முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம் – 25

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
“என்ன சொல்கிறீர்கள்..?”
“ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் சொல்லிக்கொடுத்தார். ஆனால், ராமானுஜருக்கு கண்களாலேயே அனைத்தையும் உணரவைத்துவிட்டார். ஆகையால் எம்பெருமானாரின் கூற்றை ஆளவந்தாரின் உரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளை வியப்பாய் பார்த்தார் திருமலையாண்டான்.
அவருடைய பதில் திருமலையாண்டானின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இருவரும் புறப்பட்டு ராமானுஜரின் மடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
எவ்வித முகச்சுழிப்பும் இல்லாமல், எப்பொழுதும் போலவே இருவரையும் வணங்கி வரவேற்றார் ராமானுஜர்.
மீண்டும் திருவாய்மொழிப் பாடம் ஆரம்பமானது.
திருமலையாண்டான் விளக்க உரைகளை உதிர்க்க ஆரம்பித்தார். இடையில் ஒரு பாடலுக்கான விளக்கத்தை மாற்றிக் கூறினார் ராமானுஜர். ஆனாலும் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை திருமலையாண்டான். மாறாக அவரை ஆச்சர்யமாக பார்த்தார்.
“தாங்கள் இப்படி நோக்குவதற்கு என்ன காரணம்?”
“ஸ்ரீ ஆளவந்தாரிடம் பாடம் எதுவும் கேட்காமல், அவர் இப்படி உரைத்திருக்க வாய்ப்பில்லை என எவ்வாறு கூறுகிறீர்கள்!”
ராமானுஜர் மிகுந்த அடக்கத்துடன் “அடியேன் அவருக்கு ஏகலவ்யன்” என்றார்.
அப்பதிலை கேட்ட திருமலையாண்டான், “ஸ்ரீ ஆளவந்தாரிடம் கேட்கப்பெறாத விசேஷ அர்த்தங்களை இப்பொழுது கேட்கப் பெற்றேன்” என்றார்.
இப்படியாக திருவாய்மொழிப் பாடம் முடிந்தது.
உண்மையில் திருவாய்மொழிக்கான உரையை ராமானுஜருக்குக் கற்றுக்கொடுக்க வந்து, முடிவில் அவ்விடத்தில் சீடராகிப்போனார் திருமலையாண்டான். அம்மகிழ்வில், தனது புதல்வன் ‘சுந்தரத் தோளுடையானை’ ராமானுஜரின் சீடராக்கினார்.
அதே சமயம் ராமானுஜருக்கு, திருவாய்மொழி மேலிருந்த ஈடுபாட்டையும், சடகோபர் மேலிருந்த பக்தியையும் பாராட்டி ‘சடகோபன் பொன்னடி’ என்கிற திருநாமமும் சூட்டினார்.
திருக்கோஷ்டியூர் நம்பிகள் ஸ்ரீரங்கம் வரும் வேளையில் ராமானுஜருடன் தனியாகச் சென்று உரையாடுவது வழக்கம். அச்சமயத்தில் ‘எம்பெருமானைத் தவிரவேறு எதுவும் தஞ்சமல்ல’ என்கிற பொருள்படும் உயர்ந்த மந்திரத்தை சிஷ்யனுக்கு உபதேசிக்க குருவின் மனம் எண்ணியது. ஆனால் அதற்கான சரியான நேரம் மட்டும் வாய்க்கவில்லை. யாரேனும் ஒருவர் அருகில் இருந்த காரணத்தால், அவ்வுபதேசம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
ஒருமுறை யாரும் இல்லா நேரமாய் பார்த்து அம்மந்திரத்தை ராமானுஜருக்கு உபதேசித்தார் நம்பிகள். கூடவே, ‘யாருக்கும் இதை உபதேசிக்கக் கூடாது’ என்கிற கட்டளை வேறு.
அனைத்தையும் மனதினுள் கிரகித்துக்கொண்ட ராமானுஜர், நேரே சென்ற இடம் கூரேசனின் திருமாளிகை.
தனது குரு உள்ளே நுழைவதைக் கண்ட கூரேசன், உணவருந்தியதை பாதியில் விட்டுவிட்டு எழுந்து ஓடிவந்தார்.
“யாரொருவருக்கும் உபதேசிக்கக் கூடாது என்கிற ஆணையின் பேரில், திருக்கோஷ்டியூர் நம்பிகள் இவ்வர்த்தத்தை எமக்கு உபதேசித்தார். ஆனால் உம்மிடம் இதை உரைக்காமல் எம்மால் இருக்க முடியாது” என்று சொல்லி அம்மந்திரத்தின் பொருளை கூரேசனுக்கு அருளினார்.
தமக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை, தம்மைச் சார்ந்தவர்களுக்கு அது புண்ணியமாக மாறவேண்டும் என்கிற மனோபாவம் ராமானுஜரின் இதுபோன்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டு.

ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள ஊர் திருவெள்ளறை.
இங்கே வசித்துவந்தவன் வில்லி.
உறையூரை ஆட்சி செய்துவந்த அகளங்கன் எனும் அரசனிடம், அரசவை மல்லனாக பணியாற்றி வந்தான்.
தானுண்டு தன் பணி உண்டு என்றிருந்த வில்லியின் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்டாள் பொன்னாச்சி. அவளை கண்ட நொடியிலிருந்து காதல் நோய் வில்லியை ஆரத்தழுவியது.
பிரம்மன் மகிழ்ச்சியான வேளையில் பொன்னாச்சியை படைத்திருக்க வேண்டும். அழகும், அம்சமும் பொருந்தி பெயருக்கேற்றார் போல பொன் போன்று ஜொலித்தாள். அகண்டு விரிந்த அவளது விழிகளுக்குள் விழுந்த வில்லியை, யாராலும் வெளியே தூக்கிவிட முடியவில்லை. அவள் பின்னே சுற்றத் தொடங்கினான். ஒரு சமயத்தில் தனது காதலையும் அவளிடத்தில் வெளிப்படுத்தினான். உருண்டு திரண்ட உடற்கட்டோடு இருந்த வில்லியை அவளுக்கு பிடித்துப்போனதில் வியப்பேதுமில்லை.
அந்த காந்தக் கண்ணழகியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்துவந்தான்.

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன