முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 24

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 24

‘ஆகா… ராமானுஜரால் அனுப்பட்டவரா அவர்!’
உடனே ராமானுஜரை அணுகினார்.
மீண்டும் மன்னிப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.
ராமானுஜர், பெரியவரை நிதானமாய் நிமிர்ந்து பார்த்தார்.
“முதலியாண்டானை தவிர வேறு வேலையாள் எம்மிடம் இல்லை.உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு பதில் நானே உங்கள் வீட்டிற்கு சீதன வெள்ளாட்டியாக வருகிறேன்” என்றார்.
அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக ராமானுஜரின் முன் விழுந்தார் பெரியவர்.
“சுவாமி தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கதறினார்.
“முதலியாண்டானை திரும்பவும் அழைத்துக்கொள்வது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. அதை தீர்மானிக்க வேண்டியது அத்துழாயே. அவளிடம் உங்கள் விண்ணப்பத்தை தெரிவியுங்கள்” ராமானுஜரின் தீர்க்கமான பதில் பெரியவரை திகைக்க வைத்தது.
வீடு திரும்பியவர், அத்துழாயிடம் கெஞ்ச ஆரம்பித்தார்.
“அம்மா… என் மனைவி கூறியவைகளை மனதில் வைத்துக்கொள்ளாதே. தயவுசெய்து கருணை காட்டு…”
தன் மாமனார் நடந்துகொண்ட விதம் கண்டு அத்துழாய் பதறிப்போனாள். உடன் முதலியாண்டானை, ராமானுஜரிடமே திரும்பிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டாள்.
அவரும், அத்துழாயின் பேச்சுக்கு மதிப்பளித்து அவ்விடம் விட்டு புறப்பட்டார்.
மீண்டும் தன்னிடம் வந்துசேர்ந்த முதலியாண்டானுக்கு, அவரின் விருப்படியே ரகஸ்யார்த்தங்களை உபதேசித்தார்.
சில நாட்கள் கடந்தன.
திருக்கோஷ்டியூர் நம்பிகள் ஸ்ரீரங்கம் வந்திருந்தார். அரங்கனை வணங்கிவிட்டு, ஆளவந்தாரின் நெருங்கிய சீடரான திருமலையாண்டானை அழைத்துக்கொண்டு ராமானுஜரின் மடத்தை அடைந்தார்.
குரு தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்து, விரைவாக வந்தார் ராமானுஜர்.
“வரவேண்டும் சுவாமி… இந்த அடியவனை காண தாங்களே வந்தது என் பாக்கியமே…”
வணங்கினார்.
“நான் காரணமில்லாமல் வரவில்லை. அதுவும் திருமலையாண்டானுடன் வந்திருக்கிறேனே, அப்படியென்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கவே செய்யும்தானே…” புன்முறுவல் செய்தார் திருக்கோஷ்டியூர் நம்பிகள்.
ராமானுஜரின் முகத்தில் கேள்விக்குறி ஒன்று ஒட்டிக்கொண்டது.
“தாங்கள் காரணத்தை கூறினால் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.”
“உமக்கு, திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை விவரிப்பதற்கே திருமலையாண்டானை இங்கு அழைத்துவந்துள்ளேன்.” திருக்கோஷ்டியூர் நம்பிகள் கூறியதும், ராமானுஜரின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
“எல்லாம் என் பாக்கியம்…”
அன்றைக்கே திருவாய்மொழி உபதேசம் ஆரம்பமானது.
ஆளவந்தாரின் உரைகளை திருமலையாண்டான் சொல்ல, ஆர்வமுடன் கவனிக்க ஆரம்பித்தார் ராமானுஜர்.
‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து’ என்று தொடங்கும் பாடலுக்கு பொருள்கூறினார் திருமலையாண்டான்.
“கர்ப்பத்தில் இருந்தபொழுதே நான் உனக்கு அடிமை என்கிற ஞானத்தை உபதேசித்தாய். பின்னர் இவ்வுலகிற்கு வந்ததும் மாமிசமாகிய சிறையில் தள்ளிவிட்டாய். இதன்மூலம் நீ எனக்கு அளித்த ஞானத்தையும் அழித்துவிட்டாய்.”
இவ்வாறு பொருள் கூறிவிட்டு ராமானுஜரின் முகம் நோக்கினார் திருமலையாண்டான். அவரின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது.
“என்ன ஆயிற்று உமக்கு?”
“மன்னிக்கவும் தங்களுடைய பொருளில் எனக்கு உடன்பாடில்லை. இப்பாடலின் முன்னும் பின்னும் இருக்கும் பாடல்களில் பெருமானை உயர்த்திக் கூறிவிட்டு, நடுவில் உள்ள இப்பாடலில் மட்டும் அவரை குறை கூறியிருக்க வாய்ப்பில்லை” அடக்கத்துடன் தெரிவித்தார் அவர்.
“அப்படியென்றால் நீரே அதற்கு பொருள் கூறும்…” திருமலையாண்டானிடம் சற்றே கோபம் வெளிப்பட்டது.
“நான் அறியாமைக்கடலில் மூழ்கிவிட்டேன். நீ அங்கு வந்து என்னை ஆட்கொண்டு என் சிந்தையையும் இதயத்தையும் உன்பால் திருப்பினாய் என்பதுவே பொருளாக இருக்கவேண்டும்” என்றார் ராமானுஜர்.
“இப்படி இருக்க வாய்ப்பேயில்லை. இது விஸ்வாமித்திர சிருஷ்டி. ஸ்ரீ ஆளவந்தார் இவ்வாறு பொருள் கூறி நான் கேட்டதில்லை. நீர் கூறும் விளக்கங்கள் ஒப்புக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இதற்கு மேலும் எமக்கு உபதேசிக்க விருப்பமில்லை. நான் வருகிறேன்.” கோபத்தோடு அங்கிருந்து புறப்பட்டார் திருமலையாண்டான்.
உபதேசம் நிறுத்தப்பட்டதை அறிந்து மீண்டும் ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்த திருக்கோஷ்டியூர் நம்பிகள், திருமலையாண்டானிடம் நடந்தவைகளை கேட்டறிந்து கொண்டார்.
“நான் கூறிய பொருள் ஸ்ரீ ஆளவந்தார் எனக்கு உரைத்தது. அப்படியிருக்க, அது எப்படி தவறாக இருக்கமுடியும்?” என்றார்.
அதற்கு திருக்கோஷ்டியூர் நம்பிகள் கூறிய பதில் அவரை திடுக்கென நிமிர்ந்து பார்க்க வைத்தது.

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன