முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் / ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 23

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 23

புகுந்த வீட்டுக்குள் நுழைந்த அத்துழாய் நேரே தன் மாமியார் முன் நின்றாள்.
“பாவம்… இந்த வயதான காலத்தில் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள நீங்கள் மிகவும் சிரமப்படுவதை கேள்விப்பட்ட என் தந்தை, இந்த சீதன வெள்ளாட்டியை அனுப்பியுள்ளார்.”
தன் பின்னால் நின்ற முதலியாண்டானை கை நீட்டினாள்.
“இப்பொழுதாவது உன் பிறந்தவீட்டாருக்கு, என் கஷ்டம் புரிந்ததே… என்ற மாமியார், முதலியாண்டான் பக்கம் திரும்பி மேலும் கீழும் அவரை நோக்கினாள்.
“சுறுசுறுப்பாக வேலை பார்ப்பாயா?”
“அட… என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? பார்க்கத்தானே போகிறீர்கள் என் பணியின் வேகத்தை…” அடக்கமாய் சொன்னார் முதலியாண்டான்.
“சரி… வீடு முழுவதும் சுத்தம் செய்…” அவள் கட்டளையிட்டாள்.
முதலியாண்டான் செயலில் இறங்கினார்.
ஒரு வேலையா? இரு வேலையா? வீட்டின் ஒட்டுமொத்த வேலையும் அவர் தலையில் விழுந்தது.
சமைப்பது, பரிமாறுவது, பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, தோட்டங்களை சுத்தம் செய்வது, பூப்பறித்து பூஜைக்கு மாலையாக்குவது என இப்பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது.
காலை எழுந்தது முதல் நள்ளிரவு படுக்கும்வரைமுதலியாண்டானின் வேலை நீடித்துக்கொண்டே இருக்கும். இதற்காக அவரிடம் எவ்வித சலிப்போ, சோர்வோ துளியும் தென்படவில்லை. தன்னுடைய குருவின் மகளுக்காகவே இதை செய்கிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் மேலோங்கி காணப்பட்டது.
மாதங்கள் ஓடின. அன்றைய தினம், அத்துழாயின் வீட்டிற்கு சில வித்வான்கள் வந்திருந்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் ராமாயண உபன்யாசம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
முதலியாண்டான் தன் பணிகளுடன் சேர்த்து உபன்யாசத்தையும் கவனிக்க ஆரம்பித்தார். அதில் சில இடங்களில் அர்த்தங்கள், அனர்த்தங்களாக மாறிவந்தன. ராமச்சந்திர மூர்த்தியின் கல்யாண குணங்கள் குறைத்துச் சொல்லப்பட்டன.
இதைக்கேட்ட முதலியாண்டானுக்கு கண்கள் கலங்கின.
‘இப்படி தப்பும் தவறுமாகவா எம்பெருமானின் குணச்சிறப்புகள் விவரிக்கப்படவேண்டும்?’ நினைக்கும் பொழுதே அவரது நெஞ்சம் விம்மியது. தன்னிச்சையாக கண்ணீர் பெருக்கெடுத்தது.
உபன்யாசத்தில் மூழ்கியிருந்த அவ்வீட்டின் பெரியவர், எதேச்சையாக இதை கவனித்தார்.
‘அய்யோ பாவம்… இந்த பிள்ளை, வேலை பளு தாங்காமல் அழுகிறானே…’
“அப்பா… வேலை அதிகமாக இருந்தால் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு செய்.” என்றார்.
அதற்கு முதலியாண்டானோ, “அய்யா உங்களிடத்தில் இருக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். நான் அழுவது வேலைப் பளுவால் அல்ல. வால்மீகியால் சொல்லப்பட்ட, ராமச்சந்திர மூர்த்தியின் கல்யாண குணங்களை குறைவாகவும் தவறாகவும் பொருள்கொண்டு கூறுகிறார்களே அதை நினைத்துத்தான் கண்ணீர் வடிக்கிறேன்” என்றார்.
முதலியாண்டானின் பதில் வித்வான்களை கோபப்பட வைத்தது.
“வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரனுக்கு, ராமாயணம் பற்றி என்ன தெரியும்?”
“தாங்கள் அனுமதியளித்தால், இதற்கு சரியான விளக்கத்தை கூறுகிறேன்.”
“சரி… அதையும் பார்த்துவிடுவோம்” எகத்தாளமாய் கூறினார் அந்த வித்வான்.
முதலியாண்டான் ஆரம்பித்தார். நேரம் செல்லச்செல்ல அந்த வித்வான்கள் உட்பட அனைவரும், அவருடைய உரையில் மெய் மறக்க ஆரம்பித்தார்கள்.
நெடு நேரம் கழித்து தனது உரையை முடித்தார் முதலியாண்டான். எதிரே அமர்ந்திருந்தவர்களின் கண்களில் அவர்களை அறியாமலேயே கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
“அப்பனே… நீ யார் என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் இவ்வளவு அழகாக விவரிப்பதை பார்த்தால் நாங்கள் வித்வான்கள் அல்ல, நீதான் வித்வான்” எனக் கூறி வீட்டுப் பெரியவர் பக்கம் திரும்பி, “இத்தனை ஞானமுள்ளவரை வீட்டுப்பணிகளில் ஈடுபட வைக்கலாமா?” என்றார்.
பதறிப்போன பெரியவர் “உன்னைப்பற்றி எதுவும் தெரியாமல் இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டேன். தயவுசெய்து மன்னித்துவிடு. மேற்கொண்டு இங்கிருந்து வீட்டு வேலைகள் ஏதும் செய்யவேண்டாம். உன்னிடத்திற்கே புறப்பட்டுவிடு. ஒரு மகா வித்வானை வேலை வாங்கிய பாவத்திற்கு நாங்கள் ஆளாகிவிட்டோமே” என்று வருந்தினார்.
“மன்னிக்கவும், தாங்கள் சொல்லி நான் இங்கு வரவில்லை. என்னை அனுப்பியவர் சொன்னால் மட்டுமே இங்கிருந்து புறப்பட முடியும்” முதலியாண்டானிடம் இருந்து தீர்மானமாய் பதில் வந்தது.
பெரியவர் உடனே புறப்பட்டு பெரிய நம்பிகளை சந்தித்தார்.
“சீதன வெள்ளாட்டியாக ஒரு பண்டிதரை அனுப்பியுள்ளீர்கள். இது தெரியாத நாங்கள், அவரிடம் கடுமையாக வேலை வாங்கிவிட்டோம். எங்களை மன்னித்தருள வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவரை திரும்ப அழைத்துக்கொள்ளவும் வேண்டும்” என்று மன்றாடி கேட்டுக்கொண்டார்.
ஆனால் பெரிய நம்பிகளோ “இதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. முதலியாண்டானை சீதன வெள்ளாட்டியாக அனுப்பியவர் வேறொருவர். அவரிடம்தான் கோரிக்கை வைக்கவேண்டும்” என்றார்.
“யாராக இருந்தாலும் சொல்லுங்கள் அய்யா… நான் அவரை சந்திக்கிறேன்.”
“ராமானுஜர்…”
பெயரை கேட்டதும் அதிர்ந்துபோனார் பெரியவர்.

அவதாரம் தொடரும்

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன