முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம் – 20

ஆதிசேஷனின் அவதாரம் – 20

டையவர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற ராமானுஜர், வைணவ பீடத்தின் தலைமைபொறுப்பிற்கு வரும்பொழுது வயது 33. இந்த இளம்வயதிலேயே பெரிய அறிவை பெற்றிருந்தார் ராமானுஜர். இதன் காரணமாக சீர்கெட்டுப் போயிருந்த கோயில் பராமரிப்பை நேரான பாதைக்கு அழைத்துவந்தார். நந்தவனம் சீரமைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டமாய் மாறியது. நிர்வாகிகளுக்கு தூய தமிழ் பெயர்களை சூட்டி, ஆளுக்குகொரு பணியாக பிரித்துக்கொடுத்தார். அரங்கனுக்குரிய விழாக்கள், உரிய நேரத்தில் நடத்தப்பட்டன. இன்றைக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ராமானுஜர் ஏற்படுத்தி வைத்த வழிமுறைகளின்படியே அனைத்து விஷயங்களும் நடக்கின்றன.

இதன்மூலம் ஆன்மிக உலகை உய்விக்க வந்தவர் மட்டுமல்லாமல், தலைசிறந்த நிர்வாகி என்பதையும் நிரூபித்தார் ராமானுஜர். இன்றைய நவீன உலகம் ‘நிர்வாக மேலாண்மை’ என்று பெயர் சூட்டி, கல்லூரிகளில் தனி பாடப்பிரிவாக வைத்துள்ள ஒரு விஷயத்தை, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒற்றை மனிதராக இருந்து சாதித்தவர் ராமானுஜர்.

திருப்பதி…

தாய்மாமனாகிய திருமலை நம்பிகளுக்கு ராமானுஜரிடமிருந்து செய்தி வந்திருந்தது, ஓலைச்சுவடியை படித்தவர் ஆழ்ந்த யோசனையுடன் நிமிர்ந்தார். மூளையின் தீவிர சிந்தனை கண்களில் தெரிந்தது.

‘உள்ளங்கை கொணர்ந்த நாயனாராகிப்போன கோவிந்தனை மீண்டும் திருத்தி அழைத்து வரவேண்டுமாமே… இது முடிகிற காரியமா? ஆனாலும் இது பற்றிய சிந்தனைகள் இல்லாமலா ராமானுஜர் இக்காரியத்தை என்னிடம் ஒப்படைத்திருப்பார்? என்னால் முடியும் என்று எண்ணியதால்தானே செய்தி அனுப்பியிருக்கிறார்’

வெகுநேர சிந்தனைக்குப் பிறகு, ‘முடியும்… நடத்திக்காட்டுவோம்’ என்கிற முடிவுக்கு வந்தார் திருமலை நம்பி. அன்றைக்கே கோவிந்தனை காண காளஹஸ்தி நோக்கி புறப்பட்டார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அந்த அதிகாலை வேளையில் சிவப்பழமாய் காட்சியளித்தார் கோவிந்தன். சுவர்ண விக்கிரகம் போல பிரகாசித்தது முகம். நெற்றியிலும், மேனியின் மற்ற இடங்களிலும்  அளவெடுத்து வரைந்ததாய் விபூதிப்பட்டைகள். கழுத்தில் சரம் சரமாய் தொங்கிய ருத்ராட்ச மாலைகள்.

கோவிந்தனும், சில சிவனடியார்களும் சிவ பூஜைக்காக நீர் எடுத்துவர புறப்பட்டனர். மற்றவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தாலும், கோவிந்தனின் மனதில் சிவனை பற்றிய சிந்தனைகளே வியாபித்திருந்தது. நடந்துகொண்டே இருந்தவரின் கால்களில் ஏதோ இடருவதைக்கண்டு குனிந்தார்.

ஓலைச்சுவடி ஒன்று கிடந்தது.

என்ன சுவடி இது…? யாருடையதாக இருக்கும்?

கையில் எடுத்து பிரித்து படித்தார். அதில் எழுதப்பட்டிருந்த ஆளவந்தாரின் ஸ்லோகங்கள் அவர் கண்களில் பதிந்து இதயத்தில் நுழைந்தது. படித்து முடித்ததும், ஒருவித பதற்றம் பற்றிக்கொள்வதை அவரால் உணர முடிந்தது.

‘ஏன் எனக்குள் இந்த பதற்றம்..?’

சட்டென கையை உதறினார். ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விடுவிடுவென அவ்விடம் விட்டு அகன்றார்.

வழி நெடுகிலும் ஏதேதோ யோசனைகள். இதுவரையிலும் தெளிந்த நீரோடையாய் இருந்த மனம், குழம்பிய குட்டையாய் மாறியிருந்தது. குடத்தில் நீர் எடுத்துக்கொண்டு மீண்டும் அதே வழியில் திரும்பினார். அந்த ஓலைச்சுவடி அங்கேயே கிடந்தது.

அதற்கருகில் வந்ததும் கால்கள் நகர மறுத்து நின்றன. மூளை அபாய சங்கை ஊதியது.

‘நிற்காதே… உடன் இங்கிருந்து புறப்படு.’

மூளையின் கட்டளையை புறந்தள்ளி, கீழ்ப்படிய மறுத்தன மற்ற உறுப்புகள்.

அந்த ஓலைச்சுவடியை மீண்டும் எடுத்தார் கோவிந்தன். சுற்றும் முற்றும் பார்த்தார்.

சற்று தொலைவில் மர நிழலில் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.

பெரியவரை நெருங்கிய கோவிந்தர் அதிர்ந்தார்.

அங்கே அமர்ந்திருந்தது… தாய்மாமன் திருமலை நம்பி.

அதை சற்றும் வெளிக்காட்டாமல் “நழுவிய பொருள் உங்களுடையதா?” என்றார்.

நாடகத்தை நடத்துபவரே திருமலை நம்பிகள்தானே.

“எங்கள் பொருள் நழுவக்கூடியதே அல்ல…” சொல்லிவிட்டு விஷமமாய் சிரித்தார் அவர்

கோவிந்தன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு அகன்றார்.

சில நாட்கள் கழிந்தன.

அன்றைக்கும் வழக்கம்போல் சிவபூஜைக்காகப் பூக்கொய்துவர புறப்பட்டார் கோவிந்தன். சற்று தொலைவிலுள்ள அந்த தோட்டத்திற்குள் நுழைந்து பூக்களை பறிக்க ஆரம்பித்தார்.

அதே தோட்டத்தின் ஒரு ஓரத்தில் தனது சீடர்களை அமரவைத்து திருவாய்மொழியை உபதேசம் செய்துகொண்டிருந்தார் திருமலை நம்பிகள். அவருடைய வியாக்கியானம் கோவிந்தனின் காதுகளை சென்றடைந்தது. ஓலைச்சுவடியை கண்ட பொழுது, எவ்வித மாற்றங்கள் அவரது உடலில் ஏற்பட்டதோ, அதே மாதிரியான ரசாயன மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. திருவாய்மொழி, கோவிந்தனின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கையிலிருந்த பூக்கூடையை சட்டென வீசிவிட்டு ஓடிச்சென்று திருமலை நம்பிகளின் பாதங்களில் விழுந்தார். மருமகன் மாறிவிட்டதை புரிந்துகொண்ட மாமா,  நடத்திய நாடகத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

“என்னை மன்னித்து விடுங்கள்…” நா தழுதழுத்த கோவிந்தனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டார் திருமலை நம்பிகள்.

“இவ்வளவு காலம் எம்பெருமானை நினையாது வீணடித்துவிட்டேனே…” புலம்பினார்.

திடீரென ஞாபகம் வந்தவராய், இடுப்பில் செருகி இருந்த காளஹஸ்தி நாதர் கோயில் சாவியையும், இலச்சினை மோதிரத்தையும் எடுத்து தன்னுடன் வந்திருந்த சிவனடியார்களிடம் கொடுத்தார்.

“இனி நான் வரப்போவதில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்றார் அவர்களை நோக்கி.

சிவனடியார்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “இவருக்கு என்ன ஆயிற்று..?” என்றவாறு வந்தவழியே நடக்க ஆரம்பித்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் காலஹஸ்தி நாதர் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், கோவிந்தனைத் தேடி வந்தார்கள்.

“நான்தான் வரவில்லை என்று கூறி அனுப்பினேனே. அப்புறமும் எதற்காக என்னை தேடி வருகிறீர்கள்?” என்றார்.

“சுவாமி… உங்களை அழைத்துச்செல்ல நாங்கள் வரவில்லை. ஒரு தகவலை சொல்லிவிட்டு செல்லவே வந்தோம். நேற்று இரவு எங்கள் கனவில் காஹஸ்திநாதன்  தோன்றி, நீங்கள் அவரை விட்டு பிரியப்போகிறீர்கள் என்கிற செய்தி சொல்லி மறைந்தார்.” விஷயத்தை கூறிவிட்டு, கோவிந்தனை வணங்கிய வண்ணம் அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.

ஸ்ரீரங்கத்தில், பெரிய நம்பிகளிடம் வைஷ்ணவ இரகசியங்களை உபதேசம் பெற்றுக்கொண்டிருந்த ராமானுஜருக்கு, கோவிந்தன் மனம் மாறிய செய்தி கிடைத்தது. அனைவரிடமும் தனது ஆனந்தத்தை பகிர்ந்துகொண்டார்.

“இந்த த்வயம், மந்திரங்களில் உயர்ந்தது. இதன் பெருமைகளை நான் உமக்கு விளக்குகிறேன்…”

பெரிய நம்பிகள் த்வயம் மந்திரத்தின் சிறப்புகளை ராமானுஜருக்கு எடுத்துரைத்தார்.

“நான் சொல்லியதுபோக இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று கற்றுக்கொள்ளும்” என்றார் பெரிய நம்பிகள்.

ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நோக்கி புறப்பட்டார்.

அரங்கன், உலக மக்களின் நலனுக்காக அங்கே ஒரு விளையாட்டை நடத்த காத்திருந்தான்.

 

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன