஆதிசேஷனின் அவதாரம் – 21

“சுவாமி… அடியேனுக்கு திருமந்திரம், த்வயம் இவற்றின் ரகசியங்களை உபதேசித்து அருளவேண்டும்” திருக்கோஷ்டியூர் நம்பிகளின் முன்பு இரு கரங்களையும் கூப்பியபடி நின்றிருந்தார் ராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பிகள், அவரை மேலும் கீழும் நோக்கினார்.

“வேறொரு சமயத்தில் வாரும்.” பிடிகொடுக்காமல் பதில் சொன்னார்.

ஆவலாய் வந்திருந்த ராமானுஜருக்கு, அந்த பதில் ஏமாற்றத்தை தந்தது. வெகுநேரம் வரை அவ்விடத்தை விட்டு அகலாமல் நின்றிருந்தவர், மனதை தேற்றிக்கொண்டு நகர்ந்தார்.

மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தாலும், அவருடைய மனம் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமே சுற்றி வந்தது.

சில நாட்கள் கழித்து, திரும்பவும் திருக்கோஷ்டியூர் நோக்கி புறப்பட்டார்.

“மற்றுமொரு சமயத்தில் சந்திப்போம்” மீண்டும் அதே பதில்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சற்றும் சளைக்காத ராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் செல்வதும், நம்பிகள் ‘அடுத்த முறை பார்ப்போம்’ என்பதும் தொடர்கதை னது. இதுபோல் பதினெட்டு தடவை சென்றும் உபதேசம் கிடைக்கவில்லை.

விஷயம் அறிந்த பெரிய நம்பிகள் கவலை கொண்டார். அரங்கனிடமும் மனமுருக பிராத்தித்துக் கொண்டார்.

சில நாட்களில் அரங்கனின் திருக்கோயில் உற்சவம் ஆரம்பமானது. இதற்கு வந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு அர்ச்சகர் மூலமாக, “ராமானுஜருக்கு ரகஸ்யார்த்தங்களை உபதேசியும்” என்று தெரிவித்தார் அரங்கன்.

திருக்கோஷ்டியூர் நம்பிகளோ “குறைந்தது ஒரு வருடமாவது ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால் மட்டுமே உபதேசிக்க வேண்டும் என தாங்கள்தானே கூறியுள்ளீர்கள்” என்றார்.

“நம் உடையவருக்கு அதில் விதிவிலக்கு உண்டு” என்றார் அரங்கன்.

“அரங்கனே கூறிவிட்டார்…  நீர் திருக்கோஷ்டியூர் வாரும்” என ராமானுஜரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார் நம்பிகள்.

ஆனால் இம்முறையும் ஏமாற்றமே பரிசாய் கிடைத்தது. கண்ணீர் கண்களை மறைக்க ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், தன்னுடைய மனக்குமுறல்களை வைணவர் ஒருவரிடம் கொட்டினார். அதில் அரங்கனை நொந்துகொண்டாரே தவிர, திருக்கோஷ்டியூர் நம்பிகளை ஒரு குற்றமும் சொல்லவில்லை.

இத்தகவல் அவ்வைணவர் மூலம் திருக்கோஷ்டியூர் நம்பிகளை அடைந்தது. ஆச்சர்யப்பட்டுப் போனார் அவர்.

‘இவ்வளவு ஆர்வத்துடன் ஒருவர் இருப்பாரா!’ என்கிற வியப்பு அவரை வியாபித்தது. உடனடியாக ராமானுஜரை வரச்சொல்லி செய்தி அனுப்பினார்.

‘இத்தனை முறை நடையாய் நடந்தும் திரும்பிப் பார்க்காத திருக்கோஷ்டியூர் நம்பிகள், தற்போது தானாகவே அழைக்கிறாரே’ மகிழ்வுடன் ஓட்டமும் நடையுமாக நம்பிகளின் இடத்தை சென்றடைந்தார் ராமானுஜர்.

“உன் ஒரு மாத உபவாசத்திற்கு பிறகு, நீ ஆவலோடு எதிர்பார்த்த உபதேசம் கிடைக்கும்” என்றார் நம்பிகள்.

அதன்படி திருக்கோஷ்டியூரில் தங்கி தனது உபவாசத்தை ஆரம்பித்தார் ராமானுஜர். தண்ணீர்கூட அருந்தாத கடும் விரதம். இதன் காரணமாக உடல் மெலிந்து சோர்வுற்றவர், ஒரு நாள் மயங்கி விழுந்தார்.

செய்தி கேட்டு, அங்கே வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பிகள், ராமானுஜரின் மயக்கம் தெளிவித்து தண்ணீர் கொடுத்து உண்ணாவிரத்தை முடித்துவைத்தார்.

“நாளை உமது தண்டும் பவித்திரமுமாக தனியே வாரும்” என்று கூறிவிட்டு சென்றார் நம்பிகள்.

அடுத்தநாள் முதலியாண்டானையும், கூரத்தாழ்வாரையும் உடன் அழைத்துக்கொண்டு திருக்கோஷ்டியூர் நம்பிகளின்  வீட்டிற்குள் நுழைந்தார் ராமானுஜர்.

“அங்கேயே நில்லும்…” நம்பிகளின் குரல் உயர்ந்து ஒலித்தது.சட்டென நின்றார் ராமானுஜர்.

“தனியாக வருமாறுதானே உம்மிடம் கூறினேன். அப்படியிருக்க இவர்களை ஏன் அழைத்துவந்தீர்?” அவருடைய குரலில் கோபம் கொப்பளித்தது.

“சுவாமி மன்னிக்க வேண்டும். தாங்கள்தான் தண்டும், பவித்திரமுமாக வரச்சொன்னீர்கள்.  அதன்படியே வந்துள்ளேன்”

“நீர் சொல்லுவது எமக்கு விளங்கவில்லையே…” குழப்பமானார் நம்பிகள்.

“இதோ இவரே என் தண்டு” முதலியாண்டானை நோக்கி விரலை நீட்டினார் ராமானுஜர். அடுத்ததாக கூரத்தாழ்வாரை சுட்டிக்காட்டி “இவர் எனது பவித்திரம்” என்றார்.

அவருடைய பதிலால், கோபத்திலிருந்து குளிர்ந்த நிலைக்கு மாறினார் நம்பிகள்.

“இவ்வுபதேசம் திருமால், திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஸ்ரீ ஆளவந்தார் வழியாக அடியேனுக்கு கிட்டியது. இப்பொழுது உமக்கும் கிடைக்கப்போகிறது. இதை உம்முடைய இறுதிக்காலத்தில் தகுந்த ஒருவருக்கு மட்டும் உபதேசிக்கலாம். என்னுடைய வார்த்தைகளை மீறினால் உமக்கு நரகம் நிச்சயம்” என்று சொல்லி ராமானுஜரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.

பின்னர் ‘ஓம் நமோ நாராயணா’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை சொல்லி அதன் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்தார். அனைத்தையும் ஆவலுடனும் கவனமாகவும் கேட்டுக்கொண்டார் ராமானுஜர்.

உபதேசம் முடிந்தது.

“உம்முடைய ஆர்வத்தை சோதிப்பதற்கே, மீண்டும் வருமாறு பலமுறை கூறினேன். சற்றும் சோர்வு கொள்ளாமல், பொறுமை இழக்காமல் நீர் மறுபடி மறுபடி வந்து நான் வைத்த பரீட்சையில் தேர்வாகிவிட்டீர்.” புன்னைகை பொங்க கூறினார் நம்பிகள்.

ராமானுஜர் அகம் மகிழ்ந்து அவரை வணங்கிவிட்டு தண்டு, பவித்திரம் சகிதமாக அவ்விடம் விட்டு புறப்பட்டார். நேரே அவர் சென்ற இடம், சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில்.

அப்பொழுது திருவிழா உற்சவம் அத்திருக்கோயிலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்விழாவிற்காக ஏராளமான மக்கள் அங்கே குழுமி இருந்தனர்.

கோயிலுக்குள்ளே நுழைந்த ராமானுஜர் கோபுரத்தின் உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார். முதலியாண்டானுக்கும், கூரேசருக்கும் ஒரே குழப்பம்.

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன